என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
இந்தியா
![அடுத்த ஷிண்டே: பாஜகவுக்கு தாவும் பகவந்த் மான்.. ஆம் ஆத்மியில் விரிசல்.. 30 எம்எல்ஏ ரெடி - காங்கிரஸ் அடுத்த ஷிண்டே: பாஜகவுக்கு தாவும் பகவந்த் மான்.. ஆம் ஆத்மியில் விரிசல்.. 30 எம்எல்ஏ ரெடி - காங்கிரஸ்](https://media.maalaimalar.com/h-upload/2025/02/09/9112400-untitleddesign3.webp)
அடுத்த ஷிண்டே: பாஜகவுக்கு தாவும் பகவந்த் மான்.. ஆம் ஆத்மியில் விரிசல்.. 30 எம்எல்ஏ ரெடி - காங்கிரஸ்
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- மகாராஷ்டிரா விமானம் சண்டிகரில் தரையிறங்கும்போது, ஏக்நாத் ஷிண்டேவாக மாறும் முதல் பயணி பகவந்த் மான்.
- பகவந்த் மான் ஏற்கனவே மத்திய உள்துறை அமைச்சகத்துடன் தொடர்பில் இருப்பதாக தெரிவித்தார்.
டெல்லியில் நடைபெற்று முடிந்த சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்று பா.ஜ.க. தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க இருக்கிறது.
மொத்தமுள்ள 70 தொகுதிகளுக்குக் கடந்த 5-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. நேற்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கை முடிவுகளின் படி பா.ஜ.க. 48 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.
10 வருடங்களாக ஆட்சியில் இருந்த ஆம் ஆத்மி தோல்வியை தழுவியுள்ளது. அக்கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால், முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உள்ளிட்ட முக்கிய தலைவர்களும் தத்தமது தொகுதிகளில் தோல்வியை தழுவினர். 10 வருடங்களாக ஆம் ஆத்மி வசம் இருந்த டெல்லி தற்போது கைநழுவியுள்ளது.
இதற்கிடையே பஞ்சாபில் முதல்வர் பகவந்த் மான் தலைமையில் நடந்து வரும் ஆம் ஆத்மியின் பக்கம் அனைவரின் கவனமும் திரும்பியுள்ளது.
இதுதொடர்பாக பேசிய காங்கிரஸ் தலைவர் பிரதாப் சிங் பஜ்வா தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார். அதாவது, பகவந்த் மான் ஏற்கனவே மத்திய உள்துறை அமைச்சகத்துடன் தொடர்பில் இருப்பதாகவும், விரைவில் அவர் பாஜகவுக்கு மாறக்கூடும் என்றும் தெரிவித்துள்ளார்.
ஆம் ஆத்மி கட்சியின் பஞ்சாப் பிரிவில் விரிசல் ஏற்படக்கூடும் என்று பஜ்வா கணித்ததுள்ளார். மகாராஷ்டிராவின் ஏக்நாத் ஷிண்டே சிவசேனாவை உடைத்து பாஜக பக்கம் சாய்ந்ததை போன்ற முடிவை, பகவந்த் மான் தனது அரசியல் எதிர்காலம் கருதி எடுக்கக்கூடும் என்று மறைமுகமாக பஜ்வா தெரிவித்துள்ளார்.
"இந்த மகாராஷ்டிரா விமானம் சண்டிகரில் தரையிறங்கும்போது, ஏக்நாத் ஷிண்டேவாக மாறும் முதல் பயணி பகவந்த் மான் ஆவார்" என்று பஜ்வா கூறினார். மேலும் பஞ்சாபைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் கட்சியிலிருந்து விலகத் தயாராக இருப்பதாகவும் பஜ்வா கூறியுள்ளார்.
அரவிந்த் கெஜ்ரிவால் - பகவந்த் மான் இடையே விரிசல் ஏற்பட்டுள்ளதாக காங்கிரஸ் தலைவர் பிரதாப் சிங் பஜ்வா கூறியுள்ளது அரசியல் களத்தில் பேசுபொருளாகியுள்ளது. ஆம் ஆத்மியுடன் காங்கிரஸ் கூட்டணி வைத்து டெல்லி தேர்தலை எதிர்கொண்டிருந்தால் முடிவுகள் மாறியிருக்க அதிக வாய்ப்பிருந்ததாக அரசியல் நோக்கர்கள் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.