search icon
என் மலர்tooltip icon

    இந்தியா (National)

    19 மாவட்டங்களில் கடும் வெள்ளம்: 45 பேர் பலி
    X

    19 மாவட்டங்களில் கடும் வெள்ளம்: 45 பேர் பலி

    • மழையால் இதுவரை 45 பேர் இறந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
    • அசாமில் வெள்ளப்பாதிப்பு மேலும் அதிகரிக்கும் நிலை உள்ளது.

    கவுகாத்தி:

    இந்தியாவில் டெல்லி, அசாம், குஜராத் உள்ளிட்ட பல மாநிலங்களில் பருவமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் இந்த மாநிலங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

    குறிப்பாக அசாமில் ஜோர்காட் மாவட்டத்தில் பிரம்மபுத்ரா ஆற்றில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அதன் துணை நதிகளில் வெள்ளம், அபாய அளவை தாண்டி பாய்ந்தோடுகிறது.

    மேலும் 8 ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.

    கம்ரூப், கோலாகாட், மஜூலி, லக்கிம்பூர், கச்சார், தேமாஜி, மோரிகான், திப்ருகார், நாகோன், நல்பாரி, சிவசாகர், சோனித்பூர், தவாம்பூர் உள்ளிட்ட 19 மாவட்டங்கள் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் 6 லட்சத்து 44 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வெள்ளத் தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    குறிப்பாக ஜோர்காட் மாவட்டம் வெள்ளத்தில் மிதக்கிறது. மேலும் சில மாவட்டங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. அசாம் முழுவதும் தொடர் மழையால் இதுவரை 45 பேர் இறந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    வெள்ளத்தால் மனிதர்கள் மட்டுமின்றி வன விலங்குகளும் பாதிக்கப் பட்டுள்ளது. காசிரங்கா தேசிய பூங்காவில் கனமழை காரணமாக தேங்கிய மழை வெள்ளத்தில் தப்பிக்க விலங்குகள் அருகே உள்ள மலைக்கு இடம்பெயர்ந்து உள்ளதாக கூறப்படுகிறது.

    ஏற்கனவே கனமழை கொட்டித்தீர்த்த நிலையில் அடுத்த 2 அல்லது 3 நாட்க ளுக்கு கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்து உள்ளது. இதனால் அசாமில் வெள்ளப்பாதிப்பு மேலும் அதிகரிக்கும் நிலை உள்ளது.

    அசாமில் கனமழை தொடர்வதால் நிலைமை மோசமாக மாறி உள்ளதாக முதல்-மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மா கூறியுள்ளார்.

    அருணாச்சல பிரதேசத்தில் நீர்ப்பிடிப்பு பகுதியில் இடைவிடாது பெய்யும் கனமழை காரணமாக அசாம் மாநிலத்தில் வெள்ளப்பாதிப்பு அதிகரித்து வருவதாகவும் அவர் கூறினார்.

    இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோர் என்னை அழைத்து நிலைமையை சமாளிக்க அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதி அளித்துள்ளனர்.

    பிரம்மபுத்ரா மற்றும் அதன் துணை நதிகளில் அபாய அளவை தாண்டி தண்ணீர் பாய்ந்து வருகிறது. அடுத்த 3 அல்லது 4 நாட்களுக்கு கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

    எனவே அவசர நிலையை சமாளிக்க ராணுவம் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படைகள் தயார் நிலையில் உள்ளது என்றார்.

    இதற்கிடையே இன்று டெல்லி, அரியானா, அசாம் மற்றும் குஜராத் உள்பட பல்வேறு பகுதிகளில் சூறாவளி காற்று மற்றும் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

    டெல்லியில் ஏற்கனவே கடந்த வாரம், 88 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கனமழை பெய்தது. இந்நிலையில் இன்றும் கனமழை எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.

    இதேபோல வடக்கு குஜராத் மற்றும் அதை யொட்டிய பகுதிகளில் சூறாவளி காற்றுடன் மழை பெய்யும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    இதன் காரணமாக கேரளா, புதுச்சேரியில் மாகே, கடலோர கர்நாடகா, கோவா, கொங்கன், குஜராத், லட்சத்தீவு, கடலோர ஆந்திரா, மத்திய மராட்டியம், தமிழ்நாடு, தெலுங்கானா உள்ளிட்ட பகுதிகளில் வருகிற 6-ந்தேதி வரை இடி-மின்னலுடன் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது.

    Next Story
    ×