என் மலர்
இந்தியா
கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சை: தந்தை-மகன் ஒரேநேரத்தில் பலியான பரிதாபம்
- அறுவை சிகிச்சை பலனளிக்காமல் இருவரும் பரிதாபமாக இறந்தனர்.
- இதயத்துக்கு செல்லக் கூடிய முக்கிய நரம்பு சேதமடைந்ததால் உயிரிழப்பு.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் கொச்சியில் உள்ள கலுர் பகுதியை சேர்ந்தவர் நசீர். காய்கறி வியாபாரி. இவரது மகன் தோயிப் நசீர் (வயது26). எம்.ஏ. பட்டதாரியான தோயிப், தனது தந்தைக்கு உதவியாக காய்கறி வியாபாரம் செய்து வந்தார்.
இந்தநிலையில் அவருக்கு கல்லீரலில் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் அவருக்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருந்தது. தனது மகனுக்கு கல்லீரல் தானம் வழங்க தந்தை நசீர் முன்வந்தார். இதையடுத்து தந்தை-மகன் இருவரும் அறுவை சிகிச்சைக்காக ஒரு ஆஸ்பத்திரியில் அனுமதிக் கப்பட்டனர்.
நசீரின் கல்லீரலில் இருந்து ஒரு பகுதி அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டு, அவரது மகன் தோயிப்புக்கு பொருத்தப்பட்டது. இந்தநிலையில் அறுவை கிச்சைக்கு பிறகு நசீரின் உடல்நிலை பாதிக்கப்பட்டது.
அறுவை சிகிச்சையின் போது இதயத்துக்கு செல்லக் கூடிய முக்கிய நரம்பு சேதமடைந்ததால் அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டது.
அதற்காக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நசீர் பரிதாபமாக இறந்துவிட்டார். தந்தையிடம் இருந்து கல்லீரல் தானம் பெற்ற தோயிப், அறுவை சிகிச்சை நடந்த மருத்துவமனையிலேயே தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை பலனளிக்காமல் தோயிப்பும் பரிதாபமாக இறந்தார்.
மகனுக்கு கல்லீரல் தானம் கொடுத்த நசீர், அவரிடமிருந்து கல்லீரல் தானம் பெற்ற தோயிப் என தந்தை-மகன் இருவரும் பலியான சம்பவம் கொச்சியில் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.