search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    மராட்டிய சட்டசபை தேர்தல்: விரைவில் கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை-சரத்பவார்
    X

    மராட்டிய சட்டசபை தேர்தல்: விரைவில் கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை-சரத்பவார்

    • மராட்டியத்தில் ஆட்சி மாற்றம் தேவைப்படுகிறது.
    • சிவசேனா, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கூட்டணியாகப் போட்டியிடும்.

    மும்பை:

    மராட்டியத்தில் 2019 பேரவைத் தோ்தலில் பா.ஜனதா-சிவசேனா கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைத்தது. ஆனால், முதல்-மந்திரி பதவியைத் தர மறுத்ததால் பா.ஜனதாவுடனான கூட்டணியை முறித்த சிவசேனா, எதிா்க்கட்சிகளாக இருந்த தேசியவாத காங்கிரஸ்-காங்கிரசுடன் இணைந்து ஆட்சி அமைத்தது. சிவசேனா தலைவா் உத்தவ் தாக்கரே முதல்-மந்திரி ஆனார்.

    ஆனால், 2022-ம் ஆண்டு சிவசேனா மூத்த தலைவா் ஏக்நாத்ஷிண்டே கட்சியை உடைத்து, பா.ஜனதாவுடன் கைகோர்த்தாா். இதனால், உத்தவ் தாக்கரே முதல்-மந்திரி பதவியை இழந்தாா். ஷிண்டே புதிய முதல்- மந்திரி ஆனார்.

    பா.ஜனதாவின் தேவேந்திரபட்னாவிஸ் துணை முதல்-மந்திரி ஆனார். இதன்பிறகு தேசியவாத காங்கிரஸ் கட்சியை உடைத்த சரத்பவாரின் நெருங்கிய உறவினா் அஜித்பவாரும் ஆளும் கூட்டணியில் இணைந்து துணை முதல்-மந்திரி பதவியைப் பெற்றாா்.

    சமீபத்தில் நடைபெற்ற பாராளுமன்றத் தோ்தலில் எதிா்க்கட்சிகளின் மகா விகாஸ் அகாடி கூட்டணி மொத்தமுள்ள 48 இடங்களில், 30 தொகுதிகளில் வென்றது. பாராளுமன்றத் தோ்தலில் பா.ஜனதா தனிப்பெரும்பான்மை பெற முடியாமல் போனதற்கு மராட்டியத்தில் ஏற்பட்ட தோல்வியும் முக்கியக் காரணமாக இருந்தது.

    இந்த நிலையில், சட்டசபை தோ்தலில் எதிா்க்கட்சிகளின் கூட்டணி ஆளும் கூட்டணிக்கு கடும் சவால் அளிக்க இருக்கிறது.

    இந்த நிலையில் புனேயில் நிருபர்களுக்கு பேட்டியளித்த சரத்பவாா் கூறியதாவது:-

    மராட்டியத்தில் ஆட்சி மாற்றம் தேவைப்படுகிறது. அதை மக்களுக்கு ஏற்படுத்தித் தர வேண்டியது எதிா்க்கட்சிகள் கூட்டணியின் கடமையாகும். எனவே, சட்டசபைத் தோ்தலில் (சரத்பவாா் தலைமை) தேசியவாத காங்கிரஸ், (உத்தவ்தாக்கரே தலைமை) சிவசேனா, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கூட்டணியாகப் போட்டியிடும்.

    தொகுதிப் பங்கீடு பேச்சுவாா்த்தை இதுவரை தொடங்கப்படவில்லை. எனினும், விரைவில் இது தொடா்பாக கூட்டணிக் கட்சிகளின் கூட்டம் நடைபெறும். பாராளுமன்றத் தோ்தலில் எங்கள் கூட்டணிக்கு மக்கள் நல்ல வரவேற்பை அளித்தாா்கள்.

    இடதுசாரிகள், பி.டபிள்யூ.பி. கட்சி ஆகியவையும் எங்கள் கூட்டணியில் உள்ளன. பாராளுமன்றத் தோ்தலில் அக்கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்க முடியவில்லை. எனினும், சட்ட சபைத் தோ்தலில் அவா்களுக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிப்பது எங்கள் கடமை என்றாா்.

    பெண்களுக்கு மாதம் ரூ.1,500 நிதியுதவி, ஆண்டுக்கு மூன்று எரிவாயு சிலிண்டா் இலவசம் உள்ளிட்ட பல்வேறு கவா்ச்சிகரமான வாக்குறுதிகளை மராட்டியத்தில் ஆளும் கூட்டணி இடைக்கால பட்ஜெட்டில் அறிவித்துள்ளது குறித்த கேள்விக்கு, 'இந்த அறிவிப்புகள் எதற்காக என்பது அனைவருக்கும் தெரியும்.

    சில நாட்களுக்கு வேண்டுமானால் இதை வைத்து பரபரப்பாகப் பேச முடியும். கையில் பணம் இல்லாமல் சந்தைக்கு பொருள் வாங்கச் செல்வதுபோல உள்ளது ஆளும் கட்சியின் நிலை.

    இவ்வாறு சரத்பவாா் கூறினார்.

    Next Story
    ×