search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    சீர்வரிசையாக பழைய பர்னீச்சர் பொருட்களை கொடுத்ததால் திருமணத்தை நிறுத்திய மணமகன் வீட்டார்
    X

    சீர்வரிசையாக பழைய பர்னீச்சர் பொருட்களை கொடுத்ததால் திருமணத்தை நிறுத்திய மணமகன் வீட்டார்

    • நீண்ட நேரம் ஆகியும் மாப்பிள்ளை வீட்டார் திருமண மண்டபத்திற்கு வரவில்லை.
    • மணப்பெண்ணின் தந்தை மணமகன் வீட்டிற்கு சென்று மாப்பிள்ளை மற்றும் உறவினர்களை திருமண மண்டபத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்தார்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம், ஐதராபாத் பகுதியை சேர்ந்தவர் 30 வயது வாலிபர். இவர் பஸ் டிரைவராக வேலை செய்து வருகிறார். இவருக்கும் ஐதராபாத் அருகே உள்ள ஒரு பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு நேற்று முன்தினம் திருமணம் நடைபெற இருந்தது.

    மணமகனின் வீட்டார் பெண்ணின் வீட்டாரிடம் கட்டில், மெத்தை, பீரோ, பிரிட்ஜ், வாஷிங்மெஷின் உள்ளிட்ட பொருட்களை சீர்வரிசையாக கேட்டு இருந்தனர்.

    அதன்படி மணப்பெண்ணின் வீட்டார் அவர்கள் கேட்டதை விட குறைவான பொருட்களை திருமணத்திற்கு முந்தின நாள் மண்டபத்திற்கு கொண்டு வந்தனர்.

    மேலும் அவர்கள் கொண்டு வந்த கட்டில் உள்ளிட்ட பர்னீச்சர்கள் பழைய பொருட்களாக இருந்தது.

    மணப்பெண்ணின் உறவினர்கள் மண்டபத்தில் விருந்து சமைத்து தங்களது உறவினர்களுடன் மாப்பிள்ளை வீட்டாருக்காக காத்துக் கொண்டு இருந்தனர்.

    நீண்ட நேரம் ஆகியும் மாப்பிள்ளை வீட்டார் திருமண மண்டபத்திற்கு வரவில்லை. இதையடுத்து மணப்பெண்ணின் தந்தை மணமகன் வீட்டிற்கு சென்று மாப்பிள்ளை மற்றும் உறவினர்களை திருமண மண்டபத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்தார்.

    அப்போது மணமகனின் வீட்டார் நாங்கள் கேட்ட சீர்வரிசை பொருட்களை தரவில்லை. மேலும் நீங்கள் கொண்டு வந்துள்ள கட்டில், பீரோ உள்ளிட்ட பர்னீச்சர்கள் ஏற்கனவே பயன்படுத்தியது போல் பழையதாக உள்ளது.

    இந்த திருமணத்தில் எங்களது மகனுக்கு விருப்பமில்லை என அநாகரிகமாக பேசி திருப்பி அனுப்பினர்.

    அப்போது மணமகளின் தந்தை பர்னீச்சர் பொருட்கள் புதியதாக வாங்கி தருவதாகவும் தற்போது திருமணத்தை நிறுத்த வேண்டாம். இல்லை என்றால் உறவினர்கள் முன்னிலையில் அவமானம் ஆகிவிடும் என பலமுறை கெஞ்சி பார்த்தும் அவர்கள் மனம் இறங்கவில்லை.

    இதனால் ஆத்திரமடைந் மணப்பெண்ணின் தந்தை வரதட்சணை கேட்டு திருமணத்தை நிறுத்தியதாக மணமகன் மற்றும் அவரது பெற்றோர்கள் மீது அங்குள்ள போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் தெலுங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    Next Story
    ×