search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    தமிழ்நாட்டுக்கு தண்ணீர் வழங்கவே முடியாது: காவிரி ஒழுங்காற்றுக்குழு கூட்டத்தில் கர்நாடகம் திட்டவட்டம்
    X

    தமிழ்நாட்டுக்கு தண்ணீர் வழங்கவே முடியாது: காவிரி ஒழுங்காற்றுக்குழு கூட்டத்தில் கர்நாடகம் திட்டவட்டம்

    • தமிழ்நாட்டில் இருந்து அரசு உறுப்பினர் எம்.சுப்பிரமணியன் பங்கேற்று பேசினார்.
    • தற்போது கர்நாடகத்தின் 4 முக்கிய அணைகளில் உள்ள நீர் இருப்பை கருத்தில்கொண்டு, தமிழ்நாட்டுக்கான சுற்றுச்சூழல் பற்றாக்குறை நீரை பிலிகுண்டுலுவில் உறுதிப்படுத்த வேண்டும்.

    புதுடெல்லி:

    காவிரி ஒழுங்காற்றுக்குழு கூட்டம் தலைவர் வினீத் குப்தா தலைமையில் டெல்லியில் இருந்து காணொலி வாயிலாக நேற்று நடைபெற்றது.

    இதில் சம்பந்தப்பட்ட 4 மாநில அதிகாரிகளும் ஆன்லைனில் பங்கேற்றனர். தமிழ்நாட்டில் இருந்து அரசு உறுப்பினர் எம்.சுப்பிரமணியன் பங்கேற்று பேசினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    கடந்த ஆண்டு ஜூன் 1-ந்தேதி முதல் கடந்த மாதம் 28-ந்தேதி வரை பிலிகுண்டுலுவில் தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய 174 டி.எம்.சி. நீரில் 78 டி.எம்.சி. மட்டுமே கர்நாடகம் தந்துள்ளது என்றும், மீதம் உள்ள 95 டி.எம்.சி. நீரை வழங்காமல் உள்ளது.

    இந்த ஆண்டு பிப்ரவரி 1-ந்தேதியில் இருந்து ஏப்ரல் 28-ந்தேதி வரை பிலிகுண்டுலுவில் கிடைக்க வேண்டிய சுற்றுச்சூழல் நீரின் அளவான 7.333 டி.எம்.சி. தண்ணீர் முழுமையாக கிடைக்கவில்லை. மாறாக 2.016 டி.எம்.சி. மட்டுமே கிடைத்துள்ளது.

    தற்போது கர்நாடகத்தின் 4 முக்கிய அணைகளில் உள்ள நீர் இருப்பை கருத்தில்கொண்டு, தமிழ்நாட்டுக்கான சுற்றுச்சூழல் பற்றாக்குறை நீரை பிலிகுண்டுலுவில் உறுதிப்படுத்த வேண்டும். அதுபோல மே மாதத்துக்கான சுற்றுச்சூழல் நீரின் அளவான 2.5 டி.எம்.சி. தண்ணீரையும் வழங்க கர்நாடகத்தை வலியுறுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதற்கிடையே இந்திய வானிலை ஆய்வுமைய உறுப்பினர், பிப்ரவரி 1-ந்தேதி முதல் ஏப்ரல் 29-ந்தேதி வரை கோடைமழை இயல்பைவிட குறைவாகவே பெய்துள்ளது என்றும், அடுத்த 2 வாரங்களுக்கு காவிரிப் படுகையில் வறண்ட வானிலையே நிலவும் என்றும் தெரிவித்தார்.

    இதனை ஒரு ஆதாரமாக எடுத்துக்கொண்ட கர்நாடக அரசின் உறுப்பினர், "கர்நாடக அணைகளில் தற்போது உள்ள தண்ணீர், கர்நாடகத்தின் குடிநீர் தேவைக்காக மட்டுமே போதுமானதாக இருக்கும். எனவே, தமிழ்நாட்டுக்கு மேலும் தண்ணீரை வழங்க முடியாது" என்று திட்டவட்டமாக கூறிவிட்டார்.

    இப்படி நீண்டநேரம் விவாதம் நீடித்தது. இதனைத்தொடர்ந்து ஒழுங்காற்றுக்குழு தலைவர் வினீத் குப்தா, மே மாதத்துக்கான சுற்றுச்சூழல் நீரின் அளவான 2.5 டி.எம்.சி. நீரை சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி பிலிகுண்டுலுவில் உறுதிப்படுத்த வேண்டும் என கர்நாடகத்தை வலியுறுத்தினார்.

    பின்னர் குழுவின் அடுத்த கூட்டத்தை வருகிற 16-ந்தேதி நடத்துவதாக தெரிவித்து கூட்டத்தை அவர் முடித்தார்.

    Next Story
    ×