search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    இந்திய கடலில் மீண்டும் சீன உளவு கப்பல் ஊடுருவல்
    X

    இந்திய கடலில் மீண்டும் சீன உளவு கப்பல் ஊடுருவல்

    • சீனாவின் ஆய்வு கப்பல்களில் ஒன்றான “சீயாங் எங் ஹாங் 03” என்ற கப்பல் தற்போது இந்திய பெருங்கடல் பகுதியில் ஊடுருவி இருக்கிறது.
    • கப்பல் வருகை ஏற்கனவே திட்டமிட்ட ஒன்று என்று மாலத்தீவு அரசு விளக்கம் அளித்து உள்ளது.

    இந்திய பெருங்கடல் பகுதியில் இந்தியா ஆதிக்கம் செலுத்தி வருவதை சீனாவால் பொறுத்துக்கொள்ள இயலவில்லை. இதனால் கடந்த 2008-ம் ஆண்டு முதல் சீனா தனது உளவு கப்பல்களை இந்திய பெருங்கடல் பகுதிக்கு அனுப்பி உளவு பார்க்கும் வேலையை செய்து வருகிறது.

    மேலும் சர்வதேச நாடுகளின் சரக்கு கப்பல் போக்குவரத்துக்கு இந்திய பெருங்கடல் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே இந்திய பெருங்கடலில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட சீனா தொடர்ந்து முயற்சி செய்கிறது.

    இதற்கிடையே தென் தமிழகத்தில் பல்வேறு முக்கிய தொழிற்சாலைகள் உருவாகி வருகின்றன. கூடங்குளத்தில் அணுமின் நிலையம் மிக பிரமாண்டமாக உருவாகி இருக்கிறது. அடுத்த கட்டமாக குலசேகரபட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் வர இருக்கிறது. தூத்துக்குடியில் முக்கிய தொழில் நிறுவனங்கள் இருக்கின்றன.

    இவற்றையெல்லாம் இந்திய பெருங்கடல் பகுதியில் இருந்தவாறு சீன உளவு கப்பல்களால் மிக எளிதாக தகவல்களை திரட்ட முடியும். சீன ஆய்வு கப்பல்களில் உள்ள அதிநவீன கருவிகள் மூலம் சென்னை, விசாகப்பட்டினம், கொச்சி வரை உள்ள இந்திய ராணுவ தளங்கள் பற்றிய தகவல்களையும் சேகரிக்க வாய்ப்பு உள்ளது.

    இதனால் இந்திய பெருங்கடல் பகுதியில் சீன உளவு கப்பல்கள் அத்துமீறி நுழைவதற்கு இந்தியா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. கடந்த மாதம் இலங்கைக்கு வர இருந்த சீன ஆய்வு கப்பலை இந்தியா கடைசி நிமிடத்தில் தடுத்து நிறுத்தியது.

    இந்த நிலையில் இந்தியாவுக்கும், மாலத்தீவுக்கும் இடையே உறவில் ஏற்பட்டு உள்ள சிக்கலை சீனா தனக்கு சாதகமாக பயன்படுத்த தொடங்கி உள்ளது. மாலத்தீவை மையமாக வைத்து இந்திய பெருங்கடல் பகுதியில் தனது ராணுவ பலத்தை அதிகரிக்கும் நடவடிக்கையை சீனா தொடங்கி இருக்கிறது.

    அதன் ஒரு பகுதியாக சீனாவின் ஆய்வு கப்பல்களில் ஒன்றான "சீயாங் எங் ஹாங் 03" என்ற கப்பல் தற்போது இந்திய பெருங்கடல் பகுதியில் ஊடுருவி இருக்கிறது. நேற்று காலை அந்த கப்பல் இந்தோனேசியாவில் இருந்து இந்திய கடல் பகுதிக்குள் வந்திருக்கிறது.

    அந்த கப்பல் மாலத்தீவை நோக்கி செல்வதாக தெரிய வந்துள்ளது. அது அடுத்த வாரம் மாலத்தீவு துறைமுகத்தை சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த கப்பல் இந்திய பெருங்கடலில் முக்கிய பகுதிகளை ஆய்வு செய்ய வந்திருப்பதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

    அந்த கப்பலில் ஆண்டெனா, சென்சார் மற்றும் செயற்கைகோள்கள் பறக்க விடுவதை கண்காணிக்கும் கருவிகள், ராணுவ தளங்களை ஆய்வு செய்து படம் பிடிக்கும் எலக்ரானிக் கருவிகள் உள்பட பல்வேறு அதிநவீன ஆய்வு கருவிகள் இருப்பது தெரிய வந்துள்ளது. இந்த கப்பல்தான் கடந்த மாதம் இலங்கைக்கு வருவதாக இருந்தது.

    இந்தியாவின் அழுத்தம் காரணமாக இலங்கை அரசு அந்த கப்பலுக்கு அனுமதி மறுத்தது. இதையடுத்து தற்போது அந்த கப்பல் மாலத்தீவு உதவியுடன் இந்திய பெருங்கடலில் ஊடுருவி இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

    சீன ஆய்வு கப்பல் எத்தகைய பணிகளில் ஈடுபடும்? எத்தனை நாட்கள் இந்திய பெருங்கடல் பகுதியில் இருக்கும் என்று அறிவிக்கப்படவில்லை. இந்த கப்பல் வருகை ஏற்கனவே திட்டமிட்ட ஒன்று என்று மாலத்தீவு அரசு விளக்கம் அளித்து உள்ளது.

    மாலத்தீவு ஜனாதிபதி முகமது முய்சு சமீபத்தில் சீனாவுக்கு சென்று விட்டு வந்த நிலையில் சீன உளவு கப்பல் இந்தியாவை நெருங்கி வந்திருப்பது முக்கியமானதாக கருதப்படுகிறது. அந்த கப்பலின் நகர்வை இந்திய உளவுத்துறையும், இந்திய கடற்படையும் தொடர்ந்து கண்காணித்து வருகிறது.

    Next Story
    ×