search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ராபர்ட் வதேராவின் வங்கி ஆவணங்கள் வெள்ளத்தில் அழிந்துவிட்டதாக தகவல்- சிறப்பு புலனாய்வு விசாரணைக்கு பின்னடைவு
    X

    ராபர்ட் வதேராவின் வங்கி ஆவணங்கள் வெள்ளத்தில் அழிந்துவிட்டதாக தகவல்- சிறப்பு புலனாய்வு விசாரணைக்கு பின்னடைவு

    • வங்கி ஆவணங்கள் அழிந்த விவகாரம் மற்றும் தாசில்தாரின் அறிக்கை சிறப்பு புலனாய்வுக்குழுவின் மேற்பார்வைக்கு அனுப்பப்பட்டு உள்ளது.
    • நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் வழக்கை அரியானா மாநில பா.ஜ.க. அரசு எந்தவகையில் கையாளப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

    சண்டிகர்:

    காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேரா. இவர் அரியானா மாநிலத்தில் ஸ்கைலைட் ஆஸ்பிடாலிட்டி, ஸ்கைலைட் ரியாலிட்டி என்ற பெயர்களில் ரியல் எஸ்டேட் நிறுவனம் நடத்தி வருகிறார். இந்த நிறுவனம் கடந்த 2008 முதல் 2012 வரை நிலங்களை வாங்கி விற்பனை செய்ததில் பல்வேறு மோசடிகள் நடந்துள்ளதாக புகார்கள் வெளியானது.

    இந்த மோசடிக்கு அப்போது அரியானா மாநில முதல்-அமைச்சர் பூபிந்தர் சிங் ஹூடாவும் உடந்தையாக இருந்ததாக கூறப்பட்டது. இந்த ரியல் எஸ்டேட் நிதி மோசடி விவகாரம் கடந்த 2014 பாராளுமன்றத் தேர்தலின்போது பா.ஜ.க. சார்பில் காங்கிரசுக்கு எதிராக பிரசார ஆயுதமாக பயன்படுத்தப்பட்டது.

    பின்னர் இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்த அரியானா மாநில அரசு சிறப்பு புலனாய்வுக்குழுவை அமைத்து உத்தரவிட்டது. இந்த புகார் தொடர்பாக சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேரா மற்றும் ஹரியானா முன்னாள் முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடா ஆகியோர் மீது கெர்கி தௌலா போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

    இந்த நிலையில் ராபர்ட் வதேரா இயக்குனராக பதவி வகித்த ஸ்கைலைட் ஹாஸ்பிடாலிட்டி மற்றும் ஸ்கைலைட் ரியாலிட்டி நிறுவனங்களின் கணக்குகளில் உள்ள நிதி வரவு தொடர்பான ஆவணங்களை குர்கானில் உள்ள யூனியன் வங்கி கிளையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது.

    சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணை நடத்தி வரும் நிலையில் விசாரணைக்கு உதவியாக சிறப்பு புலனாய்வுக்குழு சம்பந்தப்பட்ட வங்கி கிளைக்கு நோட்டீஸ் அனுப்பியது. கடந்த மே மாதம் அனுப்பப்பட்ட நோட்டீசுக்கு வங்கி நிர்வாகம் பதில் அனுப்பியது. அதில் கடந்த 2008 முதல் 2012 வரையிலான ராபர்ட் வதேராவின் ரியல் எஸ்டேட் தொடர்பான நிதி நிர்வாகம் மற்றும் முக்கிய ஆவணங்கள் அப்போது ஏற்பட்ட வெள்ளத்தால் அழிந்துவிட்டதாக கூறியுள்ளது.

    இது சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணையில் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. ஆனாலும், மாநில அரசு இந்த மோசடி வழக்கில் விரைந்து விசாரணை நடத்த தேவையான மேல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. இதற்காக மீண்டும் அந்த வங்கிக்கு நோட்டீஸ் அனுப்பி தேவையான முக்கிய ஆவணங்களை பெற நடவடிக்கை எடுத்து வருகிறது.

    இதற்காக கூடுதலாக ஐ.ஏ.எஸ். அதிகாரி முகுல் குமார் மற்றும் முன்னாள் முதன்மை நகரமைப்பு அதிகாரி தில்பக் சிங் மற்றும் சட்ட ஆலோசகர்களை முதல்-அமைச்சர் மனோகர்லால் கட்டார் நியமித்துள்ளார். ராபர்ட் வதேராவின் ரியல் எஸ்டேட் நிறுவனம் குர்கான் பகுதியில் 3.5 ஏக்கர் நிலத்தை வேறொரு நிறுவனத்திடம் இருந்து ரூ.7.5 கோடிக்கு வாங்கி ரூ.58 கோடிக்கு மற்றொரு நிறுவனத்திற்கு கைமாற்றியதுதான் இந்த மோசடியின் முக்கிய அம்சமாக இருந்து வருகிறது.

    அதே நேரத்தில் முன்னாள் முதல்வர் ஹூடா இந்த நில பேரத்திற்கு கைமாறாக 350 ஏக்கர் நிலத்தை தாரை வார்த்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இந்த புகார்களில் ஏறக்குறைய பாதிக்கு மேல் விசாரணை நடந்துமுடிந்த நிலையில் வங்கியின் பதில் விசாரணை குழுவுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. அதேநேரத்தில் ராபர்ட் வதேராவின் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் 3.5 ஏக்கர் நிலத்தை விற்பனை செய்ததில் எந்தவித முறைகேடும் நடைபெறவில்லை என்றும், விதிகள் மீறப்படவில்லை என்றும் அந்த பகுதி தாசில்தார் தெரிவித்துள்ளார்.

    வங்கி ஆவணங்கள் அழிந்த விவகாரம் மற்றும் தாசில்தாரின் அறிக்கை சிறப்பு புலனாய்வுக்குழுவின் மேற்பார்வைக்கு அனுப்பப்பட்டு உள்ளது. நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் இந்த வழக்கை அரியானா மாநில பா.ஜ.க. அரசு எந்தவகையில் கையாளப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

    Next Story
    ×