search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    வெளிநாட்டில் முதல் ஐ.ஐ.டி.: எங்கு அமைகிறது தெரியுமா?
    X

    வெளிநாட்டில் முதல் ஐ.ஐ.டி.: எங்கு அமைகிறது தெரியுமா?

    • ஐஐடி சென்னையின் வளாகத்தை அமைப்பதற்கான ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
    • புதிய ஐஐடியில், வரும் அக்டோபர் மாதத்திலிருந்து கல்விக்கான திட்டங்கள் தொடங்கி வைக்கப்படும்.

    தொழில்நுட்ப கல்வியில் இந்தியாவிலேயே தலைசிறந்து விளங்கும் இந்திய தொழில்நுட்ப கழகம் (IIT) உலகப்புகழ் வாய்ந்தது.

    இந்நிறுவனத்தின் முதல் அயல்நாட்டு வளாகம் குறித்து இந்திய வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

    இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், தான்சானியாவிற்கு சென்றிருக்கிறார். கிழக்கு ஆப்பிரிக்காவின் கடற்கரை பகுதியில் உள்ள தான்சானியா தீவுக்கூட்டமான சான்சிபாரில், ஜெய்சங்கர் மற்றும் சான்சிபார் அதிபர் ஹுசைன் அலி முவின்யி ஆகியோர் முன்னிலையில் இந்தியாவின் கல்வி அமைச்சகம், ஐஐடி மெட்ராஸ் மற்றும் சான்சிபாரின் கல்வி மற்றும் தொழில் பயிற்சி அமைச்சகம் ஆகியோருக்கிடையே ஐஐடி மெட்ராஸின் வளாகத்தை அமைப்பதற்கான ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) நேற்று கையெழுத்தானது.

    இந்த வளாகம், இந்தியாவிற்கும் தான்சானியாவிற்கும் இடையிலான நீண்டகால நட்பை பிரதிபலிக்கிறது. ஆப்பிரிக்கா மற்றும் உலகளாவிய தெற்கில் உள்ள மக்களுடன் நல்லுறவுகளை உருவாக்குவதில் இந்தியா கவனம் செலுத்துவதையும் இதன் மூலம் இந்தியா நினைவூட்டுகிறது.

    இரு நாடுகளுக்கும் இடையிலான மூலோபாய கூட்டுறவை அங்கீகரித்து, சான்சிபாரில் ஐஐடி மெட்ராஸின் வளாகத்தை அமைப்பதன் மூலம், இரு தரப்பிற்கான கல்வி கூட்டுறவு முறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஐஐடியில், வரும் அக்டோபர் மாதத்திலிருந்து கல்விக்கான திட்டங்கள் தொடங்கி வைக்கப்படும்.

    இவ்வாறு அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

    ஐஐடி கல்வி நிறுவனம், தற்போது இந்தியா முழுவதும் 23 இடங்களில் இயங்கி வருகிறது.

    "உயர் செயல்திறன் கொண்ட இந்தியப் பல்கலைக்கழகங்கள் மற்ற நாடுகளில் வளாகங்களை அமைக்க ஊக்குவிக்கப்படும்" என்று தேசிய கல்விக் கொள்கையில் பரிந்துரைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×