search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    நிரவ் மோடியை அழைத்து வர மத்திய அரசு தீவிரம்- 28 நாட்களில் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட வாய்ப்பு
    X

    நிரவ் மோடியை அழைத்து வர மத்திய அரசு தீவிரம்- 28 நாட்களில் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட வாய்ப்பு

    • தன்னுடைய மனநலம் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், தான் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டால் தற்கொலை செய்து கொள்ளக்கூடும் என்றும் நிரவ் மோடி மனுவில் தெரிவித்து இருந்தார்.
    • நீண்ட போராட்டத்திற்கு பிறகு நிரவ் மோடி விவகாரத்தில் மத்திய அரசுக்கு வெற்றி கிடைத்துள்ளது.

    புதுடெல்லி:

    வைர வியாபாரி நிரவ் மோடியும், அவரது உறவினரான மெகுல் சோக்சியும் பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.6 ஆயிரத்து 498 கோடி கடன் பெற்றனர். ஆனால் அவர்கள் அந்த கடனை முறையாக திருப்பிச் செலுத்தவில்லை.

    இதனால் அவர்கள் மீது கடந்த 2017-ம் ஆண்டு புகார் அளிக்கப்பட்டது. சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியது.

    இந்த வழக்கு தொடர்பான கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க 2018-ம் ஆண்டு ஜனவரி மாதம் அவர்கள் இருவரும் வெளிநாடு தப்பிச் சென்றனர். இங்கிலாந்தில் தஞ்சம் புகுந்த அவர்கள் அங்கு ரூ.26 கோடி மதிப்புள்ள சொகுசு பங்களாவில் தங்கி இருப்பது தெரிய வந்தது.

    இந்திய அரசின் வலியுறுத்தலின் பேரில் இங்கிலாந்து அரசு 2019-ம் ஆண்டு நிரவ் மோடியை கைது செய்து சிறையில் அடைத்தது. அதுமுதலே அவரை இந்தியாவுக்கு கொண்டு வரும் முயற்சிகளை மத்திய அரசு தீவிரமாக மேற்கொண்டு வந்தது.

    இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு நிரவ் மோடியை இந்தியாவுக்கு அனுப்புவதற்கு லண்டன் வெஸ்ட்மினிஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

    இந்த தீர்ப்பை எதிர்த்து இங்கிலாந்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய அனுமதி தருமாறு நிரவ் மோடி லண்டன் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை லண்டன் உயர்நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது.

    தன்னுடைய மனநலம் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், தான் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டால் தற்கொலை செய்து கொள்ளக்கூடும் என்றும் நிரவ் மோடி அந்த மனுவில் தெரிவித்து இருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், நிரவ் மோடியின் மனநலம் நல்ல நிலையிலேயே உள்ளது. அவரது மேல்முறையீட்டில் எந்த நியாயமும் இல்லை என்று கூறி அவரது மனுவை நிராகரித்தனர்.

    நிரவ் மோடியை இந்தியா கொண்டு வருவதற்காக மத்திய அரசு கடந்த 2018-ம் ஆண்டு முதல் 3 தடவை பல்வேறு வகைகளில் முயற்சி செய்தது குறிப்பிடத்தக்கது. தற்போது சட்ட ரீதியிலான நடவடிக்கைகள் அனைத்திலும் நிரவ் மோடி தோல்வியை சந்தித்து உள்ளார். இதனால் அவரை இந்தியாவுக்கு அழைத்து வரும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

    நிரவ் மோடி தற்போது லண்டன் வாண்ட்ஸ்வர்த் சிறையில் உள்ளார். விரைவில் அவர் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    நிரவ் மோடி வேறு மனு தாக்கல் செய்ய முடியாது என்பதால் அடுத்த 28 நாட்களில் அவர் இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இதன் மூலம் நீண்ட போராட்டத்திற்கு பிறகு நிரவ் மோடி விவகாரத்தில் மத்திய அரசுக்கு வெற்றி கிடைத்துள்ளது.

    Next Story
    ×