search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    மீண்டும் வன்முறையால் பதற்றம்... மணிப்பூர் முதல்-மந்திரி கவர்னருடன் சந்திப்பு
    X

    மீண்டும் வன்முறையால் பதற்றம்... மணிப்பூர் முதல்-மந்திரி கவர்னருடன் சந்திப்பு

    • பயங்கரவாதிகளை பிடிக்க தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது.
    • தேடுதல் வேட்டையில் பெரிய அளவில் ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    இம்பால்:

    வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினருக்கும், குகி பழங்குடியினருக்கும் இடையே ஒரு ஆண்டுக்கும் மேலாக மோதல் போக்கு நீடித்து வருகிறது.

    மைதேயி சமூகத்தினர் தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து வழங்க வேண்டும் என்று கேட்டுள்ளனர். இதற்கு குகி பழங்குடியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுவே மோதலுக்கு முக்கியக் காரணமாகும்.

    இரு சமூகத்தினரை சார்ந்த பயங்கரவாதிகளும் மாறி மாறி தாக்குதல்களில் ஈடுபடுவதால் உயிர் சேதம் தொடர் கதையானது. இதுவரை 200-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்து நிவாரண முகாம்களில் தங்கியுள்ளனா்.

    இந்நிலையில், ஜிரிபாம் மாவட்டத்தில் நேற்று ஒரு வீட்டுக்குள் புகுந்த பயங்கரவாதிகள் அங்கிருந்த ஒருவரை சுட்டுக்கொன்றனர். இந்த பயங்கரவாதிகள் மலைப்பகுதியில் இருந்து வந்தவர்களாவர். இதைத் தொடர்ந்து இரு சமூகத்தினருக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை நடந்தது. இதில் 3 பயங்கரவாதிகள் உள்பட ஆயுதம் தாங்கிய 5 போ் உயிரிழந்தனர். அங்கு மீண்டும் ஏற்பட்ட வன்முறையில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    மணிப்பூரில் ஏற்பட்ட புதிய கலவரம் தொடர்பாக முதல்-மந்திரி பிரேன்சிங் அவசர ஆலோசனை நடத்தினார். சட்டம்-ஒழுங்கு நிலவரம் தொடர்பாக அவர் இம்பாலில் உள்ள தனது இல்லத்தில் மாநில மந்திரிகள், ஆளும் கூட்டணி எம்.எல்.ஏ.க்களுடன் நேற்று இரவு அவர் ஆலோசனையில் ஈடுபட்டார்.

    இந்த அவசர கூட்டத்துக்கு பிறகு முதல்-மந்திரி பிரேன்சிங், கவர்னர் லட்சுமன் ஆச்சார்யாவை தனியாக சந்தித்தார்.

    இந்த நிலையில் முதல்-மந்திரி பிரேன்சிங், 20 எம்.எல்.ஏ.க்களுடன் கவர்னர் லட்சுமன் ஆச்சார்யாவை இன்று காலை 11 மணியளவில் சந்தித்தார். இந்த சந்திப்பு 1 மணி நேரம் நடைபெற்றது. அவர்கள் என்ன விவாதித்தார்கள் என்று தெரியவில்லை.

    ஆளில்லா விமானம், ராக்கெட் தாக்குதலை தொடர்ந்து புதிய வன்முறையில் 5 பேர் கொல்லப்பட்டதால் மணிபூரில் பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். பயங்கரவாதிகளை பிடிக்க தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த தேடுதல் வேட்டையில் பெரிய அளவில் ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. துப்பாக்கிகள், கைதுப்பாக்கிகள், குண்டுகள், கையெறி குண்டுகள், நீண்ட தூரம் தாக்க கூடிய ராக்கெட் குண்டுகள், வெடி பொருட்கள் உள்ளிட்ட ஆயுதங்களை பாதுகாப்பு படை வீரர்கள் கைப்பற்றினர்.

    Next Story
    ×