search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    புதுச்சேரியில் இருந்து பெங்களூரு-ஐதராபாத்துக்கு மீண்டும் விமான சேவை
    X

    புதுச்சேரியில் இருந்து பெங்களூரு-ஐதராபாத்துக்கு மீண்டும் விமான சேவை

    • ராம் பாபு மஹதே தலைமையிலான குழுசாத்தியக் கூறுகளை ஆய்வு செய்தனர்.
    • ஜூலை 1 முதல் இரு நகரங்களுக்கும் மீண்டும் விமானங்கள் இயக்கப்பட உள்ளது.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் இருந்து ஐதராபாத், பெங்களூரு நகரங்களுக்கு ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் தினசரி விமான சேவையை வழங்கி வந்தது.

    இதற்கிடையே இந்தாண்டு மார்ச் மாதம் முதல் தற்காலிகமாக விமான சேவை நிறுத்தப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதற்கிடையே புதுச்சேரியில் இருந்து விமான சேவையை தொடங்க புதுச்சேரி அரசு பல்வேறு நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்தது.

    தொடர்ந்து இண்டிகோ-ஏர் நிறுவனம் புதுச்சேரியில் இருந்து ஐதராபாத், பெங்களூருவுக்கு விமானங்களை இயக்க முன் வந்துள்ளது.

    ஜூலை 1-ந் தேதி முதல் இந்த இரு நகரங்களுக்கு மீண்டும் விமானங்கள் இயக்கப்பட உள்ளது.

    இதன் ஒரு பகுதியாக இண்டிகோ நிறுவனத்தின் பிரதிநிதிகள் விமான நிலையத்தில் ஆய்வு நடத்தினர். விமான நிலையத் தின் முனைய கட்டிடம், ஓடுபாதை மற்றும் கட்டுப்பாட்டு கோபுரம் ஆகியவற்றை ஆய்வு செய்தனர்.

    கடந்த சில நாட்களுக்கு முன் இண்டிகோ நிறுவனத்தின் மூத்த மேலாளர் ராம் பாபு மஹதே தலைமையிலான குழுவினரும் விமானங்களை இயக்குவதற்கான சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்தனர்.

    இதுகுறித்து புதுச்சேரி விமான நிலையத்தின் இயக்குநர் ராஜசேகர் ரெட்டி கூறியதாவது:-

    பயணிகள் முனைய கட்டிடம், ஓடுபாதை, விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு கோபுரம், வானிலை ஆய்வுத்துறை அலுவலகங்கள், தீயணைப்பு, எரிபொருள் நிலையம் மற்றும் செயல்பாட்டு பகுதிகளை இந்த குழுவினர் பார்வையிட்டனர்.

    விமானங்களை இயக்குவதற்கான வசதிகள் இருப்பது குறித்து குழு திருப்தி அடைந்துள்ளது.

    அதன்படி ஜூலை 1-ந் தேதி முதல் புதுச்சேரியில் இருந்து பெங்களூரு மற்றும் ஐதராபாத் வரை விமான சேவைகளை தொடங்க திட்டமிட்டுள்ளனர்.

    மேலும் சில வழித்தடங்களை இதில் சேர்க்க ஆபரேட்டர்கள் விரும்புகின்றனர். எந்தெந்த பகுதிக்கு என்பது விரைவில் முடிவு செய்யப்படும்.

    கவர்னர், முதல்-அமைச்சர் மற்றும் சுற்றுலா துறை அமைச்சர் ஆகியோர் விமான சேவையை விரைவில் தொடங்கவும், புதுச்சேரியை அதிக இடங்களுடன் விமானத்தின் மூலம் இணைக்கவும் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    Next Story
    ×