என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
சபரிமலையில் நாளை மகரஜோதி தரிசனம்... பாதுகாப்பு பணியில் கூடுதல் போலீசார் நியமனம்
- தொடர்ந்து 18-ம் படி வழியாக சன்னிதானம் கொண்டு செல்லப்படும் திருவாபரணங்கள் ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெறும்.
- ஐயப்பனுக்கு தங்க ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு பூஜைகள் நிறைவடைந்த பின்னர் இரவு 8 மணிக்கு பிறகு பக்தர்கள் படியேற அனுமதிக்கப்படுவார்கள்.
திருவனந்தபுரம்:
கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை காலங்களில் நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வது வழக்கம். மண்டல பூஜை முடிவடைந்த நிலையில் மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த மாதம் 30-ந்தேதி திறக்கப்பட்டது. ஆன்லைன் முன்பதிவு மற்றும் உடனடி முன்பதிவு மூலம் பதிவு செய்த பக்தர்களே தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.
நடை திறக்கப்பட்ட நாள் முதல் பக்தர்களின் கூட்டம் சபரிமலையில் அலைமோதியதால் தரிசனத்திற்கு நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. இதனை தொடர்ந்து உடனடி முன்பதிவு நிறுத்தப்பட்டது. இதனால் பக்தர்கள் கூட்டம் ஓரளவுக்கு குறைந்தது.
இந்த நிலையில் மகரவிளக்கு பூஜை நாளை (15-ந்தேதி) நடக்கிறது. இந்த நாளில் தரிசனம் செய்ய முன்பதிவு செய்த பக்தர்கள் நேற்று முதலே சபரிமலையில் குவியத் தொடங்கி விட்டனர். இதனால் திரும்பிய பக்கமெல்லாம் பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது. மகரவிளக்கு பூஜையின் போது ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்க திருவாபரணங்கள் 3 சந்தன பெட்டிகளில் பந்தளம் அரண்மனையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கும். அந்த ஆபரணங்கள் நேற்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அங்கிருந்து சபரிமலைக்கு ஊர்வலமாக புறப்பட்டன.
இந்த ஊர்வலம் பாரம்பரிய பெருவழி பாதையான எருமேலி, களைகட்டி, அழுதாமலை, முக்குழி, கரிமலை வழியாக சென்றது. நாளை (15-ந்தேதி) மதியம் பம்பை சென்றடையும் திருவாபரண ஊர்வலம், அங்கிருந்து பக்தர்களின் சரண கோஷங்களுக்கிடையில் சரம்குத்தி, மரக்கூட்டம் வழியாக மாலை 6.30 மணிக்கு சபரிமலை சென்றடையும். அங்கு திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் 18-ம் படிக்கு கீழ் பகுதியில் மந்திரி ராதாகிருஷ்ணன் தலைமையில் வரவேற்பு அளிக்கப்படும்.
தொடர்ந்து 18-ம் படி வழியாக சன்னிதானம் கொண்டு செல்லப்படும் திருவாபரணங்கள் ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெறும். அதன்பிறகு பொன்னம்பலமேட்டில் சுவாமி ஐயப்பன் 3 முறை பக்தர்களுக்கு ஜோதி வடிவில் காட்சியளிப்பார். இதனை பக்தர்கள் சரண கோஷம் முழங்கியபடி தரிசனம் செய்வார்கள். முன்னதாக மகர விளக்கு பூஜையையொட்டி நடைபெறும் மகர சங்ரம பூஜை வழிபாடு அதிகாலை 2.46 மணிக்கு தந்திரி தலைமையில் நடைபெறும். அப்போது திருவனந்தபுரம் கவடியார் அரண்மனையில் இருந்து கன்னி ஐயப்பன்மார்கள் புடை சூழ கொண்டு வரப்படும் நெய் மூலம் ஐயப்பனுக்கு அபிஷேகம் செய்யப்படும்.
மகரவிளக்கு பூஜையில் பங்கேற்க சபரிமலையில் சுமார் 4 லட்சம் பக்தர்கள் கோவிலுக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், பாதுகாப்பு பணிகளில் போலீசார் கூடுதல் கவனம் செலுத்தி உள்ளனர். இதுகுறித்து கேரள மாநில போலீஸ் டி.ஜி.பி. ஷேக் தர்வேஷ் கூறுகையில், சன்னிதானம், பம்பை, நிலக்கல் மற்றும் பாண்டிதா வலம் போன்ற முக்கிய இடங்களில் 4 சூப்பிரண்டுகள், 19 துணை சூப்பிரண்டுகள், 15 இன்ஸ்பெக்டர்கள் உள்பட கூடுதலாக 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர் என்றார்.
மகரஜோதி தரிசனத்திற்கு பிறகு மலையில் இருந்து இறங்கும் பக்தர்கள் அசம்பாவிதங்களை தவிர்க்க சரியான வெளியேறும் திட்டம் நடைமுறையில் உள்ளது என்றும், மகரஜோதியை காண பக்தர்கள் கூடும் இடங்களில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார்.
ஐயப்பனுக்கான திருவாபரண பெட்டிகள் கொண்டு செல்வதற்கு வசதியாக நாளை (15-ந்தேதி) காலை 10 மணி முதல் பம்பையில் இருந்து பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட மாட்டார்கள். அதேபோல் மாலை 6.30 மணி முதல் இரவு 8 மணி வரை 18-ம் படி வழியாக பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஐயப்பனுக்கு தங்க ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு பூஜைகள் நிறைவடைந்த பின்னர் இரவு 8 மணிக்கு பிறகு பக்தர்கள் படியேற அனுமதிக்கப்படுவார்கள். பம்பையில் இருந்து நாளை மறுநாள் (16-ந்தேதி) அதிகாலை முதல் மீண்டும் பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்