search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    சட்டசபை தேர்தல் முடிவு நாளை வெளியாகும் நிலையில் குமாரசாமி திடீர் சிங்கப்பூர் பயணம்
    X

    சட்டசபை தேர்தல் முடிவு நாளை வெளியாகும் நிலையில் குமாரசாமி திடீர் சிங்கப்பூர் பயணம்

    • ஜனதா தளம் (எஸ்) கட்சிக்கு ‘கிங் மேக்கர்' ஆகும் வாய்ப்பு கிடைக்க உள்ளது.
    • ஒட்டுமொத்த இந்தியாவின் கவனமும் கர்நாடக சட்டசபை தேர்தல் முடிவு மீது திரும்பியுள்ளது.

    பெங்களூரு :

    கர்நாடக சட்டசபைக்கு நேற்று முன்தினம் தேர்தல் நடைபெற்றது. இதில் 73.19 சதவீத ஓட்டுகள் பதிவாகியுள்ளன. இந்த தேர்தலில் பதிவான ஓட்டுகள் நாளை (சனிக்கிழமை) எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளில் காங்கிரஸ் அதிக தொகுதிகளில் வெற்றி பெறும் என்று தெரிய வந்துள்ளது. சில நிறுவனங்களின் கருத்து கணிப்பில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காது என்றும், தொங்கு சட்டசபை தான் அமையும் என்று கூறப்பட்டுள்ளது.

    இத்தகைய சூழ்நிலையில் ஜனதா தளம் (எஸ்) கட்சிக்கு 'கிங் மேக்கர்' ஆகும் வாய்ப்பு கிடைக்க உள்ளது. அதாவது ஜனதா தளம் (எஸ்) கட்சி யாருக்கு ஆதரவு அளிக்கிறதோ அந்த கட்சியே ஆட்சி அமைக்கும் சூழல் ஏற்படும். அதனால் கர்நாடகம் மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்தியாவின் கவனமும் கர்நாடக சட்டசபை தேர்தல் முடிவு மீது திரும்பியுள்ளது.

    இந்த நிலையில் ஜனதா தளம் (எஸ்) கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான குமாரசாமி தேர்தல் முடிவடைந்ததும் நேற்று முன்தினம் சிங்கப்பூர் புறப்பட்டு சென்றார். அவர் கடந்த 6 மாதங்களாக ஓய்வின்றி தீவிரமான தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வந்தார்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் வாக்குப்பதிவு நிறைவடைந்ததும், பெங்களூருவில் இருந்து சிங்கப்பூருக்கு விமானத்தில் புறப்பட்டு சென்றார். நாளை (சனிக்கிழமை) ஓட்டுகள் எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளது. இதற்கிடையே குமாரசாமி சிங்கப்பூர் பயணம் மேற்கொண்டுள்ள சம்பவம் பரபரப்பாக பேசப்படுகிறது.

    குமாரசாமிக்கு 2 முறை இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அவர் தற்போது மருத்துவ பரிசோதனைக்காக சிங்கப்பூர் சென்று இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    அவருடன் தனது தனி உதவியாளர் மற்றும் சில நண்பர்களுடன் குமாரசாமி சிங்கப்பூர் சென்று இருப்பதாகவும், அங்கு இன்று ஓய்வு எடுத்துவிட்டு நாளை (சனிக்கிழமை) காலை பெங்களூரு திரும்புவார் என்று கூறப்படுகிறது.

    தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றி பெறும் என்று கூறப்பட்டுள்ளது. அதனால் குமாரசாமி ஏமாற்றம் அடைந்துள்ளதாக தெரிகிறது.

    Next Story
    ×