search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    குவைத் தீ விபத்தில் பலியானவர்களில் 11 பேர் கேரளாவை சேர்ந்தவர்கள்- குடும்பத்தினர் சோகம்
    X

    தீ விபத்தில் பலியான கேரளாவைச் சேர்ந்தவர்கள்.

    குவைத் தீ விபத்தில் பலியானவர்களில் 11 பேர் கேரளாவை சேர்ந்தவர்கள்- குடும்பத்தினர் சோகம்

    • 6 மாடிகளை கொண்ட இந்த குடியிருப்பில் 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தங்கி உள்ளனர்.
    • தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இந்த விபத்தில் 50-க்கும் மேற்பட்டோர் பலியானதாக தகவல் கிடைத்துள்ளது.

    திருவனந்தபுரம்:

    வளைகுடா நாடுகளில் ஒன்றான குவைத்தில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் பலர் குடும்பத்துடன் குவைத்திலேயே வசித்து வருகின்றனர். மேலும் சிலர் தாங்கள் வேலை பார்க்கும் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ள குடியிருப்புகளில் தங்கி வேலைக்கு சென்று வருகின்றனர்.

    குவைத்தில் செயல்பட்டு வரும் என்.பி.டி.சி. நிறுவனத்தில் இந்தியர்கள் உள்பட ஏராளமான வெளிநாட்டினர் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிறுவனம் தங்கள் ஊழியர்கள் தங்குவதற்காக குவைத்தின் தெற்கு பகுதியில் உள்ள அகமதி கவர்னரகத்திற்குட்பட்ட மங்காப்பில் அடுக்குமாடி குடியிருப்பை ஏற்பாடு செய்துள்ளது.

    6 மாடிகளை கொண்ட இந்த குடியிருப்பில் 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தங்கி உள்ளனர். நேற்றிரவு குடியிருப்பில் அனைவரும் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த நேரத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ அடுக்குமாடி குடியிருப்பு முழுவதும் பற்றி எரிந்தது. இதனால் அங்கு தங்கியிருந்தவர்கள் உயிர் பிழைக்க அங்கும் இங்கும் ஓடினர். இருப்பினும் பலர் தீயின் கோரபிடியில் சிக்கினர்.

    இதற்கிடையில் தீ விபத்தில் இருந்து தப்பிக்க சிலர் அடுக்குமாடி குடியிருப்பின் மேல் பகுதியில் இருந்து கீழே குதித்தனர். இந்த சம்பவத்தில் பலரும் காயமடைந்தனர். தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்க முயன்றனர். தீயில் கருகியும், புகையின் காரணமாக மூச்சுத்திணறி கிடந்தவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இந்த விபத்தில் 50-க்கும் மேற்பட்டோர் பலியானதாக தகவல் கிடைத்துள்ளது. மேலும் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருபவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாகவே உள்ளது. தீ விபத்தில் பலியானவர்களில் 42 பேர் இந்தியர்கள் என தெரிய வந்த நிலையில் இதில், 30-க்கும் மேற்பட்டோர் கேரளாவைச் சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது.

    இவர்களில் கேரளாவைச் சேர்ந்த 11 பேர் அடையாளம் தெரிய வந்துள்ளது. அவர்கள் விவரம் வருமாறு:-

    ஆகாஷ் எஸ்.நாயர் (வயது 23), பந்தளம், உமருதீன் சமீர் (33) லூகோஸ் (48), கொல்லம், ரஞ்சித் (34), கெலு பொன்மலேரி (55), காசர்கோடு, முரளிதரன், பத்தினம்திட்டா, சாஜு வர்கீஸ் (56), கோனி, தாமஸ் உம்மன், (திருவல்லா).

    இதுபற்றிய தகவல் கிடைத்ததும் கேரளாவில் உள்ள அவர்களது குடும்பத்தினர் அதிர்ச்சியும், சோகமும் அடைந்தனர்.

    இவர்கள் தவிர இந்தியாவைச் சேர்ந்த தாமஸ் ஜோசப், பிரவீன் மாதவ், பூனத் ரிச்சர்ட் ராய் ஆனந்த், அனில் கிரி, முஹம்மது ஷரீப், துவரிகேஷ் பட்நாயக், விஸ்வாஸ் கிருஷ்ணன், அருண்பாபு, ரேமண்ட், ஜீசஸ் லோபஸ், டென்னி பேபி கருணாகரன் ஆகியோரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

    விபத்தில் பலியான கொல்லத்தைச் சேர்ந்த சமீர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு வேலைக்காக குவைத் சென்றுள்ளார். 2 ஆண்டுகளுக்கு முன்பு நாடு திரும்பிய அவர் திருமணம் செய்துள்ளார். கடந்த 8 மாதங்களுக்கு முன்புதான் அவர், மீண்டும் குவைத் சென்றுள்ளார். கனரக வாகன ஓட்டுனராக பணியாற்றிய அவர் பரிதாபமாக தீயில் கருகி இறந்துள்ளார்.

    அவரது நண்பர் நஜீப் தீயில் இருந்து தப்பிக்க மாடியில் இருந்து கீழே குதித்துள்ளார். இதில் அவரது கால் முறிந்தது. தற்போது அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில்தான் தனது தந்தைக்கு போன் மூலம் சமீர் இறந்த தகவலையும், தான் காயமுற்றிருப்பதையும் தெரிவித்தார்.

    சமீரின் மற்றொரு நண்பர் ஷானவாஸ் கூறுகையில், நாங்கள் 3 பேரும் ஒரே கிராமத்தில் ஒன்றாக வளர்ந்தோம். ஒன்றாகவே வேலை பார்த்தோம். நான் வேறு இடத்தில் தங்கியிருந்தேன். தீ விபத்து பற்றி அறிந்ததும், நண்பர்களை பற்றி விசாரித்தேன். அப்போது சமீர் இறந்து விட்டார் என்பது பேரிடியாக அமைந்தது. ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் நஜீப்பிடம் போனில் பேசினேன். நான் இன்னும் அதிர்ச்சியாகவே உள்ளேன் என்றார்.

    இந்த சம்பவம் குறித்து கேரள எதிர்க்கட்சித் தலைவரான சதீசன் கூறுகையில், குவைத் தீ விபத்து சம்பவம் ஒட்டுமொத்த கேரளாவை கதறி அழ வைக்கும் சம்பவமாக உள்ளது. மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்து கேரளாவைச் சேர்ந்தவர்களை மீட்க வேண்டும் என்றார்.

    தீ விபத்தில் உயிர் இழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ள பிரதமர் மோடி விரைந்து நடவடிக்கை எடுக்க வெளியுறவுத்துறை இணை அமைச்சர் கீர்த்தி வாசனை குவைத் செல்ல உத்தரவிட்டுள்ளார். அதன்படி அவரும் குவைத் விரைந்துள்ளார்.

    Next Story
    ×