என் மலர்
இந்தியா
அறுவை சிகிச்சையின்போது டவலை வயிற்றில் வைத்து தைத்த மருத்துவர்கள்: 3 மாதம் கடும் வலியால் துடித்த பெண்
- வயிற்று வலி காரணமாக, அந்த பெண்ணால் குறைவாகவே சாப்பிட முடிந்துள்ளது.
- பெரிய அளவிலான துண்டு அந்த பெண்ணின் குடலில் சிக்கி இருந்தது.
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள அரசு மருத்துவமனையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஒரு பெண்ணுக்கு சிசேரியன் பிரசவம் நடந்தது. மருத்துவர்கள் அறுவை சிகிச்சையின்போது தவறுதலாக அந்த பெண்ணின் வயிற்றில் டவலை வைத்து தைத்துள்ளனர். இதையடுத்து அந்த பெண் கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டார்.
மருத்துவர்களின் அலட்சியப் போக்கை அறியாமல் பல மருத்துவமனைகள், மருத்துவர்களிடம் சென்று சுமார் 3 மாதங்களாக அந்த பெண் வயிற்று வலிக்கு சிகிச்சை பெற்றுள்ளார். ஆனாலும் வலி குறையவில்லை. இறுதியாக எய்ம்ஸ் மருத்துவமனையில் அந்த பெண்ணின் வயிற்றில் 15x10 செமீ துண்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து எய்ம்ஸ் மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து அவரது வயிற்றில் இருந்த டவலை அகற்றினர்.
வயிற்று வலி காரணமாக, அந்த பெண்ணால் குறைவாகவே சாப்பிட முடிந்துள்ளது. இது அவளது தாய்ப்பாலின் உற்பத்தியை கணிசமாகக் குறைத்துள்ளது. இதன் விளைவாக பிறந்த குழந்தைக்கு வெளியில் இருந்து பால் கொடுக்க வேண்டியிருந்தது.
இருப்பினும், சிஎம்எச்ஓ (Chief Medical Health Officer) அனில் ஜூடியா, இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த ஒரு குழுவை அமைத்துள்ளார் மற்றும் அறிக்கை கிடைத்த பிறகு நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.
இதுதொடர்பாக, குடும்ப உறுப்பினர் மன்மோகன் கூறுகையில், அவர் மூன்று மாதங்களாக கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டார். ஆனால் வயிற்று வலிக்கான காரணத்தை கண்டுபிடிக்க முடியவில்லை. கூச்சமான் அரசு மருத்துவமனையிலும், மக்ரானாவில் உள்ள தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளிலும் அவர் சிகிச்சை பெற்றார்.
அஜ்மீரில் கூட மருத்துவர்கள் சிடி ஸ்கேன் செய்து, அவரது வயிற்றில் ஒரு கட்டி இருப்பதாக தெரிவித்தனர். இருப்பினும், அவரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோதுதான் மருத்துவர்களின் அலட்சியம் தெரியவந்துள்ளது.
அறுவை சிகிச்சை நிபுணர் சுபாஷ் சோனி கூறுகையில், சிடி ஸ்கேன் மூலம் அவரது வயிற்றுக்குள் ஏதோ இருப்பது தெரியவந்தது, அறுவை சிகிச்சையை முடிவு செய்ய மருத்துவர்களைத் தூண்டியது. அறுவை சிகிச்சையின்போது, ஒரு துண்டு கண்டுபிடிக்கப்பட்டது மருத்துவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பெரிய அளவிலான துண்டு அந்த பெண்ணின் குடலில் சிக்கி இருந்தது. வலியைத் தாங்கிய 3 மாதங்களில், அந்தப் பெண் நிவாரணத்திற்காக பல்வேறு மருந்துகளை உட்கொண்டுள்ளார். இது அவரது உடலில் உள்ள மற்ற உறுப்புகளையும் பாதித்துள்ளது" என்றார்.
அந்த பெண் நவம்பர் 15-ந்தேதி எய்ம்ஸில் அனுமதிக்கப்பட்டார். நவம்பர் 17-ம் தேதி அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அறுவை சிகிச்சை சுமார் ஐந்து மணி நேரம் நீடித்தது. சுமார் எட்டு நாட்கள் மருத்துவமனையில் இருந்த அந்த பெண் தற்போது டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.