search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    நீட் வினாத்தாள் கசிவு: பாட்னாவில் 4 மருத்துவ மாணவர்கள் கைது
    X

    நீட் வினாத்தாள் கசிவு: பாட்னாவில் 4 மருத்துவ மாணவர்கள் கைது

    • நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக பீகார், குஜராத் உள்ளிட்ட 6 மாநிலங்களில் சி.பி.ஐ. தீவிர விசாரணை நடத்தி வருகிறது.
    • விசாரணையின் முடிவில் 4 மாணவர்களையும் சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர்.

    பாட்னா:

    இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு கடந்த மே மாதம் 5-ந்தேதி நடந்தது. நாடு முழுவதும் உள்ள 571 நகரங்களில் அமைக்கப்பட்டிருந்த 4,750 தேர்வு மையங்களில் சுமார் 23 லட்சம் பேர் தேர்வு எழுதினர்.

    தேர்வு நடைபெறுவதற்கு ஒருநாள் முன்னதாக பீகார் தலைநகர் பாட்னாவில் வினாத்தாள் கசிந்தது தெரியவந்தது. அதே போல் ஜார்கண்ட், குஜராத், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் ஆள்மாறாட்டம் போன்ற முறைகேடுகள் நடைபெற்றது தெரிந்தது.

    இதுதொடர்பாக அந்தந்த மாநில போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் மத்திய கல்வி அமைச்சகத்தின் பரிந்துரையின் பேரில் இந்த வழக்குகள் அனைத்தும் சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டன. அதன்படி நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக பீகார், குஜராத் உள்ளிட்ட 6 மாநிலங்களில் சி.பி.ஐ. தீவிர விசாரணை நடத்தி வருகிறது.

    இந்த வழக்கில் நீட் தேர்வு வினாத்தாள்களை திருடி கசியவிட்ட முக்கிய குற்றவாளியான என்ஜினீயர் பங்கஜ் குமார் மற்றும் அவருக்கு உதவியாக இருந்த ராஜூ சிங் ஆகிய இருவரையும் கடந்த 16-ந் தேதி சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர். இவர்களையும் சேர்த்து நீட் முறைகேடு விவகாரத்தில் இதுவரை 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இந்த நிலையில் நீட் வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகள் விவகாரத்தில் பாட்னா எய்ம்ஸ் ஆஸ்பத்திரியை சேர்ந்த 4 இளநிலை மருத்துவ மாணவர்களுக்கு தொடர்பு இருப்பது சி.பி.ஐ.க்கு தெரியவந்தது.

    இதையடுத்து மருத்துவ மாணவர்களின் தங்கியிருந்த விடுதிக்கு சென்ற சி.பி.ஐ. அதிகாரிகள் 3-ம் ஆண்டு மருத்துவம் படித்து வரும் சந்தன் சிங், ராகுல் அனந்த், குமார் ஷனு மற்றும் 2-ம் ஆண்டு மருத்துவம் படித்து வரும் கரண் ஜெயின் ஆகிய 4 மாணவர்களை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். மேலும் அந்த மாணவர்கள் தங்கியிருந்த விடுதி அறையை சீல்வைத்த சி.பி.ஐ. அதிகாரிகள் அவர்களுக்கு சொந்தமான லேப்டாப் மற்றும் செல்போன்களை உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். பின்பு மாணவர்கள் 4 பேரையும் ரகசியமான இடத்தில் வைத்து சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரித்தனர். விசாரணையின் முடிவில் 4 மாணவர்களையும் சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர்.

    Next Story
    ×