என் மலர்
இந்தியா
பொது சிவில் சட்டம் வரைவு தயாரிக்க ஓய்வுபெற்ற சுப்ரீம் கோர்ட் நீதிபதி தலைமையில் குழு: குஜராத் அரசு
- பொது சிவில் சட்டம் அமல்படுத்துவது தொடர்பாக குஜராத் அரசு 5 பேர் கொண்ட குழு அமைத்துள்ளது.
- இந்தக் குழுவிற்கு சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி தலைமை தாங்குகிறார்.
அகமதாபாத்:
நாட்டின் அனைத்து மத, மொழி, இன மக்களுக்கும் ஒரே மாதிரியான, பொதுவான உரிமைகளை வழங்கும் விதத்தில் பொது சிவில் சட்டம் ஒன்றை இயற்றுவதை மத்திய பா.ஜ.க. அரசு நோக்கமாகக் கொண்டுள்ளது.
இதற்கிடையே, நாட்டிலேயே முதல் மாநிலமாக உத்தரகாண்டில் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்பட்டு நடைமுறையில் இருந்து வருகிறது.
உத்தரகாண்டை தொடர்ந்து பா.ஜ.க. ஆளும் குஜராத் மாநில அரசும் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த முடிவு செய்துள்ளது.
இந்நிலையில், குஜராத் முதல் மந்திரி பூபேந்திர படேல் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:
பொது சிவில் சட்டத்துக்கான வரைவைத் தயாரிப்பதற்காக 5 பேர் கொண்ட குழுவை அமைக்க மாநில அரசு முடிவு எடுத்துள்ளது.
இந்தக் குழுவுக்கு ஓய்வுபெற்ற சுப்ரீம் கோர்ட் நீதிபதி ரஞ்சனா தேசாய் தலைமையில் 4 உறுப்பினர்கள் இடம்பெறுவார்கள். இந்தக் குழு தனது அறிக்கையை 45 நாளில் தயாரித்து அரசுக்கு வழங்கும். அதன் அடிப்படையில் முடிவெடுக்கப்படும் என தெரிவித்தார்.
இந்தக் குழுவில் மூத்த ஐஏஎஸ் அதிகாரி சி.எல்.மீனா, வழக்கறிஞர் ஆர்.சி.கோடேகர், முன்னாள் துணைவேந்தர் தக்ஷேஷ் தாக்கர், சமூக ஆர்வலர் கீதா ஷ்ராப் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.