search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பா.ஜனதா கூட்டணியில் சேர சந்திரசேகர ராவ் விரும்பினார்: பிரதமர் மோடி தகவல்
    X

    பா.ஜனதா கூட்டணியில் சேர சந்திரசேகர ராவ் விரும்பினார்: பிரதமர் மோடி தகவல்

    • ஐதராபாத் மாநகராட்சியை கைப்பற்ற தங்கள் கட்சிக்கு பா.ஜனதா ஆதரவு அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
    • தெலுங்கானா வளர்ச்சி திட்டங்களுக்காக மத்திய அரசு கொடுக்கும் நிதியை தெலுங்கானா அரசு கொள்ளையடித்து வருகிறது.

    நிஜாமாபாத்:

    பிரதமர் மோடி நேற்று தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத்துக்கு சென்றார். அங்கு நடந்த பா.ஜனதா பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டார். அதில் அவர் பேசியதாவது:-

    நான் ஒரு ரகசியம் சொல்கிறேன். ஐதராபாத் மாநகராட்சி தேர்தலுக்கு முன்பெல்லாம், தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் என்னை வரவேற்க வருவார். அந்த தேர்தலுக்கு பிறகு அவர் வரவேற்க வருவது இல்லை.

    திடீரென்று என்ன கோபம்? ஐதராபாத் மாநகராட்சி தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. அப்போது, சந்திரசேகர ராவ் என்னை டெல்லிக்கு வந்து சந்தித்தார்.

    ஒரு அழகிய சால்வையை போர்த்தி எனக்கு மரியாதை செய்தார். பிறகு அவர், பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் சேர விரும்புவதாக தெரிவித்தார். பதிலுக்கு என்ன செய்ய வேண்டும் என்று கேட்டேன். ஐதராபாத் மாநகராட்சியை கைப்பற்ற தங்கள் கட்சிக்கு பா.ஜனதா ஆதரவு அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

    ஆனால், உங்கள் தவறான செயல்களால், உங்களை கூட்டணியில் சேர்த்துக் கொள்ள முடியாது என்று கூறி, அவரது கோரிக்கையை நிராகரித்து விட்டேன். ஐதராபாத் மாநகராட்சியில் பா.ஜனதா எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்தாலும் பரவாயில்லை என்று கூறிவிட்டேன்.

    அதன்பிறகுதான் என்னை நேருக்குநேர் சந்திப்பதை சந்திரசேகர ராவ் தவிர்க்க தொடங்கினார். நான் சொல்வது 100 சதவீதம் உண்மை.

    தெலுங்கானா ஆட்சிப்பொறுப்பை தன்னுடைய மகன் கே.டி.ராமாராவிடம் ஒப்படைக்க விரும்புவதாகவும் சந்திரசேகர ராவ் என்னிடம் கூறினார். அதற்கு நான், அப்படி செய்யாதீர்கள். இது மன்னர் ஆட்சியல்ல, ஜனநாயகம் என்று கூறினேன்.

    தெலுங்கானா வளர்ச்சி திட்டங்களுக்காக மத்திய அரசு கொடுக்கும் நிதியை தெலுங்கானா அரசு கொள்ளையடித்து வருகிறது. கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு பாரத ராஷ்டிர சமிதி மறைமுக ஆதரவு கொடுத்தது.

    எனவே, தாய்மார்களும், சகோதரிகளும் உஷாராக இருக்க வேண்டும். தெலுங்கானா சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவை ஆதரிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    முன்னதாக, நிஜாமாபாத்தில் நடந்த அரசு நிகழ்ச்சியில், பிரதமர் மோடி, ரூ.8 ஆயிரம் கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், நிறைவடைந்த திட்டங்களை தொடங்கியும் வைத்தார்.

    அவற்றில், தெலுங்கானா சூப்பர் அனல்மின் திட்டத்தின் முதலாவது அலகு திறப்பும் அடங்கும். அந்த ஆலை, 800 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யவல்லது.

    மனோகராபாத்தையும், சித்திப்பேட்டையும் இணைக்கும் புதிய ரெயில் பாதை, 2 ரெயில்வே வழித்தடங்களை மின்மயமாக்கும் திட்டம் ஆகியவையும் அடங்கும்.

    அந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசுகையில், இன்னும் சில மாதங்களில், அனைத்து ரெயில் பாதைகளும் 100 சதவீதம் மின்மயமாக்கப்படும் என்று கூறினார்.

    Next Story
    ×