search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கேரளாவில் மீண்டும் நடந்த கொடூரம்- தெருநாய் கடித்து குதறியதில் மாற்று திறனாளி மாணவன் உயிரிழப்பு
    X

    நிஹால் நிஷாத்

    கேரளாவில் மீண்டும் நடந்த கொடூரம்- தெருநாய் கடித்து குதறியதில் மாற்று திறனாளி மாணவன் உயிரிழப்பு

    • கழுத்து, இதயம், இடுப்பு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக சிறுவன் உயிரிழந்து இருப்பது தெரிய வந்தது.
    • கேரளாவில் சுமார் 3 லட்சம் தெருநாய்கள் இருப்பதாக கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் சிறுவர்கள், குழந்தைகள் மற்றும் பெண்களை தெருநாய்கள் கடித்து குதறும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வந்தது.

    இந்த நிலையில் கண்ணூர், முழப்பிலாங்காடு பகுதியை சேர்ந்த 11 வயதான மாற்று திறனாளி மாணவன் நிஹால் நிஷாத் நேற்று முன்தினம் விளையாடுவதற்காக வீட்டில் இருந்து வெளியே சென்றார். அதன்பின்பு நீண்ட நேரமாகியும் சிறுவன் வீட்டிற்கு திரும்பவில்லை.

    இதனால் உறவினர்கள் அவரை தேடி சென்றனர். பல இடங்களில் அவரை தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த நிலையில் நிஹால் நிஷாத், அப்பகுதியில் உள்ள சாலையோரம் படுகாயங்களுடன் மயங்கி கிடப்பதை ஊர் மக்கள் பார்த்தனர். அவர்கள் சிறுவனை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு சிறுவனை பரிசோதித்த டாக்டர்கள், அவனை தெருநாய் கடித்து குதறி இருப்பதாக தெரிவித்தனர். இதில் கழுத்து, இதயம், இடுப்பு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக சிறுவன் உயிரிழந்து இருப்பது தெரிய வந்தது.

    இதற்கிடையே தகவல் அறிந்து ஆஸ்பத்திரிக்கு வந்த நிஹால் நிஷாத்தின் உறவினர்கள், சிறுவனின் உடலை பார்த்து கதறி அழுதனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இறந்துபோன சிறுவனின் தந்தை வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். அவருக்கு மகன் இறந்த தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அவர் வெளிநாட்டில் இருந்து ஊர் திரும்பிய பின்னரே சிறுவனின் உடல் அடக்கம் நடக்கும் என்று உறவினர்கள் தெரிவித்தனர்.

    கண்ணூர் சிறுவன் நிஹால் நிஷாத் தெருநாய் கடித்து இறந்தது குறித்து குழந்தைகள் நல கமிஷனுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதற்கு கண்டனம் தெரிவித்த அவர்கள், இச்சம்பவம் குறித்து மாவட்ட பஞ்சாயத்து நிர்வாகத்திடம் அறிக்கை கேட்டுள்ளனர்.

    தெருநாய்கள் கடித்து நிஹால் நிஷாத் பலியான பகுதியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பும் இதுபோல 2 குழந்தைகளை தெருநாய்கள் கடித்த சம்பவம் நடந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக அந்த 2 குழந்தைகளும் படுகாயங்களுடன் தப்பிவிட்டன. இப்போது நிஹால் நிஷாத் நாய் கடித்து இறந்திருப்பதற்கு சமூக ஆர்வலர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    கேரளாவில் சுமார் 3 லட்சம் தெருநாய்கள் இருப்பதாக கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. இதில் சுமார் 32 ஆயிரம் நாய்களுக்கு மட்டுமே கருத்தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் கேரளாவில் தெருநாய்களின் பெருக்கம் அதிகரித்து கொண்டே செல்கிறது.

    இதனால் மனித உயிர்கள் பாதிக்கப்படுவதை தடுக்க விலங்குகள் நல சட்டத்தில் திருத்தம் கொண்டுவர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர். நாய்களுக்கு கருத்தடை செய்தால் மட்டும் போதாது அவற்றின் தொல்லையை கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    Next Story
    ×