search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ஆந்திராவில் ஆட்சிக்கு வந்தால் தரமான மது விற்பனை செய்யப்படும்- சந்திரபாபு நாயுடு பரபரப்பு பேச்சு
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    ஆந்திராவில் ஆட்சிக்கு வந்தால் தரமான மது விற்பனை செய்யப்படும்- சந்திரபாபு நாயுடு பரபரப்பு பேச்சு

    • என்னை அரசியல் ரீதியாக துன்புறுத்தினார்கள். அரசியலுக்கு தொடர்பு இல்லாத என் மனைவியை சட்டசபையில் அவமானப்படுத்தினார்கள்.
    • மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஒவ்வொரு வீட்டிற்கும் ஆண்டுக்கு ரூ.15 ஆயிரமும், ஆண்டிற்கு 3 கியாஸ் சிலிண்டர்களும் இலவசமாக வழங்கப்படும்.

    திருப்பதி:

    ஆந்திர மாநில முன்னாள் முதல் மந்திரியும் தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு தனது சொந்த தொகுதியான குப்பத்தில் 2 நாட்கள் நேற்று தேர்தல் பிரசாரம் தொடங்கினார். குப்பம் தொகுதியில் உள்ள தெலுங்கு தேசம் கட்சி மகளிர் பிரிவு நிர்வாகிகளை சந்தித்தார்.

    ஜெகன்மோகன் ஆட்சியில் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை. என்னை சட்ட விரோதமாக கைது செய்து துன்புறுத்தினர். இருப்பினும் நான் பயந்து ஓடவில்லை. எனக்கு பதவி முக்கியமில்லை. மாநில நலன் தான் முக்கியம்.

    தெலுங்கு தேசம் கட்சி ஆட்சிக்கு வந்தவுடன் பெண்களுக்கு மாதம்தோறும் ரூ. 4 ஆயிரம் வழங்கப்படும். மாநிலத்தின் நலனை பாதுகாப்பதற்காக தெலுங்கு தேசம், பா.ஜ.க. மற்றும் ஜனசேனா செயல் திட்டம் தீட்டி வருகிறது.

    மாநிலத்தில் முஸ்லிம்களுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்கினேன் வக்பு வாரிய சொத்துக்கள் பாதுகாக்கப்பட்டன உருது மொழியை 2-வது மொழியாக அறிவித்தேன்.

    ஆந்திராவில் கஞ்சா மற்றும் போதை பொருள் விற்பனை அதிகரித்து காணப்படுகிறது. இதனால் போதையில் இருப்பவர்கள் தாய் யார்? சகோதரி யார்? என தெரியாமல் நடந்து கொள்கின்றனர்.

    அந்திரி நிவா திட்டத்தின் மூலம் குப்பம் பகுதியில் உள்ள கிளை கால்வாய்கள் தூர்வாரப்படும். ஒவ்வொரு ஏக்கர் விவசாய நிலத்திற்கும் பாலாற்றில் இருந்து தண்ணீர் கொண்டு செல்ல வேண்டியது எனது பொறுப்பு.

    என்னை அரசியல் ரீதியாக துன்புறுத்தினார்கள். அரசியலுக்கு தொடர்பு இல்லாத என் மனைவியை சட்டசபையில் அவமானப்படுத்தினார்கள்.

    பெண்கள் அரசியலுக்கு வர வேண்டும். இதனால் ஆண்கள் நாற்காலிகளை தேட வேண்டும். எனது ஆட்சியில் பெண்களுக்கு சைக்கிள் வழங்கினேன். 30 சதவீத இட ஒதுக்கீட்டில் வேலை வாய்ப்பு வழங்கினேன்.

    மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஒவ்வொரு வீட்டிற்கும் ஆண்டுக்கு ரூ.15 ஆயிரமும், ஆண்டிற்கு 3 கியாஸ் சிலிண்டர்களும் இலவசமாக வழங்கப்படும்.

    ஜெகன்மோகன் ஆட்சியில் தரமற்ற மதுபானங்கள் விற்பனை செய்வதால் அதைக் குடித்துவிட்டு கணவன்கள் இறந்து விடுவதால் பெண்கள் தாலி கொடியை இழந்து வருகின்றனர்.

    எனது ஆட்சியில் ரூ.75-க்கு விற்கப்பட்ட மதுபானங்கள் ஜெகன்மோகன் ஆட்சியில் 2 மடங்காக விலை உயர்த்தப்பட்டது. தெலுங்கு தேசம் ஆட்சிக்கு வந்த பின்னர் குறைந்த விலையில் தரமான மதுபானங்கள், பீர்கள் விற்பனை செய்யப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×