search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    வாரணாசியில் நாளை மறுநாள் பிரதமர் மோடி 6 கி.மீ. தூரம் பிரமாண்ட ரோடு-ஷோ
    X

    வாரணாசியில் நாளை மறுநாள் பிரதமர் மோடி 6 கி.மீ. தூரம் பிரமாண்ட 'ரோடு-ஷோ'

    • 13, 14-ந்தேதிகளில் பிரதமர் மோடியை வாரணாசியில் எந்தெந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்க செய்வது என்று கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது.
    • வாரணாசியில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளை உத்தரபிரதேச மாநில அரசு செய்து வருகிறது.

    வாரணாசி:

    பாராளுமன்றத்துக்கு நடத்தப்பட்டு வரும் 7 கட்ட தேர்தல்களில் இதுவரை 3 கட்ட தேர்தல் முடிந்துள்ளது. 4-வது கட்ட தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு நாளை மறுநாள் (திங்கட்கிழமை) நடைபெற உள்ளது.

    5-வது, 6-வது கட்ட தேர்தலுக்கான பிரசாரம் தற்போது வட மாநிலங்களில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஜூன் 1-ந்தேதி இறுதி 7-வது கட்ட தேர்தல் நடைபெற உள்ளது.

    7-வது கட்ட தேர்தலுக்கான மனுதாக்கல் கடந்த 7-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது. வருகிற 14-ந்தேதி மனுதாக்கல் செய்ய கடைசி நாளாகும். பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியில் 7-வது கட்ட தேர்தல் நடத்தப்பட இருக்கிறது.

    வாரணாசி தொகுதியில் கடந்த 2014 மற்றும் 2019-ம் ஆண்டுகளில் 2-வது தடவை வெற்றி பெற்றுள்ள பிரதமர் மோடி தற்போது 3-வது முறையாக களம் இறங்கி உள்ளார். முந்தைய தேர்தல்களை விட இந்த தடவை வாரணாசி தொகுதியில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாதனை படைக்க வேண்டும் என்று பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார்.

    இதற்காக பிரதமர் மோடி வாரணாசி தொகுதியில் தேர்தல் பணிக்குழுக்களை ஏற்படுத்தி இருக்கிறார். அவர்கள் வீடு வீடாக சென்று பிரதமர் மோடிக்கு ஆதரவு திரட்டி வருகிறார்கள். இந்த நிலையில் பிரதமர் மோடி வருகிற 13, 14-ந்தேதிகளில் வாரணாசியில் தங்கி வேட்புமனு தாக்கல் செய்யவும், பிரசாரம் செய்யவும் திட்டமிட்டு இருக்கிறார்.

    பிரதமரின் இந்த 2 நாள் பயணம் தொடர்பாக பா.ஜ.க. தலைவர்கள் நேற்று ஆலோசனை நடத்தினார்கள். 13, 14-ந்தேதிகளில் பிரதமர் மோடியை வாரணாசியில் எந்தெந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்க செய்வது என்று கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது.

    இன்று பிரதமரின் வாரணாசி பயண திட்டத்துக்கு இறுதி வடிவம் கொடுக்கப்படுகிறது.

    நாளை மறுநாள் (13-ந்தேதி) மதியம் வாரணாசி செல்லும் பிரதமர் மோடி முதலில் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்துக்கு செல்கிறார். அங்கு பல்கலைக்கழக வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள மதன்மோகன் மாள்வியா சிலைக்கு மாலை அணிவிக்கிறார்.

    அதன் பிறகு அங்கிருந்து அவர் ரோடு ஷோ நடத்துகிறார். அந்த ரோடு ஷோ வாரணாசியின் முக்கிய சாலைகள் வழியாக நடைபெற உள்ளது. சுமார் 6 கிலோ மீட்டர் தூரம் பிரதமர் மோடி ரோடு ஷோ நடத்தி தனக்கு ஆதரவு திரட்டுவார் என்று தெரியவந்துள்ளது.

    அந்த ரோடு ஷோவில் பிரதமருடன் அமித்ஷா, நட்டா, ராஜ்நாத்சிங் உள்பட பா.ஜ.க. மூத்த தலைவர்கள், மத்திய மந்திரிகள் பங்கேற்க உள்ளனர். ரோடு ஷோவின் போது வழிநெடுக பிரதமர் மோடிக்கு பிரமாண்ட வரவேற்பு கொடுக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

    6 கிலோ மீட்டர் தூர ரோடு ஷோவில் பிரதமர் மோடி 12-க்கும் மேற்பட்ட இடங்களில் வாகனத்தை நிறுத்தி மக்களின் வாழ்த்துகளை பெற்றுக்கொள்வார். அப்போது மக்களுடன் மோடி கலந்துரையாடவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதை கருத்தில் கொண்டு மோடியின் வாகன பேரணி நடக்கும் 6 கிலோ மீட்டர் தொலைவிலும் சாலையின் இருபுறமும் லட்சக்கணக்கான மக்கள் திரள்வார்கள் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

    இதையொட்டி வாரணாசியில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளை உத்தரபிரதேச மாநில அரசு செய்து வருகிறது. மோடியின் ரோடு ஷோ வாரணாசியில் கங்கை கரையில் உள்ள தசப்வம்தே காட் என்ற இடத்தில் நிறைவு பெறுகிறது.

    அங்கு கங்கை கரையில் சிறப்பு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு கங்கைக்கு ஆரத்தி எடுத்து வழிபாடு செய்ய உள்ளார். அவருடன் ஏராளமான பா.ஜ.க. நிர்வாகிகள் ஆரத்தியில் ஈடுபட உள்ளனர்.

    அதன் பிறகு அன்று இரவு பிரதமர் மோடி வாரணாசியில் தங்குகிறார். அன்று இரவு வாரணாசி தொகுதி பா.ஜ.க. முக்கிய நிர்வாகிகள் பிரதமர் மோடியை சந்தித்து பேசவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    மறுநாள் (14-ந்தேதி) செவ்வாய்க்கிழமை காலை பிரதமர் மோடி வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் ஆலயத்துக்கு செல்கிறார். அங்கு அவர் சிறப்பு வழிபாடுகள் செய்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. ஆலய தரிசனம் முடிந்ததும் வாரணாசியில் நடக்கும் பா.ஜ.க. ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கிறார்.

    அந்த ஆலோசனை கூட்டத்தில் வாரணாசி தொகுதி பா.ஜ.க. பூத் கமிட்டி உறுப்பினர்கள், நிர்வாகிகள் அனைவரும் பங்கேற்கிறார்கள். அவர்கள் மத்தியில் தேர்தல் பணி தொடர்பாக பிரதமர் மோடி உரையாற்ற இருக்கிறார். பா.ஜ.க.வுக்கு ஆதரவு திரட்டுவது தொடர்பாக அப்போது பிரதமர் மோடி அறிவுரை வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    அந்த ஆலோசனை கூட்டம் முடிந்த பிறகு பிரதமர் மோடி தனது வேட்பு மனுவை தாக்கல் செய்ய புறப்படுகிறார். மதியம் குறிப்பிட்ட நேரத்தில் அவர் மனுதாக்கல் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    வேட்புமனு தாக்கல் செய்த பிறகு மீண்டும் வாரணாசியில் ஆதரவு திரட்ட உள்ளார். அன்று டெல்லி திரும்பும் அவர் மீண்டும் வாரணாசி தொகுதிக்கு சென்று பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளார்.

    Next Story
    ×