என் மலர்
இந்தியா
வெள்ளி வென்ற நீரஜ் சோப்ராவுக்கு பிரதமர், குடியரசு தலைவர் வாழ்த்து
- நீரஜ் சோப்ரா எதிர்கால வீரர்களுக்கு ஊக்கமாக இருப்பார்.
- நீரஜ் சோப்ரா இந்தியாவுக்கு மேலும் பல பதக்கங்களை வென்று கொடுப்பார்.
ஒலிம்பிக் போட்டிகள் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது. 206 நாட்டு வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள இந்த விளையாட்டு திருவிழா இறுதிகட்டத்தை எட்டியது. இதில் ஆடவர் ஈட்டி எறிதல் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது.
ஈட்டி எறிதலில் இந்தியா சார்பில் களமிறங்கிய நீரஜ் சோப்ரா 89.45 தூரத்திற்கு வீசி 2 ஆவது இடம் பிடித்தார். இதனால் இந்தியாவுக்கு ஈட்டி எறிதலில் வெள்ளிப் பதக்கம் கிடைத்தது. வெள்ளிப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான எக்ஸ் தள பதிவில் அவர், "நீரஜ் சோப்ரா சிறந்த ஆளுமை. மீண்டும் மீண்டும் அவர் தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார். அவர் மீண்டும் ஒரு ஒலிம்பிக் வெற்றியுடன் வருவதால் இந்தியா மகிழ்ச்சி அடைந்துள்ளது. வெள்ளிப் பதக்கம் வென்ற அவருக்கு வாழ்த்துகள். எதிர்காலத்தில் வரவிருக்கும் எண்ணற்ற விளையாட்டு வீரர்களின் கனவுகளை நனவாக்கி நம் தேசத்தை பெருமை கொள்ள செய்வதற்கு அவர் ஊக்கமாக இருப்பார்," என பதிவிட்டுள்ளார்.
குடியரசு தலைவர் திரவுபதி முர்மு தனது எக்ஸ் தள பதிவில், "பாரிஸ் ஒலிம்பிக்கில் வெள்ளி வென்று வரலாற்று சாதனை படைத்துள்ள நீரஜ் சோப்ராவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். ஒலிம்பிக் போட்டிகளில் தொடர்ச்சியாக தங்கம், வெள்ளிப் பதக்கம் வென்ற முதல் இந்தியர் அவர். அவரால் இந்தியா பெருமை கொள்கிறது. அவரது சாதனை வரவிருக்கும் தலைமுறையினருக்கு ஊக்கமளிக்கும். எதிர்காலத்தில் இந்தியாவுக்காக மேலும் பல பதக்கங்கள் மற்றும் பெருமையை நீரஜ் சோப்ரா பெற்றுத் தருவார் என இந்தியா எதிர்நோக்குகிறது," என குறிப்பிட்டுள்ளார்.