search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    வடமாநில நதிகளில் வரலாறு காணாத வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது- இமாச்சல பிரதேசத்தை புரட்டி போட்ட மழை
    X

    வடமாநில நதிகளில் வரலாறு காணாத வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது- இமாச்சல பிரதேசத்தை புரட்டி போட்ட மழை

    • சிம்லா மாவட்டத்தில் பெய்து வரும் கன மழையால் அங்குள்ள சப்பா மின் நிலையம் வெள்ளக் காடாக காட்சியளிக்கிறது.
    • இமாச்சல பிரதேசத்தில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிக அளவில் மழை பெய்துள்ளது.

    சிம்லா:

    வட மாநிலங்களில் தற்போது பருவ மழை தீவிரம் அடைந்துள்ளது. கடந்த 2 நாட்களாக பெய்து வரும் பலத்த மழையால் பல மாநிலங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன.

    குறிப்பாக இமாச்சல பிரதேசத்தை மழை வெள்ளம் புரட்டி போட்டுள்ளது. இமாச்சல பிரதேச மாநிலத்தில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக பல மாவட்டங்கள் வெள்ளக் காடாக காட்சியளிக்கின்றன.

    தொடர் மழை காரணமாக இமாச்சல பிரதேசத்தில் உள்ள முக்கிய ஆறுகளில் அபாய கட்டத்தை தாண்டி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. குறிப்பாக பியாஸ் ஆற்றில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளத்தால் மண்டி மாவட்டத்தில் உள்ள பஞ்ச வக்த்ரா கோவில் வெள்ளத்தில் மூழ்கி உள்ளது.

    சிம்லா மாவட்டத்தில் பெய்து வரும் கன மழையால் அங்குள்ள சப்பா மின் நிலையம் வெள்ளக் காடாக காட்சியளிக்கிறது.

    குலு மாவட்டத்தில் தசோல பகுதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் சாலை ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த கார்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. தேசிய நெடுஞ்சாலையின் ஒரு பகுதியும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது.

    சட்லஜ் ஆற்றில் அபாய கட்டத்தை தாண்டி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் ஆற்றின் இரு பகுதிகளையும் இணைக்கும் இரும்பு பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது.

    சிம்லாவில் காற்று, மழை காரணமாக ஒரு வீட்டின் மீது மரம் சரிந்து விழுந்தது. இதனால் வீடு இடிந்தது. அந்த இடிபாடுகளில் ஒருவர் சிக்கிக் கொண்டார். இதையடுத்து மீட்பு படையினர் விரைந்து சென்று அவரை மீட்டனர்.

    கனமழையால் இமாச்சல பிரதேசத்தின் பல மாவட்டங்களை இணைக்கும் முக்கிய சாலைகள், தேசிய நெடுஞ்சாலைகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் பாதுகாப்பு கருதி 700-க்கும் மேற்பட்ட சாலைகள் மூடப்பட்டு உள்ளன. அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. நிலச்சரிவில் ஒரு கிராமமே மண்ணோடு மண்ணாக புதைந்து போனது.

    பல இடங்களில் மின் கம்பங்கள் மீது மரங்கள் முறிந்து விழுந்து உள்ளதால் மின் இணைப்பு மற்றும் தொலை தொடர்பு சேவைகள் பாதிக்கப்பட்டு உள்ளன. இமாச்சல பிரதேச மாநிலம் உன்னா பகுதியில் அதிக பட்சமாக இதுவரை 22.8 செ.மீ. அளவுக்கு மழை கொட்டி உள்ளது.

    சோலன் பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் 13.5 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. இமாச்சல பிரதேசத்தில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிக அளவில் மழை பெய்துள்ளது.

    கங்ரா, சம்பா, குலு, மண்டி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. சோலன், சிம்லா, சிர்மாவூர் ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    டெல்லியில் கடந்த 2 நாட்களாக பெய்து வரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கி உள்ளது. இடைவிடாது கொட்டித் தீர்த்த கன மழையால் டெல்லியில் பல்வேறு சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

    பல இடங்களில் மத்திய மந்திரிகளின் வீடுகளிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

    கிரேட்டர் கைலாஸ், பெரோசா சாலை, ரபீக் பார்க், வோதி ஸ்டேட் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளம் மூழ்கடித்தது. குடியிருப்பு பகுதிகளையும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகி உளளனர். ஐ.ஓ.டி. பகுதியில் குளம் போல் மழை நீர் தேங்கியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    கனமழை காரணமாக டெல்லி சுந்தர் நகர் மார்க்கெட் பகுதியில் சுற்றுச் சுவர் இடிந்து விழுந்தது.ரோகினி பகுதியில் சாலையில் பெரிய பள்ளம் ஏற்பட்டு உள்ளது. இதனால் அந்த பகுதியில் போக்கு வரத்து பாதிக்கப்பட்டு உள்ளது.

    டெல்லி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் இன்றும் கன மழை பெய்தது. கன மழையால் அரியானா மாநிலம் குருகிராமில் போக்குவரத்து முடங்கி உள்ளது. டெல்லி-மனேசர் நெடுஞ்சாலையில் வாகனங்கள் நீண்ட தொலைவுக்கு அணிவகத்து நிற்கின்றன. குருகிராமில் பல பகுதிளில் தண்ணீர் தேங்கியுள்ளது. அங்கு மின்சாரமும் தடைபட்டுள்ளது.

    டெல்லியில் 58 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் அடுக்குமாடி குடியிருப்பின் கூரை இடிந்து விழுந்து பலியானார். பிரகதி மைதான சுரங்க பாதையில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் சுரங்கபாதை மூடப்பட்டு அங்கு போக்கு வரத்து தடை செய்யப்பட்டுள்ளது. யமுனா நதியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

    பலத்த மழை காரணமாக டெல்லி, நொய்டா குரு கிராமில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளது.

    வெள்ள மீட்பு பணிகள் தொடர்பாக அம்மாநில அதிகாரிகளுடன் முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் ஆலோசனை நடத்தினார்.

    அரியானா மாநிலத்தில் மழை வெள்ளம் பலத்த பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அம்மாநில முதல்-மந்திரி மனோகர் லால் கட்டார் தனது நிகழ்ச்சிகளை ரத்து செய்துள்ளார். மீட்பு பணிகள் தொடர்பாக அவர் அதிகாரிகளின் அவசர கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

    ஜம்மு- காஷ்மீர் மாநிலத்திலும் பருவ மழை தீவிரமாக பெய்து வருகிறது. இங்கு பெய்த கன மழை காரணமாக உதம்பூர் பகுதியில் உள்ள பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது.

    குஜராத் மாநிலத்திலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இங்குள்ள கடியா, தோரா பகுதியில் உள்ள நீர் வீழ்ச்சிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. மலைப் பகுதிகளில் அதிக அளவில் மழை பெய்து வருகிறது.

    உத்தரகாண்ட் மாநிலத்திலும் பருவ மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் அங்கு சாலைகள் உள்ளிட்ட பல இடங்களிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. ராம்கர் என்ற பகுதியில் சென்ற பஸ் வெள்ளத்தில் சிக்கியது. இதன் காரணமாக அதில் இருந்த பயணிகள் ஜன்னல் வழியாக வெளியே குதித்து உயிர் தப்பினார்கள்.

    உத்தரகாண்ட் மாநிலத்தில் 8 மாவட்டங்களில் இன்னும் 2 நாட்களுக்கு கன மழை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு 'ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளது.

    கனமழை காரணமாக வட மாநில நதிகளில் வரலாறு காணாத வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. கார்கள், வாகனங்கள், வீடுகள் என அனைத்துமே வெள்ளத்தில் அடித்து செல்லப்படுகின்றன. கங்கை நதியிலும் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது.

    வட மாநிலங்களில் பெய்த மழைக்கு இதுவரை 18 பேர் பலியாகி உள்ளனர்.

    பஞ்சாப் மாநிலத்தின் மால்வா மற்றும் டோபா பகுதியில் பலத்த மழை காரணமாக கால்வாய்கள், சாலைகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன.

    பஞ்சாப் மாநிலத்தில் 5 நதிகளில் வெள்ளம் பெருக் கெடுத்து ஓடுகிறது. வயல்கள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன. நெல், பருத்தி ஆகியவை சேதம் அடைந்துள்ளன. அங்கு மீட்பு பணியில் ஈடுபட முதல்-மந்திரி பகவந்த் மான் உத்தர விட்டுள்ளார்.

    இதே போல் ராஜஸ்தான், உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா, கோவா, மேற்கு வங்காளம், சிக்கிம், அசாம், மேகாலயா, அருணாச்சல பிரதேசம், நாகாலாந்து, மணிப்பூர் ஆகிய மாநிலங்க ளிலும் மழை பெய்து வருகிறது. இந்த பகுதிகளில் இன்னும் 3 முதல் 5 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

    நாடு முழுவதும் நேற்று இயல்பை விட 81 சதவீதம் அதிக மழை பெய்துள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இந்த நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் முதல்-மந்திரிகளுடன் மத்திய மந்திரி அமித்ஷா ஆலோசனை நடத்தினார். அங்கு மீட்பு பணிகளுக்கு உதவ பேரிடர் மீட்பு படையினரும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

    Next Story
    ×