search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினர் ஆகவேண்டும்: மோடி வலியுறுத்தல்
    X

    ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினர் ஆகவேண்டும்: மோடி வலியுறுத்தல்

    • அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக உள்ள இந்தியா, உலகில் தனக்கான சரியான இடத்தை பெற வேண்டும்.
    • பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவிற்கான பங்கு குறித்து பெரும்பாலான நாடுகள் தெளிவாக இருப்பதாக நான் நினைக்கிறேன்.

    ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் 15 உறுப்பினர் நாடுகள் உள்ளன. அவற்றில் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ரஷியா மற்றும் சீனா ஆகியவை வீட்டோ அதிகாரம் கொண்ட நிரந்தர உறுப்பு நாடுகள். ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராவதற்கு இந்த 5 நாடுகளின் ஆதரவு தேவை. ஆனால் பிற நாடுகள் ஆதரவு தெரிவித்து வருகிற நிலையில் சீனா ஆதரவளிக்கவில்லை.

    இந்நிலையில் இன்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி பிரான்ஸ் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அங்கு பல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் அவர், அந்நாட்டின் பாஸ்டில் தின (Bastille Day) கொண்டாட்டத்தில் கெளரவ விருந்தினராகவும் பங்கேற்கிறார்.

    பிரான்ஸ் பயணத்திற்கு முன்னர், தமது அதிகாரபூர்வ இல்லத்திலிருந்து பிரான்ஸ் ஊடகங்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் மற்றும் அதில் இந்தியாவின் பதவி குறித்து அவர் பேசியதாவது:

    அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக உள்ள இந்தியா, உலகில் தனக்கான சரியான இடத்தை பெற வேண்டும். பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவிற்கு நிரந்தர உறுப்பினர் பதவி என்பது நம்பகத்தன்மை குறித்த பிரச்சினை மட்டுமல்ல; அதை விட மிகப்பெரியது.

    அதிக மக்கள்தொகை கொண்ட நாடும் அதன் மிகப்பெரிய ஜனநாயகமும் நிரந்தர உறுப்பினராக இல்லாத நிலையில், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் உலகத்திற்காக பேசுவதாக எப்படி கூற முடியும்?

    உலக ஒழுங்கு மாறி வரும் நிலையில் அதனோடு இணையாமல் அந்த அமைப்பு இருக்கிறது எனும் முரண்பாட்டையே இது எடுத்து காட்டுகிறது. அதன் உறுப்பினர் பதவிகளில் உள்ள முரண், வெளிப்படைத்தன்மையற்ற செயல்முறைகளுக்கு வழிவகுக்கிறது. இதனால், இன்றைய சவால்களை எதிர்கொள்வதில் அதன் உதவியற்ற தன்மை தெரிகிறது. கவுன்சிலில் இந்தியாவிற்கான பங்கு குறித்து பெரும்பாலான நாடுகள் தெளிவாக இருப்பதாக நான் நினைக்கிறேன். பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் எனது எண்ணங்களை பகிர்ந்து கொண்டார்.

    சமூக மற்றும் பொருளாதார பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவின் ஈடு இணையற்ற வெற்றி, அதன் ஜனநாயகம் வழங்கும் வெற்றியாகும். பன்முகத்தன்மைக்கு மத்தியில் நல்லிணக்கம் சாத்தியமாகும் என்பதை இந்த வெற்றி நிரூபிக்கிறது. அதே நேரத்தில், சர்வதேச அமைப்புகள் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவிற்கு உரிய இடத்தை தரும் விதமாக தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×