என் மலர்
இந்தியா
விஜய் - அஜித் பட தயாரிப்பாளர்கள் வீடு, அலுவலகங்களில் IT ரெய்டு
- சோதனை நடைபெற்று வரும் தயாரிப்பாளர்கள் வீடு மற்றும் அலுவலகங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
- பிரபல தயாரிப்பாளர்களான தில்ராஜு, நவீன் எர்னேனி ஆகியோர் சமீபத்தில் வெளியிட்ட படங்கள் நல்ல வசூலை கொடுத்துள்ளது.
தெலுங்கு திரைப்பட உலகின் பிரபல தயாரிப்பாளர் தில்ராஜு. ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் என்ற முன்னணி திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
இவர் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் ஏராளமான திரைப்படங் களை தயாரித்து உள்ளார். நடிகர் விஜய் நடித்த வாரிசு படத்தை தமிழில் தயாரித்து வெளியிட்டார்.
தெலுங்கானா திரைப்பட மேம்பாட்டுக் கழகத்தின் தலைவராக சமீபத்தில் அவர் மாநில அரசால் நியமிக்கப்பட்டார். தில் ராஜுவுக்கு சொந்தமான வீடு மற்றும் அலுவலகங்கள் ஐதராபாத் பெருநகர பகுதியிலேயே அமைந்து உள்ளன.
இந்த நிலையில் ஐதராபாத்தில் உள்ள திரைப்பட தயாரிப்பாளர் தில் ராஜுவின் அலுவலகம், வீடுகள் உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் இன்று அதிகாலை 5 மணிக்கு அதிரடியாக புகுந்தனர்.
இந்த இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர். மேலும் தில் ராஜுவின் சகோதரர் சிரிஷ், மகள் ஹன்சிதா ரெட்டி ஆகியோரின் வீடுகள் ஜூப்ளிகில்ஸ் மற்றும் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் அமைந்துள்ளன. அந்த இடங்களிலும் வருமான வரி துறையினர் சோதனை நடத்தினர்.
மேலும் தில் ராஜுவுடன் வணிகம் தொடர்பான செயல்பாடுகளில் ஈடுபட்டவர்கள் வீடுகளிலும் சோதனை நடந்தது.
மேலும் சமீபத்தில் வெளியான பான் இந்தியா படமான புஷ்பா-2 படத்தின் தயாரிப்பாளர் நவீன் எர்னேனியின் வீட்டில் இன்று அதிகாலை முதல் வருமான வரித்துறை சோதனை நடத்தினர்.
ஐதராபாத்தில் இன்று ஒரே நாளில் 2 தயாரிப்பாளர்களுக்கு சொந்தமான 8 இடங்களில் 55 குழுக்கள் கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
இந்த சோதனையில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த ஆவணங்கள் மூலம் வருமானவரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து ஜுப்ளிஹில்ஸ், பஞ்சாரா ஹில்ஸ் பகுதிகளில் வருமான வரித்துறை சோதனை நடந்து வருகிறது.
சோதனை நடைபெற்று வரும் தயாரிப்பாளர்கள் வீடு மற்றும் அலுவலகங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தில் ராஜு இந்த மாதம் சங்கராந்தி பண்டிகையையொட்டி 2 படங்களைத் தயாரித்தார். பான்-இந்தியா திரைப்படமான கேம் சேஞ்சர் மற்றொரு வெளியீடான சங்கராந்திகி வஸ்துன்னம் படங்கள் வசூல் சாதனைகளை முறியடித்து குறிப்பிடத்தக்க வருவாயை ஈட்டி வருகிறது.
பிரபல தயாரிப்பாளர்களான தில்ராஜு, நவீன் எர்னேனி ஆகியோர் சமீபத்தில் வெளியிட்ட படங்கள் நல்ல வசூலை கொடுத்துள்ளது.
இதனால் இவர்களுக்கு சொந்தமான இடங்களில் முறைகேடாக பணம் பதுக்கி வைக்கப்பட்டு இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. இதன் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
தெலுங்கானா மாநிலத்தில் புஷ்பா-2 வெளியானபோது கூட்ட நெரிசலில் சிக்கி பெண் ஒருவர் பலியானார். இந்த சம்பவத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டார்.
தற்போது புஷ்பா-2 தயாரிப்பாளர் வீடு உள்பட பல்வேறு இடங்களில் சோதனை நடந்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.