search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    மணல் குவாரி வழக்கு விசாரணை: அமலாக்கத்துறை முன்பு கலெக்டர்கள் ஆஜராக சுப்ரீம் கோர்ட் உத்தரவு
    X

    மணல் குவாரி வழக்கு விசாரணை: அமலாக்கத்துறை முன்பு கலெக்டர்கள் ஆஜராக சுப்ரீம் கோர்ட் உத்தரவு

    • சம்மனை எதிர்த்து தமிழக அரசு மற்றும் கலெக்டர்கள் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
    • வழக்கு விசாரணையை மே மாதம் 6-ந்தேதிக்கு தள்ளி வைத்தனர்.

    புதுடெல்லி:

    தமிழகத்தில் உள்ள மணல் குவாரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக அளவு மணல் அள்ளப்படுவதாக புகார்கள் எழுந்தது. இதில் கிடைத்த வருமானத்தில் சட்டவிரோதமாக பண பரிமாற்றம் நடந்ததாக கூறி அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது.

    மேலும் கடந்த செப்டம்பர் மாதம் சட்ட விரோத பண பரிமாற்ற சட்டத்தின் கீழ் தமிழகத்தில் உள்ள மணல் குவாரிகள் மற்றும் அதற்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள். நீர்வளத்துறை அதிகாரிகள் வீடுகளிலும் இந்த சோதனை நடந்தது. இந்த சோதனையின்போது முக்கிய ஆவணங்கள், ரொக்கப்பணம் உள்ளிட்டவைகள் சிக்கியது.

    இதையடுத்து இந்த வழக்கு தொடர்பாக விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி வேலூர், திருச்சி, கரூர், தஞ்சாவூர், அரியலூர் மாவட்ட கலெக்டர்கள் மற்றும் தமிழக அரசு உயர் அதிகாரிகள் உள்ளிட்டவர்களுக்கு அமலாக்கத்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டது.

    இந்த சம்மனை எதிர்த்து தமிழக அரசு மற்றும் கலெக்டர்கள் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு அமலாக்கத்துறை சம்மனுக்கு தடை விதித்தது. இருப்பினும் விசாரணையை தொடர்ந்து நடத்தலாம் என உத்தரவிட்டது.

    சம்மனுக்கு தடை விதித்த சென்னை ஐகோர்ட்டு உத்தரவை எதிர்த்து அமலாக்கத்துறை சார்பில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அமலாக்கத்துறை விசாரணையை எதிர்த்து தமிழக அரசு மற்றும் கலெக்டர்கள் சார்பிலும் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த வழக்கில் ஐகோர்ட்டு உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை விதித்தது.

    இது தொடர்பான வழக்கு இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனுக்கு தடை எதுவும் விதிக்க முடியாது. இந்த வழக்கு முக்கியமானது என்று அமலாக்கத்துறை தெரிவித்துள்ளதால் குறிப்பிட்ட தேதியில் மாவட்ட கலெக்டர்கள் மற்றும் அதிகாரிகள் கண்டிப்பாக அமலாக்கத்துறை முன்பு ஆஜராக வேண்டும், இல்லையென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.

    இதற்கு தமிழக அரசு சார்பில் தற்போது மாவட்ட கலெக்டர்கள் தேர்தல் நடவடிக்கை தொடர்பான பணிகளில் ஈடுபட்டு இருப்பதால் அவர்கள் ஆஜராகும் பட்சத்தில் தேர்தல் பணி பாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

    இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் பாராளுமன்ற தேர்தல் முடிந்த பிறகு வருகிற ஏப்ரல் மாதம் 25-ந்தேதி அமலாக்கத்துறை முன்பு 5 மாவட்ட கலெக்டர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டனர். மேலும் வழக்கு விசாரணையை மே மாதம் 6-ந்தேதிக்கு தள்ளி வைத்தனர்.

    சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுபடி வருகிற 25-ந்தேதி மணல் கொள்ளை வழக்கு சம்பந்தமாக கலெக்டர்கள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×