search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    டாக்டர்கள் ஸ்டிரைக் எதிரொலி- நாடு முழுவதும் மருத்துவ சேவை பாதிப்பு
    X

    டாக்டர்கள் ஸ்டிரைக் எதிரொலி- நாடு முழுவதும் மருத்துவ சேவை பாதிப்பு

    • பெண் டாக்டர் கொலைக்கு நீதி வேண்டும், உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று கோஷங்களை எழுப்பினர்.
    • சென்னை, கோவை, மதுரை, நெல்லை என மாநிலம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

    புதுடெல்லி:

    மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் பயிற்சி பெண் டாக்டர் கற்பழித்து கொலை செய்யப்பட்டார்.

    ஆஸ்பத்திரியின் 3-வது மாடியில் உள்ள கருத்தரங்க கூடத்தில் அவர் பிணமாக கிடந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இதுதொடர்பாக சஞ்சய் ராய் என்பவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள். இவ்வழக்கை சி.பி.ஐ விசாரித்து வருகிறது.

    பெண் டாக்டர் கற்பழித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தையடுத்து நாடு முழுவதும் பயிற்சி டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக மேற்கு வங்காளத்தில் போராட்டம் தீவிரமடைந்துள்ளதால் அங்கு மருத்துவ சேவை பாதிக்கப்பட்டு உள்ளது.

    இதற்கிடையே பெண் டாக்டர் கொலையை கண்டித்து இந்திய மருத்துவ சமூகம் இன்று ஒரு நாள் நாடு முழுவதும் வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்தது.

    இன்று காலை 6 மணி முதல் நாளை காலை 6 மணி வரை டாக்டர்கள் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என்றும், அவசர சிகிச்சை மட்டும் வழக்கம்போல செயல்படும். விருப்ப அறுவை சிகிச்சை பணிகள் நடைபெறாது.

    வழக்கமான புறநோயாளிகள் பிரிவு மூடப்படும் என்றும் இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்தது. இப்போராட்டத்தில் அகில இந்திய மருத்துவ மாணவர் சங்கம், உறையிட டாக்டர்கள் சங்க கூட்டமைப்பு உள் ளிட்ட மருத்துவ சங்கங்களும் இணைந்துள்ளன.

    இந்திய மருத்துவ சங்கம் அறிவித்தப்படி நாடு முழுவதும் இன்று டாக்டர்களின் 24 மணி நேர வேலைநிறுத்த போராட்டம் காலை 6 மணிக்கு தொடங்கியது. ஆஸ்பத்திரியில் உள்ள புறநோயாளிகள் பிரிவுகள் மூடப்பட்டன.

    பல்வேறு மாநிலங்களில் டாக்டர்கள் பணிக்கு வராமல் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் ஆர்ப்பாட்டம், தர்ணா, பேரணி உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர். பெண் டாக்டர் கொலைக்கு நீதி வேண்டும், உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று கோஷங்களை எழுப்பினர்.

    மேற்கு வங்காளத்தில் டாக்டர்களின் போராட்டம் தீவிரமாக நடந்தது. கொல்கத்தாவில் உள்ள நூற்றுக்கணக்கான டாக்டர்கள் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கொல்கத்தா முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

    சம்பவம் நடந்த ஆர்.ஜி.கர் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி முன்பு போலீசார் குவிக்கப்பட்டு கண்காணிப்பில் ஈடுபட்ட னர். இதேபோல் டெல்லி, சண்டிகர், பெங்களூரு உள்ளிட்ட முக்கிய நகரங்களில் போராட்டம் நடந்தது.

    தமிழ்நாட்டில் டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை, கோவை, மதுரை, நெல்லை என மாநிலம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

    நாடு முழுவதும் டாக்டர்களின் வேலைநிறுத்த போராட்டத்தால் மருத்துவ சேவை கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக வந்த நோயாளிகள் கடும் அவதி அடைந்தனர். டாக்டர்கள் இல்லாததால் புறநோயாளிகள் பலர் சிகிச்சை பெற முடியாமல் திரும்பி சென்றனர். அவசர சிகிச்சை பிரிவு மட்டும் வழக்கம்போல் இயங்கின.

    இந்த நிலையில் இந்திய மருத்துவ சங்கம் 5 முக்கியக் கோரிக்கைகளை முன் வைத்துள்ளது. அவை வருமாறு:-

    1. ஆர்.ஜி.கர் ஆஸ்பத்திரியில் 36 மணிநேர பணி மற்றும் ஓய்வெடுக்க பாதுகாப்பான இடங்கள் இல்லாமல் இருந்துள்ளது. எனவே உறைவிட மருத்துவர்களின் பணி மற்றும் வாழ்விடச் சூழல்கள் மேம்படுத்தப்பட வேண்டும். குறிப்பாக 36 மணி நேர பணி என்பதில் மாற்றம் தேவை.

    2. சுகாதார பணியாளர்கள் மீதான வன்முறைகளைத் தடுக்க நாடு தழுவிய அளவில் ஒரு சட்டம் இயற்ற வேண்டும். 25 மாநிலங்களில், டாக்டர்கள் மற்றும் ஆஸ்பத்திரிகள் மீதான தாக்குதலுக்கு எதிராக சட்டங்கள் உள்ளன. ஆனால், இதுவரை தண்டனைகள் வழங்கப்படவில்லை. சுகாதார சேவை பணியாளர்கள் மற்றும் மருத்துவ நிறுவனங்கள் (வன்முறை தடுப்பு மற்றும் சொத்துகள் சேதம்) மசோதாவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

    3. பெண் டாக்டர் கொலையில் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் வழக்கு விசாரணை முடிக்கப்பட்டு குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனை வழங்க வேண்டும். ஆர்.ஜி. கர் ஆஸ்பத்திரியை சூறையாடியவர்களை கண்டுபிடித்து உரிய தண்டனை வழங்க வேண்டும்.

    4. விமான நிலையங்களில் இருப்பது போல் ஆஸ்பத்திரிகளில் பாதுகாப்பு நெறிமுறைகள் வகுக்க வேண்டும். ஆஸ்பத்திரிகளை கட்டாய பாதுகாப்பு உரிமைகளுடன் பாதுகாப்பான மண்டலங்களாக அறிவிக்க வேண்டும். குறைந்தபட்சம் பெரிய மருத்துவமனைகளில் மட்டுமாவது பாதுகாப்பு நெறிமுறைகள் கடைபிடிக்கப்பட வேண்டும். கண்காணிப்பு கேமராக்கள், பாதுகாப்புப் பணியாளர்கள் மற்றும் நெறிமுறைகள் ஆகியவற்றைப் பின்பற்றலாம்.

    5. பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு இழைக்கப்பட்ட கொடுமைக்கு ஏற்ப உரிய மற்றும் கண்ணியமான இழப்பீடு வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

    இந்த 5 கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று டாக்டர்கள் நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    இதற்கிடையே பெண் டாக்டர் கொலை செய்யப்பட்ட ஆர்.ஜி.கர் ஆஸ்பத்திரி மீது தாக்குதல் நடத்தி சூறையாடிய சம்பவத்தில் 30 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

    Next Story
    ×