என் மலர்
இந்தியா
துவாரகாவில் நீருக்கடியில் மூழ்கி பிரார்த்தனை- வைரலாகும் பிரதமர் மோடியின் புகைப்படங்கள்
- துவாரகா, பல நூற்றாண்டுகளுக்கு முன்பு கடலுக்கு அடியில் மூழ்கியதாக நம்பப்படுகிறது.
- பிரதமர் மோடி ஸ்கூபா கியர் அணிந்து கடலில் இறங்கினார்.
குஜராத்தில் 4 வழி கொண்ட கேபிள் பாலத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். இந்தியாவின் மிக நீண்ட கேபிள் பாலமாக இது கருதப்படுகிறது. மக்கள் பயன்பாட்டிற்கு உள்ள இந்த பாலத்திற்கு சுதர்சன் சேது அல்லது சுதர்சன் பாலம் என்று பெயரிடப்பட்டுள்ளது.
ஒரு காலத்தில் செழித்து வளர்ந்த நகரமாக இருந்த துவாரகா, பல நூற்றாண்டுகளுக்கு முன்பு கடலுக்கு அடியில் மூழ்கியதாக நம்பப்படுகிறது.
பேய்ட் துவாரகா தீவுக்கு அருகில் உள்ள துவாரகா கடற்கரையில் ஸ்கூபா டைவிங் நடத்தப்படுகிறது. தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால் அகழ்வாராய்ச்சி செய்யப்பட்ட பண்டைய துவாரகாவின் பொருட்களை நீருக்கடியில் மக்கள் காணலாம்.
இன்று, வரலாற்று மற்றும் ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் பிரார்த்தனை செய்ய பிரதமர் மோடி ஸ்கூபா கியர் அணிந்து கடலில் இறங்கிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
பிரதமர் மோடி நீருக்கடியில், கிருஷ்ணருக்கு அடையாளமாக மயில் இறகுகளை கொண்டுபோய் காணிக்கையாக செலுத்தினார்.
இதுகுறித்து தனது அனுபவத்தைப் பிரதமர் மோடி பகிர்ந்து கொண்டார்.
தண்ணீரில் மூழ்கியிருக்கும் துவாரகா நகரில் பிரார்த்தனை செய்வது மிகவும் தெய்வீகமான அனுபவம். ஆன்மீக மகத்துவம் மற்றும் காலத்தால் அழியாத பக்தி கொண்ட ஒரு பண்டைய சகாப்தத்துடன் நான் இணைந்திருந்தேன். பகவான் ஸ்ரீ கிருஷ்ணா. எங்கள் அனைவரையும் ஆசீர்வதிக்கவும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.