search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    அங்கு ஆட்குறைப்பு; இங்கு ஊதியம் மிக குறைவு - NRI ஊழியர்களின் புது சிக்கல்
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    அங்கு ஆட்குறைப்பு; இங்கு ஊதியம் மிக குறைவு - NRI ஊழியர்களின் புது சிக்கல்

    • அமெரிக்காவில் 2022 இறுதியில் இருந்தே ஆட்குறைப்பு தொடங்கியது
    • 50 சதவீத ஊதிய குறைப்புக்கு முன்வந்தாலும் பணி கிடைப்பது கடினமாக உள்ளது

    கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக அமெரிக்காவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப மற்றும் மென்பொருள் நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன.

    2022 இறுதியில் தொடங்கி, டெஸ்லா, எக்ஸ், மெட்டா, கூகுள், அமேசான், மைக்ரோசாப்ட் உட்பட பல நிறுவனங்கள் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட பணியாளர்களை நீக்கின.

    உலகெங்கும் இருந்து அந்நிறுவனங்களில் பணியாற்ற சென்ற ஊழியர்களுக்கு வேறு வேலை கிடைக்காததால் விசா காலம் நிறைவடைந்து அமெரிக்காவில் இருந்து வெளியேறும் நிலை ஏற்பட்டது.

    இந்தியாவிலிருந்தும் அவ்வாறு பணியாற்ற சென்று ஆட்குறைப்பு நடவடிக்கையில் பணியிழந்தவர்களில் பலர் மீண்டும் தாயகம் திரும்பினர்.

    ஆனால், அவர்களுக்கு புது சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    2023ல் இந்தியாவில் தகவல் தொழில்நுட்ப மற்றும் மென்பொருள் நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கையை தொடங்கி விட்டன.

    இங்கு பணியிழக்கும் ஊழியர்கள் ஊதியம் குறைந்தாலும், வேறு வேலை கிடைத்தால் போதும் எனும் முடிவில் கிடைக்கும் நிறுவனங்களில் உடனடியாக பணியில் சேர்கின்றனர்.

    அமெரிக்காவிலிருந்து வரும் இந்திய ஊழியர்கள் பெற்ற ஊதியத்துடன் ஒப்பிட்டால் இங்கு பணியில் இருப்பவர்களுக்கும், வேலையிழப்பினால் குறைந்த சம்பளத்தில் வேலைக்கு வருபவர்களுக்கும் நிறுவனங்கள் வழங்க வேண்டிய ஊதியம் மிகக் குறைவு.

    எனவே, அங்கிருந்து வருபவர்களுக்கு தகுதி இருந்தும் வேலை கிடைப்பது கடினமாக உள்ளது.

    அமெரிக்காவுடன் ஒப்பிட்டால் தகவல் தொழில்நுட்ப துறையில் காலியிடங்கள் மிக குறைவாக உள்ளதாகவும், ஒரே பணிக்கு 100க்கும் மேற்பட்ட திறமை வாய்ந்த ஊழியர்கள் விண்ணப்பிக்கும் நிலை ஏற்பட்டு உள்ளதாகவும் மனிதவள நிபுணர்கள் தெரிவித்தனர்.

    சுமார் 50 சதவீதம் வரை ஊதியத்தை குறைத்து கொள்ள அவர்கள் முன்வந்தாலும், மீண்டும் பணி கிடைப்பதே கடினமாகி வருகிறது.

    அங்கும் வேலை இழந்து, இங்கும் வேலை கிடைக்காமல், பல வருட சேமிப்புகளும் நாளுக்கு நாள் கரைந்து அவர்களின் நிலை நலிவடைந்து வருகிறது.

    2024-ஆம் வருடத்திலும் உலகளாவிய பொருளாதார மந்தநிலை நீடித்தால், மேலும் பல சாஃப்ட்வேர் துறை ஊழியர்கள் பணி இழக்கும் அபாயம் ஏற்படலாம் என பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

    Next Story
    ×