என் மலர்
இந்தியா

பாராளுமன்றத்தில் இன்றும் மத்திய மந்திரியை கண்டித்து தி.மு.க. எம்.பி.க்கள் அமளி- கருப்பு உடை அணிந்து போராட்டம்

- மத்திய மந்திரியை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் தி.மு.க. போராட்டம் நடத்தியது.
- தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக விவாதம் நடத்த கோரி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் விதி 267-கீழ் நோட்டீஸ் அளித்திருந்தனர்.
புதுடெல்லி:
பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-வது அமர்வு நேற்று தொடங்கியது. மத்திய அரசின் புதிய கல்வி கொள்கை தொடர்பாக மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதானுக்கும், தி.மு.க. எம்.பி.க்களுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.
நாகரீகம் இல்லாதவர்கள் என்று தர்மேந்திர பிரதான் பேசியதால் தி.மு.க. எம்.பி.க்கள் எதிர்ப்பு குரல் எழுப்பி கடும் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து தர்மேந்திர பிரதான் சர்ச்சைக்குரிய அந்த கருத்தை திரும்ப பெறுவதாக அறிவித்தார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் மத்திய மந்திரிக்கு கண்டனம் தெரிவித்தார். தன்னை மன்னர் என நினைத்து ஆணவத்துடன் பேசும் அவருக்கு நாவடக்கம் வேண்டும் என்று தெரிவித்தார். மத்திய மந்திரியை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் தி.மு.க. போராட்டம் நடத்தியது.
இந்த நிலையில் பாராளுமன்றத்தில் இன்றும் மும்மொழிக் கொள்கை விவகாரம் எதிரொலித்தது. மத்திய மந்திரிக்கு எதிராக தி.மு.க. எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர்.
மக்களவை காலை 11 மணிக்கு கூடியதும் மத்திய மந்திரி தர்மேந்திர பிரதானுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கருப்பு உடை அணிந்து வந்திருந்த தி.மு.க. எம்.பி.க்கள் கோஷங்களை எழுப்பினார்கள்.
மேலும் தி.மு.க கூட்டணி கட்சி எம்.பி.க்களும் கோஷங்களை எழுப்பினர். தர்மேந்திர பிரதான் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இதனால் அவையில் கூச்சல்-குழப்பம் நிலவியது. தி.மு.க. கூட்டணி கட்சி எம்.பி.க்களை அமைதியாக இருக்கும்படி சபாநாயகர் ஓம்பிர்லா கேட்டுக்கொண்டார்.
ஆனால் தி.மு.க. எம்.பி.க்கள் தொடர்ந்து மத்திய மந்திரியை கண்டித்து கோஷமிட்டனர். இந்த அமளிக்கு இடையே அவை நடவடிக்கைகளை சபாநாயகர் தொடங்கினார்.
மேல்-சபையிலும் இன்று அமளி ஏற்பட்டது. தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக விவாதம் நடத்த கோரி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் விதி 267-கீழ் நோட்டீஸ் அளித்திருந்தனர். இதற்கு அவைத் தலைவர் அனுமதி மறுத்தார். இதனால் தி.மு.க. எம்.பி.க்கள் கோஷங்களை எழுப்பினர்.
அவையின் மையப் பகுதிக்கு சென்று தி.மு.க மற்றும் கூட்டணி எம்.பி.க்கள் கோஷங்களை எழுப்பினர். அவர்களை இருக்கைக்கு செல்லுமாறு அவையை நடத்திய துணைத் தலைவர் ஹரிவன்ஷ் கேட்டுக் கொண்டார்.
ஆனால் தி.மு.க. எம்.பி.க்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். இதனால் கூச்சல், குழப்பம் நிலவியது. இதையடுத்து மேல்-சபையை மதியம் 12 மணி வரை ஒத்திவைப்பதாக அவைத் தலைவர் அறிவித்தார்.
முன்னதாக பாராளுமன்ற வளாகத்தில் மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதானை கண்டித்து தி.மு.க. கூட்டணி எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கருப்பு உடை அணிந்து ஆர்ப்பாட்டம் செய்தனர். மும்மொழி கொள்கைக்கு எதிராகவும், தர்மேந்திர பிரதானுக்கு எதிராகவும் பதாகைகளை ஏந்தி முழக்கங்களை எழுப்பினார்கள். மத்திய மந்திரி மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் குரல் எழுப்பினார்கள்.
கனிமொழி, வைகோ, திருமாவளவன், ஆ.ராசா, திருச்சி சிவா உள்ளிட்ட எம்.பி.க்கள் கலந்து கொண்டனர்.
போராட்டத்துக்கு பிறகு கனிமொழி எம்.பி. நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய நிதியை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது. அவர்கள் தமிழ்நாட்டு குழந்தைகளின் எதிர்காலத்தை சீரழிக்கின்றனர். குழந்தைகளுக்கு வர வேண்டிய நிதியை நிறுத்தி வைக்க அவர்களுக்கு எந்த உரிமையும் இல்லை. நேற்று அவர் (தர்மேந்திர பிரதான்) மிகவும் மோசமான முறையில் பதில் அளித்தார். நாங்கள் நேர்மையற்றவர்கள் என்றும், தமிழ்நாட்டு மக்கள் நாகரீகம் இல்லாதவர்கள் என்றும் கூறினார். இது முற்றிலும் ஜனநாயகத்துக்கு விரோதமானது.
தர்மேந்திர பிரதான் பேசியதை அவைக் குறிப்பில் இருந்து நீக்கினால் மட்டும் போதாது. அவர் அவையில் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். அவருக்கு எதிராக மக்களவையில் உரிமை மீறல் நோட்டீஸ் வழங்கி உள்ளோம். அதை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள அவைத் தலைவரை வலியுறுத்துவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
திருச்சி சிவா எம்.பி. கூறும்போது, ' நாங்கள் மும்மொழி கொள்கையை எதிர்க்கிறோம். அதை யாரும் எங்கள் மீது திணிக்க முடியாது' என்றார்.