search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    சாலை வசதி இல்லாததால் மகனின் உடலை 8 கி.மீ. சுமந்து சென்ற தந்தை
    X

    சிறுவன் உடலை தந்தை சுமந்து சென்ற காட்சி.

    சாலை வசதி இல்லாததால் மகனின் உடலை 8 கி.மீ. சுமந்து சென்ற தந்தை

    • சின்ன கொனேலா மலை அடிவாரம் வரை ஆம்புலன்சில் உடலை கொண்டு சென்றனர்.
    • இரண்டு மலைகள் வழியாக சுமார் 3 மணி நேரம் மகன் உடலை சுமந்தபடி அவரது மலை கிராமத்தை அடைந்தனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் ஏ.எஸ்.ஆர். மாவட்டத்தில் சின்ன கொனேலா என்ற மலை கிராமம் உள்ளது. அடிவாரத்தில் இருந்து 8 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள இந்த கிராமத்திற்கு சாலை வசதி இல்லை.

    இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் கோதையா இவருடைய மனைவி சீதா. தம்பதியின் 2-வது மகன் ஈஸ்வர ராவ் (வயது 2½). கோதையா தனது மனைவி குழந்தைகளுடன் விஜயநகரம் பகுதியில் உள்ள செங்கல் சூளையில் வேலை செய்து வந்தார்.

    இந்த நிலையில் அவருடைய மகன் ஈஸ்வரராவுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் தனியார் மருத்துவமனையில் குழந்தைக்கு சிகிச்சை அளித்தனர். அங்கு சிறுவன் பரிதாபமாக இறந்தான். தனியார் ஆம்புலன்ஸ் மூலம் சிறுவன் உடலை எடுத்துச் சென்றனர்.

    சின்ன கொனேலா மலை அடிவாரம் வரை ஆம்புலன்சில் உடலை கொண்டு சென்றனர். அங்கு சிறுவன் உடலை இறக்கி வைத்து விட்டு ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சென்று விட்டனர்.

    அப்போது இருட்ட தொடங்கியது. அவர்களால் மலை கிராமத்துக்கு நடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. வேறு வழியின்றி கோதையா அவருடைய மனைவி சீதா இருவரும் மலை அடிவாரத்தில் தனது மகன் உடலுடன் தங்கி இருந்தனர்.

    மறுநாள் காலையில் கோதையா தனது மகன் உடலை சுமந்தபடி நடக்கத் தொடங்கினார். இரண்டு மலைகள் வழியாக சுமார் 3 மணி நேரம் மகன் உடலை சுமந்தபடி அவரது மலை கிராமத்தை அடைந்தனர். அங்கு சிறுவன் உடலுக்கு இறுதி சடங்குகளை செய்தனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரிதாபத்தை ஏற்படுத்தியது. மலை கிராமத்தில் தற்போது வேலைவாய்ப்பு எதுவும் இல்லாமல் பழங்குடியின மக்கள் தவித்து வருகின்றனர்.

    அவர்கள் எளிதில் நகரப் பகுதிகளுக்கு வேலைக்கு சென்று வர முடியவில்லை. உடல்நிலை குறைவு மற்றும் பிரசவ காலங்களில் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள்.

    மலை கிராமத்திற்கு சாலை வசதி ஏற்படுத்தி தரவேண்டும் என மலைகிராம மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    Next Story
    ×