search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பலத்த மழையால் குஜராத் வெள்ளத்தில் மிதக்கிறது- அகமதாபாத் விமான நிலையத்தில் தண்ணீர் புகுந்தது
    X

    பலத்த மழையால் குஜராத் வெள்ளத்தில் மிதக்கிறது- அகமதாபாத் விமான நிலையத்தில் தண்ணீர் புகுந்தது

    • அகமதாபாத்தில் பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்து காணப்படுகிறது. தாழ்வான பகுதிகளில் அதிக நீர் சூழ்ந்துள்ளது.
    • வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    நாடு முழுவதும் தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் வட மாநிலங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட், அரியானா, பஞ்சாப், அசாம், டெல்லி ஆகிய மாநிலங்களில் பெய்த பலத்த மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

    இதேபோல மராட்டிய மாநிலத்திலும் கடந்த சில தினங்களாக பல இடங்களில் பலத்த மழை பெய்தது.

    இந்நிலையில் குஜராத் மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி உள்ளது. சாலை முழுவதும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஜூனாகத் மாவட்டத்தில் பலத்த மழையால் கால்நடைகள், வாகனங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன.

    அகமதாபாத்தில் பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்து காணப்படுகிறது. தாழ்வான பகுதிகளில் அதிக நீர் சூழ்ந்துள்ளது.

    அகமதாபாத் விமான நிலையத்துக்குள் வெள்ளம் புகுந்தது. முழங்கால் அளவுக்கு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் விமான பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். விமானங்கள் புறப்படுவதிலும் பாதிப்பு ஏற்பட்டது. ராஜ்கோட் மாவட்டத்தின் தோராஜி நகரில் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது.

    ஜூனாகாத், நவ்சாரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பெய்த மிக கனமழையால் குஜராத் வெள்ளத்தில் மிதக்கிறது.

    குஜராத்தில் மொத்த முள்ள 206 நீர் தேக்கங்களில் 43 நீர் தேக்கங்கள் நிரம்பி வழிகின்றன.37 நீர் தேக்கங்களுக்கு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    தேசிய பேரிடர் மீட்பு படை மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் மீட்பு பணிகளை மேற் கொண்டு வருகின்றனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    சவுராஸ்டிரா-தெற்கு குஜராத்தில் 22 தாலுக்காவில் மிக கனமழை பதிவாகி உள்ளது. ஜூனாகத்தில் உள்ள கிர்னார் பகுதியில் 355 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    நாளை வரை மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அம்மாநிலத்துக்கு சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×