search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    மைசூரு தசரா விழா: தங்க, வைர நவரத்தினங்களால் ஆன சிம்மாசனம் குறித்து சுவாரசிய தகவல்கள்
    X

    சிம்மாசனத்தை படத்தில் காணலாம்.

    மைசூரு தசரா விழா: தங்க, வைர நவரத்தினங்களால் ஆன சிம்மாசனம் குறித்து சுவாரசிய தகவல்கள்

    • மைசூரு தசரா விழா 26-ந்தேதி தொடங்கி அக்டோபர் 5-ந்தேதி வரை நடக்கிறது.
    • இந்த சிம்மாசனத்தில் 280 கிலோ தங்கம் பயன்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    பெங்களூரு

    உலகப்புகழ்பெற்ற மைசூரு தசரா விழா வருகிற 26-ந்தேதி தொடங்கி அடுத்த மாதம் (அக்டோபர்) 5-ந்தேதி வரை 10 நாட்கள் கோலாகலமாக நடக்கிறது.

    உலகப்புகழ் பெற்ற மைசூரு தசரா விழாவில் மன்னர் தனியார் தர்பார் நடத்துவது வழக்கம். அதுபோல் இந்த ஆண்டும் மன்னர் தர்பார் நடத்த உள்ளார். இதற்காக அவர் அமரும் தங்க, வைர நவ ரத்தினங்களால் ஆன சிம்மாசனம் நேற்று ஜோடிக்கப்பட்டது.

    அந்த சிம்மாசனம் பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளது. அதுபற்றிய விவரம் வருமாறு:-

    மன்னர் அமர்ந்து தனியார் தர்பார் நடத்தும் சிம்மாசனத்திற்கு என்று பண்டைய வரலாறும், புனிதத்தன்மையும் உண்டு. சிம்மாசனத்தை பார்ப்பதையே அக்காலத்தில் மக்கள் பெரும் பாக்கியமாக கருதியதாக கூறப்படுகிறது. இந்த சிம்மாசனம் முதலில் பாண்டவர்கள் வசம் இருந்துள்ளது. அதன்பிறகு மண்ணில் புதைந்திருந்த இந்த சிம்மாசனத்தை விஜயநகர பேரரசு காலத்தில் மன்னர் வித்யாரண்யரால் கண்டறியப்பட்டு உள்ளது. விஜயநகர பேரரசின் வீழ்ச்சிக்கு பின் இந்த சிம்மாசனம் மீண்டும் மண்ணில் புதையுண்டது. மேலும் சிம்மாசனம் புதைந்திருந்த இடம் மண் குவியலாக இருந்தது.

    பின்னர் 1610-ம் ஆண்டு விஜயநகர அரசர் ரங்கராயர் இந்த சிம்மாசனத்தை கண்டெடுத்தார். அவர் இந்த சிம்மாசனத்தை அப்போதைய மைசூரு மன்னர்களுக்கு பரிசாக வழங்கினார். அந்த காலக்கட்டத்தில் ஹைதர் அலி மற்றும் திப்பு சுல்தான் ஆகியோர் வசம் இந்த சிம்மாசனம் இருந்தது. ஆனால் அவர்கள் ஆச்சரியப்படும் வகையில் இந்த சிம்மாசனத்தில் அமர்ந்து ஆட்சி நடத்தவில்லை.

    திப்பு சுல்தானின் மறைவிற்கு பிறகு இந்த சிம்மாசனம் யது வம்சத்திடம் வந்தது. அதில் முதன்முதலாக மும்மடி கிருஷ்ணராஜ உடையார் இந்த சிம்மாசனத்தின் மீது அமர்ந்து முடிசூடிக் கொண்டார். அதன்பிறகு வந்த யது வம்ச மன்னர்கள் அனைவரும் இந்த சிம்மாசனத்தில் அமர்ந்து ஆட்சி புரிந்தனர். மேலும் கடந்த 1940-ம் ஆண்டு வரை இந்த சிம்மாசனத்தில் பல்வேறு மாற்றங்களும் செய்யப்பட்டன.

    இந்த சிம்மாசனம் அத்தி மரத்தால் செய்யப்பட்டது. அதன்மீது வெள்ளி மற்றும் தங்க முலாம் பூசப்பட்டுள்ளது. இந்த சிம்மாசனத்தை 3 பிரிவுகளாக பிரித்துள்ளனர். முதலில் படிகள், இரண்டாவது அரசன் இருக்கை, மூன்றாவது அரசன் குடை என்று குறிப்பிடுகிறார்கள். அரசன் இருக்கை கூர்மாசனம் என்று அழைக்கப்படுகிறது. அதில் உள்ள மிருதுவான பஞ்சு மற்றும் தலையணைகள் விலை உயர்ந்த நவரத்தின கற்கள் பதிக்கப்பட்ட துணிகளால் ஆனது.

    அரசன் இருக்கைக்கு செல்லும் படிகளின் எண்ணிக்கை 7 ஆகும். இந்த படிகளில் தர்ம, அர்த்த, காம மோட்சங்களைக் குறிக்கும் வகையில் 4 சக்கரங்கள் வைக்கப்பட்டு உள்ளன. படிகளின் இருபுறமும் சலபஞ்சிகே எனப்படும் பெண் பொம்மைகள் வைக்கப்பட்டு உள்ளன.

    இருக்கையின் பின்புறத்தில் பறவைகள், சிங்கம் மற்று பூக்களின் கலை வேலைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நடுவில் சாமுண்டீஸ்வரி தேவியும், இருபுறமும் லட்சுமி மற்றும் சரஸ்வதி தேவியும் உள்ளனர். 8 திசைகளின் கடவுள்கள் என்று அழைக்கப்படும் அஷ்ட திக்பாலகர்களால் இந்த சிம்மாசனம் சூழப்பட்டுள்ளது.

    அரசன் இருக்கையை குதிரைகள் குதிக்கும் தோரணையில் தாங்கி நிற்கின்றன. அரசன் இருக்கையின் தெற்கில் பிரம்மாவும், வடக்கில் சிவனும், நடுவில் விஷ்ணும் அலங்கரிக்கின்றனர்.

    மன்னர் பெற்ற வெற்றியின் அடையாளங்களாக சிங்கங்கள் வைக்கப்பட்டு உள்ளன. இருக்கையின் 3 விளிம்புகளில் 2 குதிரைகள், 2 புலிகள், 4 நாரைகள் அழகுடன் வடிவமைக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் தங்கம், வெள்ளி போன்றவற்றால் ஆனவை என்பது குறிப்பிடத்தக்கது. சிம்மாசனம் பின்புறம் அரச சின்னமான கந்தபெருண்டா செதுக்கப்பட்டு உள்ளது. அதன்கீழ் 'சத்யமேவூதரகம்' என்ற மேற்கொள் இருக்கிறது. 'சத்யமேவூதரகம்' என்பதற்கு 'நான் எப்போதும் உண்மையை நிலை நிறுத்துவேன்' என்று பொருளாகும்.

    சிம்மாசனம் மொத்தம் 2.25 மீட்டர் உயரம் கொண்டது. அரசன் இருக்கை மீது குடை அமைக்கப்பட்டு உள்ளது. அது முழு அரச இருக்கைக்கும் நிழல் தருகிறது. அந்த குடையின் மீது மன்னரை ஆசீர்வதிக்கும் வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது.

    'ஹுமா' என்ற ஒரு வகை வானப்பறவையின் நிழல் யார் மீது விழுகிறதோ அவர்கள் எப்போதும் அரச கிரீடத்தை அணிவார்கள் என்று நம்பப்படுகிறது. அதுபோல் இந்த குடை அமைக்கப்பட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது.

    இந்த சிம்மாசனம் தொடர்பாக சில கல்வெட்டுகளும் உள்ளன. அந்த கல்வெட்டுகளில், 'பூமியின் இறைவன்', 'சாமுண்டீஸ்வரி தேவியின் ஆசீர்வாதத்தால் பிரகாசிக்கும் சாமராஜாவின் மகன்' என்று கிருஷ்ணராஜ உடையாரை குறிப்பிட்டுள்ளனர்.

    மேலும் 'நீ கர்நாடக ரத்ன சிம்மாசனத்தின் இறைவன், உன்னுடைய உன்னதமான முன்னோர்களிடம் இருந்து நீங்கள் பெற்ற தங்க சிம்மாசனத்தின் தங்க குடை, உலகம் முழுவதும் பிரமிப்பை தூண்டுகிறது' என்று குறிப்பிட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த சிம்மாசனத்தில் தோராயமாக 280 கிலோ தங்கம் மற்றும் வைரம், நவ ரத்தினங்கள் பயன்படுத்தப்பட்டு உள்ளன. சிம்மாசனத்தின் 8 பாகங்களையும் சலபஞ்சிகா, சக்கரங்கள், குதிக்கும் குதிரைகள், குஷன் கொண்ட அரச இருக்கை, தலையணைகள், கந்தபெருண்டா உள்பட 8 பெயர்களில் கூறுவதும் குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×