search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    doctors protest
    X

    பெண் டாக்டர் கொலை: மருத்துவர்கள் போராட்டம் வாபஸ்

    • பெண் டாக்டர் கொலை சம்பவம் தொடர்பாக உச்சநீதிமன்றம் விசாரணை செய்தது.
    • போராட்டம் நடத்திய மருத்துவர்கள் மீண்டும் பணிக்கு திரும்ப நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

    கொல்கத்தா ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. இந்த சம்பவத்தில் மாநில காவல் துறையின் விசாரணையில் ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து, இந்த வழக்கை சிபஐ விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில் கொல்கத்தா விரைந்த சிபிஐ குழுவினர் கடந்த சில நாட்களாக விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த விவகாரத்தில் சிபிஐ தரப்பில் இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

    அதனை பதிவு செய்து கொண்ட உச்சநீதிமன்றம் மருத்துவர்களை மீண்டும் பணிக்கு திரும்ப வலியுறுத்தியது. தலைமை நீதிபதி சந்திரசூட், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் மீண்டும் பணிக்கு திரும்ப வேண்டும் என்று அறிவுருத்தினார். மேலும் போராட்டம் காரணமாக ஏழை மக்கள் பாதிக்கப்படுவதகை கவனிக்காமல் இருக்க முடியாது, என்று தெரிவித்தார்.

    உச்சநீதிமன்றம் அமைத்துள்ள 10 பேர் கொண்ட தேசிய பணிக்குழு மருத்துவர்களின் கோரிக்கைகளைக் கண்டிப்பாகக் கேட்டறியும் என்றும் அவர் உறுதியளித்தார். நீங்கள் கிட்டத்தட்ட 48 மணி நேரம் பணியாற்றிய பிறகு யாராவது உங்களை கேலி செய்தால் அவர்களுக்கு பதில் அளிக்க உடல் அளவிலும், மன ரீதியிலும் நீங்கள் இருப்பதில்லை. நான் மிகமுக்கிய குற்றங்களை கூட குறிப்பிடவில்லை.

    பொதுவான வேலை நிலைகளை பற்றியே நாங்கள் குறிப்பிடுகிறோம். நாங்கள் பொது மருத்துவமனைகளுக்கு சென்றிருக்கிறோம். என் குடும்ப உறுப்பினர் ஒருவர் உடல்நிலை நலிவுற்று இருந்த போது, நான் அரசு மருத்துவமனையின் தரையில் படுத்து உறங்கியிருக்கிறேன். மருத்துவர்கள் 36 மணி நேரத்திற்கும் அதிகமாக பணியாற்றுகிறார்கள் என்று எங்களுக்கு தெரியும் என்று தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்தார்.

    மருத்துவர்களின் பணி நேரத்தை ஒழுங்குபடுத்துவது குறித்து தேசிய பணிக்குழு ஆய்வு செய்ய வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். அப்போது, பயிற்சி மருத்துவர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் தேவதத் காமத், நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட தேசிய பணிக்குழுவில் பயிற்சி டாக்டர்கள் பிரதிநிதித்துவப்படுத்தப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

    அந்த கோரிக்கை ஏற்கப்படுவதாக தலைமை நீதிபதி அறிவித்தார். இந்நிலையில் பெண் டாக்டர் கற்பழித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு நாடு முழுவதும் டாக்டர்கள் நடத்தி வந்த போராட்டம் வாபஸ் பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மருத்துவர்கள் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

    அதில், "எங்களின் கோரிக்கைகள் தொடர்பாக முன்னேற்றங்கள் ஏற்படுவதோடு கவலைகள் உச்சநீதிமன்றத்தால் நிவர்த்தி செய்யப்படுவதை கருத்தில் கொண்டு, வேலைநிறுத்தத்தை நிறுத்துகிறோம் என்று அறிவிக்கிறோம்."

    "எங்களது அனைத்து கடமைகளையும் மீண்டும் தொடங்க முடிவு செய்துள்ளோம். ஆர்.ஜி. கர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சமீபத்தில் நடந்த அசம்பாவிதம், நம் நாட்டில் டாக்டர்கள் பணிபுரியும் வருந்தத்தக்க நிலையை எடுத்துக்காட்டுகிறது. ஆகஸ்ட் 23 ம் தேதி காலை 8 மணி முதல் மீண்டும் அவரவர் பணிகளை மீண்டும் தொடங்க அனைவரையும் கேட்டுக் கொண்டுள்ளோம்," என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    Next Story
    ×