search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கர்நாடகாவில் அதிகாரிகள் வீடுகளில் ரூ.50 கோடி நகை, பணம், சொத்து ஆவணங்கள் சிக்கியது
    X

    கர்நாடகாவில் அதிகாரிகள் வீடுகளில் ரூ.50 கோடி நகை, பணம், சொத்து ஆவணங்கள் சிக்கியது

    • சொத்து பத்திரங்கள், முக்கிய ஆவணங்களை போலீசார் கைப்பற்றினார்கள்.
    • கர்நாடகாவில் லோக் ஆயுக்தா போலீசாரின் தொடர் நடவடிக்கையால் அதிகாரிகள் கலக்கத்தில் உள்ளனர்.

    பெங்களூரு:

    கர்நாடகாவில் 12 அரசு அதிகாரிகளின் வீடுகள், அவர்களது உறவினர்களின் வீடுகள், அலுவலகங்களில் நேற்று அதிகாலையிலேயே லோக்ஆயுக்தா போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள். பெங்களூரு, பெங்களூரு புறநகர், சிவமொக்கா, துமகூரு, மைசூரு, சாம்ராஜ்நகர், யாதகிரி உள்ளிட்ட பகுதிகளில் அரசு அதிகாரிகளுக்கு சொந்தமான 60 இடங்களில் ஒரே நேரத்தில் இந்த சோதனை நடத்தப்பட்டது. அப்போது அதிகாரிகளின் வீடுகளில் இருந்து தங்க நகைகள், வெள்ளி பொருட்கள், பணம், கார்கள், இருசக்கர வாகனங்கள், சொத்து பத்திரங்கள், முக்கிய ஆவணங்களை போலீசார் கைப்பற்றினார்கள். அதிகாரிகளின் வங்கி கணக்குகளும் ஆய்வு செய்யப்பட்டது.

    சிவமொக்கா தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் பிரகாஷ், பெங்களூருவில் உள்ள கர்நாடக முதலீடு பிரிவில் பணியாற்றும் முதன்மை செயல் இயக்குனர் முத்துக்குமார், பெங்களூரு வடக்கு வருவாய்த்துறை உதவி அதிகாரி மஞ்சுநாத், மண்டியாவில் தொழிலாளர் நலத்துறை அதிகாரி சேத்தன்குமார், யாதகிரி மாவட்ட பஞ்சாயத்து திட்டமிடுதல் துறை இயக்குனர் பலவந்த், சிவமொக்கா மாவட்டம் பத்ராவதி தாலுகா அந்தரகங்கே பஞ்சாயத்து தலைவர் நாகேஷ் ஆகிய அதிகாரிகளின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது.

    இதுபோன்று, பெங்களூரு புறநகர் மாவட்டம் தொட்டபள்ளாப்புராவில் கால்நடைத்துறை ஆஸ்பத்திரி டாக்டர் சித்தப்பா, பெங்களூரு புறநகர் மாவட்டம் ஹெப்பகோடி நகரசபை கமிஷனர் நரசிம்மமூர்த்தி, பெங்களூருவில் உள்ள கர்நாடக தொழில் துறையில் நிலம் கையகப்படுத்தும் பிரிவில் உதவி அதிகாரியாக பணியாற்றும் பி.பி.ராஜா, பெங்களூரு வணிக வரித்துறையின் இணை இயக்குனர் ரமேஷ் குமார், பெங்களூரு சர்வே துறையின் கட்டுப்பாட்டு அதிகாரி அத்தார் அலி, மங்களூரு மாநகராட்சி கமிஷனர் ஆனந்த் ஆகிய அதிகாரிகளின் வீடுகளில் சோதனை நடைபெற்றது.

    பெங்களூருவில் சர்வே துறையில் கட்டுப்பாட்டு அதிகாரியாக பணியாற்றும் அத்தார் அலி வீட்டிலும் போலீசார் சோதனை நடத்தினார்கள். பெங்களூரு கல்யாண் நகர் அருக எச்.ஆர்.பி.ஆர். லே-அவுட்டில் உள்ள வீட்டில் சோதனை நடத்துவதற்கு போலீசார் வருவது பற்றி அறிந்ததும் தனது வீட்டில் இருந்த பணம், தங்க நகைகளை ஒரு பையில் வைத்து பக்கத்து வீட்டில் அத்தார் அலி வீசினார். இதுபற்றி போலீசாருக்கு தெரியவந்தது. உடனே போலீசார், பக்கத்து வீட்டுக்கு சென்று பார்த்தார்கள். அப்போது அங்கு ஒரு பை கிடந்தது. அதனை எடுத்து பார்த்தபோது ரூ.25 லட்சம் ரொக்கம், 2 கிலோ 200 கிராம் தங்க நகைகள், 2 வெள்ளி பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதுபற்றி அத்தார் அலியிடம் விசாரணை நடத்திய போது, அந்த நகை, பணம் போலீஸ் கையில் சிக்கி விடக்கூடாது என்பதற்காக பக்கத்து வீட்டில் வீசியதாக தெரிவித்தார். அத்தார் அலி வீட்டில் சிக்கிய நகைகள், பணம் தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த சோதனையில் ரூ.50 கோடி மதிப்புள்ள நகை, பணம் மற்றும் சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் விலை உயர்ந்த கை கடிகாரங்கள் மற்றும் கைதுப்பாக்கி, ஏர்கன் ஆகியவையும் சிக்கியது. சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.1 கோடியே 20 லட்சம் ரொக்க பணத்தை போலீசார் வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். கர்நாடகாவில் லோக் ஆயுக்தா போலீசாரின் தொடர் நடவடிக்கையால் அதிகாரிகள் கலக்கத்தில் உள்ளனர்.

    Next Story
    ×