search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் 3 வயது சிறுமியை நள்ளிரவில் நரபலி கொடுக்க முயற்சி
    X

    தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் 3 வயது சிறுமியை நள்ளிரவில் நரபலி கொடுக்க முயற்சி

    • தனக்கு தெரிந்த மந்திரவாதியிடம் சென்று தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் அங்கங்கே கடன் வாங்கி நிம்மதி இல்லாமல் இருப்பதாக கூறினார்.
    • வீட்டிற்கு வந்த வேணுகோபால் மகளை நரபலி கொடுப்பது சம்பந்தமாக மனைவியிடம் ஆலோசனை நடத்தினார். அவரும் இதற்கு சம்மதம் தெரிவித்தார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் ஆத்தூர் பகுதியை சேர்ந்தவர் வேணுகோபால். இவருக்கு மனைவி மற்றும் இரட்டை பிறவியில் பிறந்த 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இதில் ஒரு பெண் குழந்தையின் பெயர் புணர்விகா (வயது 3). வேணுகோபால் பொக்லைன் எந்திரம் வைத்து தொழில் செய்து வருகிறார். கொரோனா காலத்தில் வேணுகோபாலுக்கு தொழில் நஷ்டம் ஏற்பட்டது.

    இதனால் வேணுகோபால் தனது உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் கடன் வாங்கினார். கடனை கொடுத்தவர்கள் திருப்பிக் கேட்டு வற்புறுத்தினர். மேலும் தொடர்ந்து தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் வாங்கிய கடனை அடைக்க முடியாமல் தவித்து வந்தார்.

    இந்த நிலையில் தனக்கு தெரிந்த மந்திரவாதியிடம் சென்று தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் அங்கங்கே கடன் வாங்கி நிம்மதி இல்லாமல் இருப்பதாக கூறினார். அதற்கு மந்திரவாதி குழந்தைகள் யாரையாவது நரபலி கொடுத்தால் தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் மற்றும் கடன் தொல்லை நீங்கிவிடும் என தெரிவித்தார். இதனை உண்மை என நம்பிய வேணுகோபால் தனது 2 மகள்களில் ஒருவரை நரபலி கொடுப்பது என முடிவு செய்தார்.

    வீட்டிற்கு வந்த வேணுகோபால் மகளை நரபலி கொடுப்பது சம்பந்தமாக மனைவியிடம் ஆலோசனை நடத்தினார். அவரும் இதற்கு சம்மதம் தெரிவித்தார்.

    இதையடுத்து நேற்று மாலை மகளை நரபலி கொடுப்பதற்கான பூஜை ஏற்பாடுகள் தடபுடலாக நடந்தது. இரவு 11 மணி அளவில் புணர்விகாவிற்கு அவரது தாய் மஞ்சள் நீர் ஊற்றி வாயில் குங்குமத்தை திணித்து பூஜை அறைக்கு அழைத்துச் சென்றார். பின்னர் சிறுமியின் கை கால்களை கட்டி நரபலி கொடுக்க முயன்றனர்.

    இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த புணர்விகா கத்தி கூச்சலிட்டார். அவரது சத்தத்தை கேட்ட அக்கம் பக்கத்தினர் வீட்டுக்கு ஓடிவந்தனர். அவர்கள் அங்கு கண்ட காட்சியை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் பெற்றோர்களிடம் இருந்து சிறுமியை மீட்டனர். வேணுகோபாலை அங்குள்ள கட்டிலில் கட்டி அறையில் போட்டு பூட்டினர்.

    இதுகுறித்து அத்மகூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சப் இன்ஸ்பெக்டர் சிவசங்கர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சிறுமியை மீட்டு சிகிச்சைக்காக ஆத்மகூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    போலீசார் ரேணுகோபாலை கைது செய்து விசாரணை நடத்தியதில், தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால், தனது மகளை நரபலி கொடுத்தால் அனைத்து பிரச்சினைகளும் தீரும் என தனக்கு தெரிந்த மந்திரவாதி கூறியதால் மகளை நரபலி கொடுக்க முயன்றதாக தெரிவித்தார்.

    மேலும் சிறுமியின் தாயாரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×