என் மலர்
இந்தியா
குருவாயூர் கோவிலில் பிரதமர் மோடி வழிபாடு: சுரேஷ்கோபியின் மகள் திருமணத்திலும் பங்கேற்றார்
- பிரதமர் மோடி பாரம்பரிய உடை அணிந்து கோவிலுக்கு வந்து வழிபாடு நடத்தினார்.
- பிரதமர் மோடிக்கு நடிகர் சுரேஷ்கோபி தங்க தகடு ஒன்றை பரிசாக வழங்கினார்.
திருவனந்தபுரம்:
பிரதமர் நரேந்திரமோடி கடந்த 3-ந்தேதி கேரளாவில் சுற்றுப்பயணம் செய்த நிலையில், தற்போது 2-வது முறையாக கேரளா வந்துள்ளார். அவர் நேற்று மாலை தனி விமானத்தில் எர்ணாகுளம் மாவட்டம் கொச்சிக்கு வந்தார்.
பின்பு பிரதமர் மோடி கொச்சியில் நடந்த பிரமாண்ட ரோடு-ஷோவில் பங்கேற்றார். திறந்த வாகனத்தில் நின்றபடி சென்ற பிரதமர் மோடியை சாலையில் இருபுறமும் நின்ற பாரதிய ஜனதா தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மலர் தூவி வரவேற்றனர். பின்னர் கொச்சியில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் இரவில் தங்கினார்.
பிரதமர் மோடி இன்று காலை குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் வழிபாடு நடத்தினார். இதற்காக அவர் கொச்சியில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக குருவாயூருக்கு வந்தார். அவர் இன்று காலை 7.35 மணியளவில் ஸ்ரீகிருஷ்ண கல்லூரி மைதானத்தில் ஹெலிகாப்டரில் வந்து இறங்கினார். பின்பு அங்கிருந்து காரில் குருவாயூர் கோவிலுக்கு சென்றார்.
பிரதமர் மோடி பாரம்பரிய உடை அணிந்து கோவிலுக்கு வந்து வழிபாடு நடத்தினார். அவர் கோவிலின் அனைத்து பகுதிகளுக்கும் நடந்து சென்று வழிபட்டார். சுமார் 1 மணி நேரம் குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் வழிபாட்டில் ஈடுபட்டார்.
அதன் பிறகு காலை 8.45 மணியளவில் குருவாயூர் கோவிலில் நடந்த முன்னாள் பாரதிய ஜனதா கட்சி எம்.பி.யான நடிகர் சுரேஷ்கோபியின் மகள் திருமணத்தில் பிரதமர் மோடி கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். பிரதமர் மோடிக்கு நடிகர் சுரேஷ்கோபி தங்க தகடு ஒன்றை பரிசாக வழங்கினார்.
திருமண நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு குருவாயூர் கோவிலில் இருந்து புறப்பட்ட பிரதமர் மோடி, திருப்பாறையாறு ஸ்ரீராம சுவாமி கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தினார். பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு குருவாயூர் கிருஷ்ணர் கோவில் மற்றும் திருப்பாறையாறு ஸ்ரீராமசுவாமி கோவிலில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.
பின்னர் ஹெலிகாப்டர் மூலம் கொச்சிக்கு செல்லும் பிரதமர் மோடி, அங்கு கடற்படைக்கு சொந்தமான சர்வதேச கப்பல் பழுது நீக்கும் மையத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கப்பல் மராமத்து உலர் பணியகத்தை தொடங்கி வைக்கிறார்.
அதன் பிறகு எர்ணாகுளம் அருகே மரைன் டிரைவ் பகுதியில் பாரதிய ஜனதா சார்பில் நடக்கும் சக்தி கேந்திரா பொறுப்பாளர்கள் கூட்டத்தில் பங்கேற்கிறார். பின்னர் நரேந்திரமோடி டெல்லிக்கு புறப்பட்டு செல்கிறார்.
பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு குருவாயூர் மற்றும் கொச்சியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.