search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    சிறுவயதில் காணாமல் போன உங்கள் மகன் நான்தான்.. பல குடும்பங்களை ஏமாற்றிய பலே ஆசாமி சிக்கியது எப்படி?
    X

    'சிறுவயதில் காணாமல் போன உங்கள் மகன் நான்தான்'.. பல குடும்பங்களை ஏமாற்றிய பலே ஆசாமி சிக்கியது எப்படி?

    • தனக்கு ஏழு வயதாக இருந்தபோது, ​​ தான் கடத்தப்பட்டதாக போலீசில் கூறினார்
    • உறவினர்கள் வீட்டில் ராஜு திருடுவதை வழக்கமாகக் கொண்டிருந்ததால் அவரை வீட்டை விட்டு துரத்தினர்

    நான் தான் சிறு வயதில் காணாமல் போன உங்களது மகன் என்று கூறி நபர் ஒருவர் பல குடும்பங்களில் மோசடி செய்துள்ள சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

    பீம் என்றும் இந்திரராஜ் பல பெயர்களால் அறியப்படும் ராஜு என்பவர் ராஜஸ்தானைச் சேர்த்தவர். 1993 இல், தனக்கு ஏழு வயதாக இருந்தபோது, தான் கடத்தப்பட்டதாகவும் தன்னை குடும்பத்துடன் சேர்த்துவைக்குமாறும் போலீசை அணுகியுள்ளார்.

    போலீசார் அவருக்கு ஒரு வாரத்திற்கு உணவு மற்றும் உடைகளை ஏற்பாடு செய்து சமூக ஊடகங்களில் அவரை பற்றய செய்தியை வெளியிட்டனர். அவர் தங்கள் காணாமல் போன பிள்ளைதான் என்று கூறி ஒரு குடும்பம் போலீசை அணுகி ராஜூவை தங்கள் வீட்டுக்கு அழைத்துச் சென்றது. இந்த செய்தியை ஊடகங்களும் நெகிழ்ச்சியான தருணமாக வெளியிட்டன.

    ஒரு மகிழ்ச்சியான கிளைமாக்ஸ் போல தோன்றிய இது உண்மையில் மோசடி என்பது பின்னர் வெளிச்சத்துக்கு வந்தது. ராஜூவை தங்கள் வீட்டுக்கு அழைத்துச்சென்ற குடும்பதிற்கு அவர் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

    போலீசுக்கு தெரிவிக்கப்பட்டு ராஜுவுக்கு டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் ராஜுவின் குட்டு வெளிப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட ராஜுவிடம் நடந்த விசாரணையில் பல உண்மைகள் வெளிவந்துள்ளன.

    தெரிந்தவர்கள், உறவினர்கள் வீட்டில் ராஜு திருடுவதை வழக்கமாகக் கொண்டிருந்ததால் அவரை கடந்த 2005 ஆம் ஆண்டே வீட்டை விட்டு துரத்தியுள்ளனர்.

    பின்னர் அவர் தனது அடையாளத்தை மறைத்து இதுவரை ஒன்பது வெவ்வேறு குடும்பங்களை மோசடி செய்துள்ளார். காணாமல் போன மகன் என கூறி ஒரு குடும்பத்துக்குள் செல்லும் ராஜு சிலகாலம் அங்கேயே தங்கி பின் அவர்களின் வீடுகளில் கொள்ளையடித்து, யாரிடமும் கூறாமல் அங்கிருந்து நழுவி அடுத்த குடும்பத்துக்குச் சென்றுள்ளார் . மேலும் அந்த குடும்பங்களிடம் என்ன சொத்து உள்ளது என்பதையும் அலசி ஆராய்ந்துள்ளதாகவும் போலீசார் தெரிவிக்கின்றனர்.

    தனது தாயார் இறந்த பிறகு, உணவுக்காகவே மற்றவர்களின் வீடுகளில் இவ்வாறு வசித்து வந்ததாக போலீசாரிடம் ராஜு கூறியுள்ளார் . இதுவரை அவர் தனது போலி அடையாளத்துடன் இருந்த வீடுகளை தவிர்த்து மேலும் பல குடும்பங்களையும் ஏமாற்றி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். பஞ்சாப், ராஜஸ்தானின் ஜெய்சால்மர், ஹரியானாவில் ஹிசார் மற்றும் சிர்சா ஆகிய இடங்களில் இவர் இந்த மோசடிகளை அரங்கேற்றியுள்ளார்.

    Next Story
    ×