search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கேரளா, தமிழ்நாடு, லட்சத்தீவுகளில் ஜனாதிபதி திரவுபதி முர்மு 6 நாள் சுற்றுப்பயணம்
    X

    கேரளா, தமிழ்நாடு, லட்சத்தீவுகளில் ஜனாதிபதி திரவுபதி முர்மு 6 நாள் சுற்றுப்பயணம்

    • கேரளா நிகழ்ச்சிகள் முடிந்த பின்னர் அவர் நாளை மறுநாள் தனி ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வருகிறார்.
    • கேரளா சுற்றுப்பயணம் முடிந்த பின்னர் ஜனாதிபதி திரவுபதி முர்மு லட்சத்தீவுக்கு செல்கிறார்.

    திருவனந்தபுரம்:

    ஜனாதிபதி திரவுபதி முர்மு தென்மாநிலங்களில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.

    தமிழ்நாட்டிற்கு கடந்த மாதம் 18-ந் தேதி மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மற்றும் கோவையில் உள்ள ஈசா மையத்திற்கு சென்றார். இந்த நிலையில் அவர் இன்று மாலை கேரளா வருகிறார்.

    கொச்சியில் உள்ள கடற்படை தளத்திற்கு செல்லும் அவர் அங்கு முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதல் விமானம் தாங்கி போர்க்கப்பலை பார்வையிடுகிறார்.

    இன்று இரவு கொச்சியில் தங்கும் அவர் நாளை (17-ந்தேதி) காலை மாதா அமிர்தானந்தாமயி தேவி மடத்திற்கு செல்கிறார். பின்னர் திருவனந்தபுரத்தில் நடைபெறும் நிகழ்ச்சியிலும் பங்கேற்கிறார்.

    தொடர்ந்து கேரளாவின் டிஜிட்டல் பல்கலைக்கழகத்தால் மலையாளத்தில் மொழி பெயர்க்கப்பட்ட டிப்ளமோ மற்றும் என்ஜினீயரிங் தொழில்நுட்ப புத்தகங்களையும் வெளியிடுகிறார்.

    கேரளா நிகழ்ச்சிகள் முடிந்த பின்னர் அவர் நாளை மறுநாள் (18-ந்தேதி) தனி ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வருகிறார். கன்னியாகுமரியில் கடல் நடுவே உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்கு தனி படகில் செல்கிறார்.

    தொடர்ந்து விவேகானந்தபுரத்தில் உள்ள விவேகானந்தா கேந்திராவுக்கு செல்கிறார். அங்கு ராமாயண சித்திர தரிசன கூடத்தை பார்வையிடுகிறார். இந்த நிகழ்ச்சிகளை முடித்துகொண்டு அவர் மீண்டும் கேரளா செல்கிறார்.

    கேரளா சுற்றுப்பயணம் முடிந்த பின்னர் ஜனாதிபதி திரவுபதி முர்மு லட்சத்தீவுக்கு செல்கிறார். அங்கு கவரட்டி தீவில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். பின்னர் அங்கு மகளிர் சுய உதவி குழுவினரை சந்தித்து கலந்துரையாடுகிறார்.

    கேரளாவுக்கு இன்று வரும் ஜனாதிபதி திரவுபதி முர்மு கேரளா, தமிழ்நாடு மற்றும் லட்சத்தீவுகளில் 6 நாட்கள் சுற்றுப்பயணம் செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×