search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    வாரணாசி ஞானவாபி மசூதியில் ஆய்வு நடத்த சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை
    X

    வாரணாசி ஞானவாபி மசூதியில் ஆய்வு நடத்த சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை

    • தொல்லியல் துறையினர் மேற்கொண்ட அறிவியல் பூர்வ ஆய்வை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.
    • மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு வாரணாசி கோர்ட்டு உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது.

    வாரணாசி:

    உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் காசி விஸ்வநாதர் கோவில் அருகே ஞானவாபி மசூதி உள்ளது. முகலாய மன்னர் அவுரங்கசீப் உத்தரவின்பேரில், காசி விஸ்வநாதர் கோவிலின் ஒரு பகுதி இடிக்கப்பட்டு அந்த மசூதி கட்டப்பட்டதாக இந்துக்கள் தரப்பில் கூறப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் காசி விஸ்வநாதர் கோவில் மீது அந்த மசூதி கட்டப்பட்டு உள்ளதா? என்பதை கண்டறிய, ஒட்டுமொத்த மசூதி வளாகத்திலும் அறிவியல் பூர்வ ஆய்வு மேற்கொள்ள இந்திய தொல்லியல் துறைக்கு உத்தரவிட வேண்டும் என்று வாரணாசி கோர்ட்டில் இந்து மதத்தைச் சேர்ந்த சிலர் மனுதாக்கல் செய்தனர்.

    மனுவை விசாரித்த கோர்ட்டு, மசூதியில் அறிவியல் பூர்வ ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று இந்திய தொல்லியல் துறைக்கு கடந்த வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. இந்த ஆய்வு தொடர்பான புகைப்படங்கள் மற்றும் காணொலிகளுடன் ஆகஸ்டு 4-ந்தேதிக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் கோர்ட்டு உத்தரவிட்டது.

    இதைத் தொடர்ந்து இந்திய தொல்லியல் துறையினர் வாரணாசிக்கு நேற்று சென்றனர். மசூதியில் ஆய்வுப் பணிகளை இன்று (திங்கட்கிழமை) தொடங்கினார்கள். இந்த தகவலை வாரணாசி மாவட்ட கலெக்டர் எஸ்.ராஜலிங்கம் தெரிவித்தார்.

    இன்று காலை 7 மணிக்கு தொல்லியல் துறையை சேர்ந்த 30 பேர் ஆய்வுப் பணிகளை தொடங்கினார்கள். அவர்களுடன் இந்து வக்கீல்கள் உடன் இருந்தனர்.

    அதுபோல இஸ்லாமியர்கள் சார்பிலும் பிரதிநிதிகள் உள்ளே இருந்தனர். அவர்களுக்கு உதவ இஸ்லாமிய வக்கீல்களுடன் உடன் இருந்தனர்.

    தொல்லியல் துறையினர் மேற்கொண்ட அறிவியல் பூர்வ ஆய்வை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. மசூதி வளாகத்தில் 40 கமாண்டோ வீரர்கள் நிறுத்தப்பட்டு இருந்தனர். வெளியே உத்தரபிரதேச போலீசார் அரண்போல நின்றனர். இந்த ஆய்வு மூலம் உண்மையான தகவல்கள் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மசூதியில் உள்ள வடிவம் ஒன்றை சிவலிங்கம் என்று கடந்த 2022-ம் ஆண்டு முதல் இந்துக்கள் தரப்பு கூறி வருகிறது. அந்த வடிவம் உள்ள பகுதியைப் பாதுகாக்க வேண்டும் என்று கோர்ட்டு உத்தரவிட்டது.

    அந்த உத்தரவைப் பின்பற்றி அந்த பகுதியில் மட்டும் இன்று அறிவியல் பூர்வ ஆய்வு மேற்கொள்ளப்படவில்லை. மற்ற பகுதிகளில் தொல்லியல் துறையினர் ஆய்வு செய்து தகவல்களை சேகரித்தனர்.

    ஞானவாபி மசூதியில் அறிவியல்பூர்வ ஆய்வை மேற்கொள்வதற்கு தடை விதிக்க கோரி மசூதி தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் இன்று மனுதாக்கல் செய்யப்பட்டது.

    இந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு வாரணாசி கோர்ட்டு உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது. இதை தொடர்ந்து ஞானவாபி மசூதியில் அறிவியல் ஆய்வு பணி நிறுத்தப்பட்டது. வருகிற 26-ந்தேதி வரை இந்த தடை இருக்கும். அதற்குள் மசூதி தரப்பில் பதில் அளிக்க உத்தரவிடப்பட்டது.

    Next Story
    ×