என் மலர்
இந்தியா

இந்திய ராணுவத்துக்கு 52 புதிய செயற்கைக்கோள்கள்- விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டம்
- கடந்த ஆண்டு ஜனவரி மாதம் விண்ணில் ஏவப்பட்ட ஜிசாட்7 ஆர் செயற்கைக்கோள் தரவுகளை அளித்து வருகிறது.
- இஸ்ரோவின் லட்சியத் திட்டத்தை பாதுகாப்புப் படைத் தலைவர் ஜெனரல் அனில் சவுகான் அறிவித்துள்ளார்.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) வானிலை, பேரிடர் தகவல்கள், பல்வேறு வகையிலான தகவல் தொடர்புகள், பூமி கண்காணிப்பு, வாகனங்களுக்கு வழிகாட்டுவது உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தி வருகிறது.
அந்த வகையில், இந்திய கடற்படையின் தனிப்பட்ட பயன்பாட்டுக்காக கடந்த 2013-ம் ஆண்டு விண்ணில் ஏவப்பட்ட ஒரு தகவல் தொடர்பு செயற்கைக்கோள் ஜிசாட்-7. இதேபோல், இந்திய விமானப்படைக்காக கடந்த 2018-ம் ஆண்டு ஏவப்பட்ட ஒரு மேம்பட்ட ராணுவ தகவல் தொடர்பு செயற்கைக்கோள் ஜிசாட்-7ஏ. அத்துடன், எஸ்- பாண்டு அதிர்வெண்ணில் தகவல் தொடர்பு பணியில் ஜிசாட்-6 செயற்கைக்கோள் செயல்படுகிறது.
இந்திய கடற்படையின் ஜிசாட்-7 ருக்மிணி செயற்கைக்கோளுக்கு மாற்று செயற்கைக்கோளாக, கடந்த ஆண்டு ஜனவரி மாதம் விண்ணில் ஏவப்பட்ட ஜிசாட்7 ஆர் செயற்கைக்கோள் தரவுகளை அளித்து வருகிறது.
இதற்கிடையில், இந்திய ராணுவம் அதன் சொந்த தனிப்பட்ட பணிக்காக ஜிசாட்-7பி என்ற செயற்கைக்கோளை வடிவமைத்துள்ளது. இதன்மூலம் எல்லைப் பகுதிகளில் அதன் கண்காணிப்பு திறன்களை மேலும் மேம்படுத்த இருக்கிறது. இந்த செயற்கைக்கோள் அடுத்த ஆண்டு (2026) விண்ணில் ஏவப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரூ.3 ஆயிரம் கோடி பட்ஜெட்டில். ஜிசாட்- 7 பி மேம்பாட்டிற்காக மத்திய அரசு நியூ ஸ்பேஸ் இந்தியா நிறுவனத்துடன் (என்.எஸ்.ஐ.எல்.) ரூ.3 ஆயிரத்து 100 கோடி மதிப்புள்ள ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்டு உள்ளது.
இந்தியாவின் ராணுவ விண்வெளி கோட்பாடு, விண்வெளியில் செயற்கைக்கோள் எதிர்ப்பு ஆயுதங்கள், விண்வெளி குப்பைகள் மற்றும் மின்னணு போர் ஆகியவற்றின் வளர்ந்து வரும் அச்சுறுத்தலையும் நிவர்த்தி செய்யும். அமெரிக்கா, ரஷியா மற்றும் சீனாவின் வரிசையில் சேர்ந்து, பூமியின் தாழ்வான சுற்றுப்பாதையில் ஒரு செயற்கைக்கோளை அழிக்கும் திறனை இஸ்ரோ ஏற்கனவே நிரூபித்துள்ளது. இந்திய விண்வெளி சொத்துகள் அபாயகரமான சூழல்களில் பாதுகாப்பாக செயல்படுவதையும் உறுதி செய்வதை இந்த ராணுவக் கோட்பாடு நோக்கமாக கொண்டுள்ளது.
'பாகிஸ்தான் மற்றும் சீனாவுடனான எல்லைகளை கண்காணிப்பதற்கும், இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் கடல்சார் நடவடிக்கைகளை கண்காணிப்பதற்கும், மேம்பட்ட சென்சார்கள், உயர் தெளிவுத்திறன் படங்களின் அமைப்புகள் மற்றும் அனைத்து வானிலை நிலைகளிலும் 24 மணி நேரமும் வளர்ந்து வரும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்கும் ராணுவ செயற்கைக்கோள்கள் மிக முக்கிய பங்காற்றுகின்றன.
இந்தியாவின் பாதுகாப்பு படைகளை வலுப்படுத்தும் மற்றொரு முயற்சியாக, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) இந்திய ராணுவத்துக்கான உளவுத்துறை சேகரிப்பு, கண்காணிப்பு மற்றும் உளவு பணிக்காக ரூ.27 ஆயிரம் கோடி மதிப்பில் 52 பிரத்யேக செயற்கைக்கோள்களை ஏவ உள்ளன. இஸ்ரோவின் லட்சியத் திட்டத்தை பாதுகாப்புப் படைத் தலைவர் ஜெனரல் அனில் சவுகான் அறிவித்துள்ளார்.
இது இந்தியாவின் ராணுவ விண்வெளி கோட்பாட்டில் ஒரு முக்கிய மைல்கல். இந்த செயற்கைக்கோள்கள், தாழ் பூமி சுற்றுப்பாதை, நடுத்தர பூமி சுற்றுப்பாதை மற்றும் புவிநிலை சுற்றுப்பாதை உள்ளிட்ட பல சுற்றுப்பாதைகளில் நிலைநிறுத்தப்பட உள்ளன என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர்.






