search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கிரிப்டோகரன்சி விஷயத்தில் ஒரு நாடு தனித்து செயல்பட முடியாது: நிர்மலா சீதாராமன் பேச்சு
    X

    கிரிப்டோகரன்சி விஷயத்தில் ஒரு நாடு தனித்து செயல்பட முடியாது: நிர்மலா சீதாராமன் பேச்சு

    • இந்தியாவை உலக நாடுகள் உற்று கவனித்து வருகின்றன.
    • 20 நாடுகள் சபையின் தலைவராக இந்தியா உள்ளது.

    பெங்களூரு:

    சிந்தனையாளர்கள் அமைப்பு சார்பில் கலந்துரையாடல் கூட்டம் பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டு பேசியதாவது:-

    கிரிப்டோகரன்சியை உலக நாடுகள் முறைப்படுத்த வேண்டும். அவ்வாறு செய்யாத பட்சத்தில் இந்தியா மட்டும் அதை முறைப்படுத்துவதால் சரியாக இருக்காது. 20 நாடுகள் சபையின் தலைவராக இந்தியா உள்ளது. இந்த ஜி20 நாடுகள் சபை கூட்டத்தில் இதுகுறித்து விவாதிக்க இந்தியா முடிவு செய்துள்ளது. இந்த சபை கூட்டத்தில் விவாத பொருளில் (அஜண்டா) கிரிப்டோகரன்சி விஷயமும் சேர்க்கப்பட்டுள்ளது.

    சர்வதேச நிதியம் (ஐ.எம்.எப்.) கிரிப்டோகரன்சி குறித்து அறிக்கை வழங்கியுள்ளது. அது நுண்ணிய பொருளாதாரத்தின் நிலைத்தன்மையை பாதிக்கும் என்று கூறியுள்ளது. ஜி20 நாடுகள் சபையால் உருவாக்கப்பட்டுள்ள நிதி நிலை தன்மை வாரியமும் (எப்.எஸ்.பி.) அதுகுறித்து அறிக்கை வழங்க ஒப்புக் கொண்டுள்ளது. அந்த அமைப்பும் நிதி நிலை தன்மை குறித்த விஷயத்தில் கவனம் செலுத்தும்.

    அந்த எப்.எஸ்.பி. அறிக்கை மற்றும் சர்வதேச நிதியக அறிக்கை குறித்து வருகிற ஜூலை மாதம் நடைபெறும் ஜி20 நாடுகளின் நிதி மந்திரிகள் மற்றும் மத்திய வங்கி கவர்னர்கள் மாநாட்டில் விவாதிக்க உள்ளோம். வருகிற செப்டம்பரில் ஜி20 நாடுகள் சபையின் பிரதமர்கள் மாநாடு நடக்கிறது. டிஜிட்டல் கரன்சிகள் முழுவதுமாக டிஜிட்டல் மயம், தொழில்நுட்பத்தை அடிப்படையாக கொண்டுள்ளது. சில நேரங்களில் அதன் அடையாளத்தை ஏற்படுத்துவது மிக கடினமானது. ஆனால் அது ஆற்றல் வளம் வாய்ந்தது. அதனால் அனைத்து நாடுகளுடன் இணைந்து செயல்பட வேண்டும்.

    இந்த விஷயத்தில் ஒரு நாடு தனித்து செயல்பட முடியாது. ஏனெனில் தொழில்நுட்பத்திற்கு எல்லை கோடுகள் கிடையாது. அதற்கு தொழில்நுட்பம் சார்ந்த விஷயங்கள் தேவைப்படுகிறது. இந்த முயற்சியில் அனைத்து நாடுகளும் இருக்க வேண்டும். இந்த விஷயத்தில் அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும். இல்லாவிட்டால் கிரிப்டோகரன்சி விஷயம் பயனுள்ளதாக இருக்காது.

    ஆனால் வினியோகிக்கப்படும் பதிவு தொழில்நுட்பத்தை நாங்கள் கட்டுப்படுத்துகிறோம் என்று அர்த்தம் இல்லை. அந்த பதிவு தொழில்நுட்பம் நல்ல நிலை, வளம் மற்றும் சொந்த பலத்தை கொண்டுள்ளது. இதை நாங்கள் எங்களின் மனதில் வைத்துள்ளோம். கொரோனா வைரஸ் பரவல், உக்ரைன்-ரஷியா போர் சூழலுக்கு மத்தியிலும் இந்தியா தனது வழியில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அதனால் இந்தியாவை உலக நாடுகள் உற்று கவனித்து வருகின்றன.

    கச்சா எண்ணெய் மற்றும் உரம் ஆகியவற்றை இந்தியா அதிகளவில் இறக்குமதி செய்கிறது. அதன் காரணமாக பணவீக்கம் ஏற்படுகிறது. இதற்கு எதிராக ஒவ்வொரு அரசும் செயல்பட்டு வருகிறது. இந்த சூழ்நிலைக்கு மத்தியிலும் இந்திய மக்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார். ஒவ்வொரு மாநிலத்திலும் பால் கூட்டுறவு அமைப்புகள் உள்ளன. நான் பெங்களூருவில் நந்தினி பால், இனிப்பு, தயிர் சாப்பிட்டேன். டெல்லியில் இருக்கும்போது, அமுல் நிறுவன பால் பொருட்களை பயன்படுத்துகிறேன்.

    டெல்லியில் நந்தினி பால் பொருட்கள் கிடைப்பது இல்லை. நான் அமுல் பொருட்களை வாங்குவதால் கர்நாடகத்திற்கு எதிராக இருக்கிறேன் என்று அர்த்தம் கிடையாது. கர்நாடகத்தில் நந்தினி பால் நிறுவனத்தை பலப்படுத்துவது என்பது தொடர்ந்து நடைபெறும். நந்தினி பொருட்கள் தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் கிடைக்கிறது.

    அதே போல் பிற மாநில பால் பொருட்கள் கர்நாடகத்தில் கிடைக்கிறது. இது ஒரு நல்ல போட்டி தான் என்று சொல்வேன். அதனால் தான் உலகில் அதிக பால் உற்பத்தி செய்யும் நாடாக இந்திய திகழ்கிறது. நந்தினி பால் நிறுவனத்தை அழிக்கவே அமுல் கொண்டு வரப்படுவதாக சொல்வது வெட்கக்கேடானது. காங்கிரஸ் ஆட்சியில் தான் அமுல் நிறுவன பால் பொருட்கள் கர்நாடகத்தில் அனுமதிக்கப்பட்டன.

    ஆனால் அந்த ஆட்சியில் முதல்-மந்திரியாக இருந்தவர் தற்போது அதுகுறித்து கேள்வி எழுப்புகிறார்கள். தற்போது தேர்தல் நேரம் என்பதால் இதை உணர்வு பூர்வமான விவகாரமாக மாற்றியுள்ளனர். அரசியல் விஷயங்களுக்குள் நமது விவசாயிகள், பெண்களை இழுக்க கூடாது. எடியூரப்பா ஆட்சியில் பாலுக்கு ஆதரவு விலையாக லிட்டருக்கு ரூ.2 வழங்கப்பட்டது. அதன் பிறகு அது ரூ.5 ஆக உயர்த்தப்பட்டது.

    இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.

    Next Story
    ×