search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    Mallikarjun Kharge
    X

    அரியானா, ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை கைப்பற்றும் - கார்கே

    • ஜம்மு-காஷ்மீரில் 10 ஆண்டுகளுக்குப் பின் தற்போது சட்டசபைத் தோ்தல் நடைபெற்றுள்ளது.
    • அரியானாவில் கடந்த 10 ஆண்டுகளாக பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது.

    90 தொகுதிகளைக் கொண்ட அரியானா மாநிலத்தில் ஒரே கட்டமாகத் தோ்தல் நடை பெற்றது. சுமாா் 2 கோடி வாக்காளா்களைக் கொண்ட இந்த மாநிலத்தில் 67.90 சதவீத வாக்குகள் பதிவாகின.

    அரியானாவில் கடந்த 10 ஆண்டுகளாக பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், இம்முறை ஆட்சி மாற்றம் நிகழும் என்று கருத்து கணிப்புகள் கூறி உள்ளன. முக்கிய எதிர்க் கட்சியான காங்கிரஸ் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியைக் கைப்பற்ற வாய்ப்பு உள்ளது.

    ஜம்மு-காஷ்மீரில் மொத்தம் உள்ள 90 தொகுதிகளுக்கு மூன்று கட்டங்களாக கடந்த மாதம் 18, 25, அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் தோ்தல் நடைபெற்றது. மூன்று கட்டங்களிலும் சோ்த்து 63. 88 சதவீத வாக்குகள் பதிவாகின.

    ஜம்மு-காஷ்மீரில் 10 ஆண்டுகளுக்குப் பின் தற்போது சட்டசபைத் தோ்தல் நடைபெற்றுள்ளது. கடந்த 2019-ம் ஆண்டில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, இரு யூனியன் பிரதேசங்களாக (ஜம்மு-காஷ்மீா், லடாக்) பிரிக்கப் பட்ட பிறகு நடைபெற்ற முதல் சட்டசபை தோ்தல் இதுவாகும்.

    ஜம்மு-காஷ்மீா் தோ்தலில் காங்கிரஸ்-தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணி யாகவும், பா.ஜ.க., மக்கள் ஜனநாயக கட்சி (பி.டி.பி.) ஆகியவை தனித்தும் போட்டியிட்டன. யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் தொங்கு சட்டசபை அமையும் என்பதே பெரும்பாலான கருத்துக்கணிப்புகளின் முடிவாக உள்ளது.

    அரியானா, ஜம்மு-காஷ்மீா் சட்டப்பேரவைத் தோ்தல்களில் பதிவான வாக்குகள் நாளை (செவ்வாய்க்கிழமை) எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

    இந்நிலையில், அரியானாவில் காங்கிரஸ் கட்சி தனித்து ஆட்சியமைக்கும் என்றும் ஜம்மு காஷ்மீரில் தேசிய மாநாட்டுக் கட்சியுடன் கூட்டணி அமைத்து காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் என்று அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×