search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ஜார்க்கண்ட் சட்டசபையில் ஹேமந்த் சோரன் அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி
    X

    ஜார்க்கண்ட் சட்டசபையில் ஹேமந்த் சோரன் அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி

    • முதல்வர் பதவியை சம்பய் சோரன் கடந்த 3-ம் தேதி ராஜினாமா செய்தார்.
    • சுயேட்சை உறுப்பினர் சரயுராய் பங்கேற்கவில்லை.

    ராஞ்சி:

    ஜார்க்கண்டில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. அங்கு முதல்-மந்திரியாக இருந்த ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் ஹேமந்த் சோரனை நில மோசடி வழக்கில் அமலாக்கத்துறை கைது செய்ய முடிவு செய்தது.

    இதையடுத்து ஹேமந்த் சோரனை கடந்த ஜனவரி 31-ந்தேதி முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். அன்றே அவரை அமலாக்கத்துறை கைது செய்தது. அவரது கட்சியை சேர்ந்த சம்பய் சோரன் முதல்வராக பதவியேற்றார். இதற்கிடையே ஜார்க்கண்ட் ஐகோர்ட்டு கடந்த மாதம் 28-ந்தேதி ஹேமந்த் சோரனுக்கு ஜாமீன் வழங்கியது.

    இதையடுத்து ஜாமீனில் வெளியே வந்த ஹேமந்த் சோரன் மீண்டும் முதல்-மந்திரியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனால், முதல்வர் பதவியை சம்பய் சோரன் கடந்த 3-ம் தேதி ராஜினாமா செய்தார். அதன்பின் ஹேமந்த் சோரன் மீண்டும் முதல்-மந்திரியாக பதவியேற்றார்.

    இந்நிலையில் ஹேமந்த் சோரன் தலைமையிலான அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. 81 உறுப்பினர்களைக் கொண்ட ஜார்க்கண்ட் சட்டசபை யில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சிக்கு 27 எம்.எல்.ஏ.க்கள், காங்கிரசுக்கு 17 எம்.எல்.ஏ.க்கள், ராஷ்ட்ரீய ஜனதா தளத்துக்கு 1 எம்.எல்.ஏ., பா.ஜனதாவுக்கு 24 எம்.எல்.ஏ.க்களும் உள்ளனர்.

    நம்பிக்கைத் தீர்மானத்தை முதல்-மந்திரி ஹேமந்த் சோரன் தாக்கல் செய்தார். நம்பிக்கை தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு ஒரு மணி நேரத்தை சபாநாயகர் ரவீந்திரநாத் மஹ்தோ ஒதுக்கினார். இதையடுத்து விவாதம் நடந்தது.

    பின்னர் நடந்த வாக்கெடுப்பில் நம்பிக்கை தீர்மானத்துக்கு ஆதரவாக 45 எம்.எல்.ஏ.க்கள் வாக்களித்தனர். இதையடுத்து ஹேமந்த் சோரன் அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றது. சுயேட்சை உறுப்பினர் சரயுராய் பங்கேற்கவில்லை. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

    Next Story
    ×