என் மலர்
இந்தியா

'டைம்' இதழின் 2025 ஆம் ஆண்டின் சிறந்த பெண்ணாக தேர்வான பூர்ணிமா தேவி.. யார் இவர்? - பின்னணி என்ன?

- அப்பகுதி மக்களின் அறியாமையை கண்ட பூர்ணிமா தேவி தனது முனைவர் பட்ட ஆராய்ச்சியை இடைநிறுத்தினார்.
- "ஹார்கில்லா ஆர்மி" என்ற 10,000 பெண்களை கொண்ட குழுவை உருவாக்கி நடத்தி வருகிறார்.
வனவிலங்குகள் பாதுகாப்பிற்கான சிறந்த பங்களிப்புகளுக்காக, இந்திய பாதுகாவலர் பூர்ணிமா தேவி பர்மன்(45), டைம் பத்திரிகையின் 2025 ஆம் ஆண்டின் சிறந்த பெண்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளார்.
மொத்தம் 13 பேரை கொண்ட இந்த கவுரவமிக்க பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒரே இந்தியப் பெண்மணி பூர்ணிமா தேவி ஆவார்.
அசாமின் காம்ரூப் பகுதியில் பிறந்த பூர்ணிமா தேவி பர்மன் கவுகாத்தி பல்கலைக்கழகத்தில் பயின்றார். அங்கு அவர் விலங்கியல் துறையில் சூழலியல் மற்றும் வனவிலங்கு உயிரியலில் முதுகலைப் பட்டம் பெற்றார்.
2007 இல் தனது முனைவர் பட்டத்திற்கான ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தபோது, ஒரு வீட்டு உரிமையாளர் அருகில் இருந்த நாரை கூடு கட்டிய மரத்தை வெட்டுவதை பார்த்தார். இதுகுறித்து உரிமையாளரிடம் கேட்டபோது நாரை கெட்ட சகுனம் என்றும் அவை நோய்களை பரப்பும் என்றும் பதிலளித்தார். இந்த பதில் பூர்ணிமாவின் வாழ்க்கையையே மாற்றியது.
அப்பகுதி மக்களின் அறியாமையை கண்ட பூர்ணிமா தேவி தனது முனைவர் பட்ட ஆராய்ச்சியை இடைநிறுத்திவிட்டு, வன உயிர்கள் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழலுக்கான அதன் முக்கியத்துவம் குறித்த முழு நேர பிரசாரங்களில் ஈடுபடத் தொடங்கினார்.
நாரைகள் பாதுகாப்பிலிருந்து தனது பயணத்தை தொடங்கிய அவர், உள்ளூர் சமூகங்களிடம் வன உயிடீகள் பாதுகாப்பு விழ்ப்புணர்வு ஏற்படுத்துவற்காக "ஹார்கில்லா ஆர்மி" என்ற 10,000 பெண்களை கொண்ட குழுவை உருவாக்கி நடத்தி வருகிறார். இந்த அமைப்பு பறவைகளின் கூடு கட்டும் இடங்களைப் பாதுகாத்தல், காயமடைந்த நாரைகள், பிற வன உயிரிகளுக்கு சிகிச்சை அளித்த மறுவாழ்வு ஏற்படுத்துதல் உள்ளிட்ட செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகிறது.
இதோடு மட்டுமல்லாமல் இந்த அமைப்பு மூலம் பெண்களுக்கு தறிகள் மற்றும் நூல் நெசவு இயந்திரங்கள் வழங்கப்படுகின்றன. இதன்மூலம் துணிகளை நெசவு செய்து அவற்றை விற்கும் தொழில்முனைவோராக பல பெண்கள் மாறியுள்ளனர்.
மூத்த வனவிலங்கு உயிரியலாளராக அறியப்பட்ட பூர்ணிமா தேவி, WiNN (இயற்கை வலையமைப்பில் பெண்கள்) அமைப்பின் இந்திய பிரிவு இயக்குநராகவும், சர்வதேச இயற்கை பாதுகாப்பு ஒன்றியம் (IUCN) நாரை, ஐபிஸ் மற்றும் ஸ்பூன்பில் பறவைகள் நிபுணர் குழுவின் உறுப்பினராகவும் உள்ளார்.
2017 ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திடமிருந்து இந்தியப் பெண்களுக்கான மிக உயர்ந்த சிவில் விருதான 'நாரி சக்தி புரஸ்கார்' விருதை பூர்ணிமா தேவி பெற்றார். அதே ஆண்டில், இங்கிலாந்து இளவரசி ராயல் அன்னே வழங்கிய கிரீன் ஆஸ்கார் என்று அழைக்கப்படும் விட்லி விருதையும் பூர்ணிமா தேவி பெற்றார்.