search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பிரதமர் வேட்பாளர் கார்கே? ஒரே கல்லில் பல மாங்காய் அடிக்க காங்கிரஸ் திட்டம்
    X

    பிரதமர் வேட்பாளர் கார்கே? ஒரே கல்லில் பல மாங்காய் அடிக்க காங்கிரஸ் திட்டம்

    • கர்நாடகாவில் பா.ஜனதாவை வீழ்த்தியதில் கார்கேவுக்கு முக்கிய பங்கு உண்டு.
    • இதுவரை இந்தியாவில் பிரதமர் பதவிக்கு தலித் இனத்தை சேர்ந்தவர்கள் யாரும் தேர்வு செய்யப்பட்டது இல்லை.

    பாரதிய ஜனதாவை வீழ்த்துவதற்காக எதிர்க்கட்சிகள் ஒன்றுசேர தொடங்கி உள்ளன. வருகிற வெள்ளிக்கிழமை (23-ந்தேதி) பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.

    இந்த கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் நாடு முழுவதும் ஓரணியில் போட்டியிட வேண்டும் என்பது பற்றி ஆலோசனை நடத்தப்பட உள்ளது. குறிப்பாக 450 தொகுதிகளில் பொது வேட்பாளரை நிறுத்த எதிர்க்கட்சி தலைவர்கள் விவாதிக்க உள்ளனர்.

    இதில் ஒருமித்த கருத்து ஏற்படுமா? என்று தெரியவில்லை. இந்த நிலையில் நாடு முழுவதும் உள்ள எதிர்க்கட்சிகளில் சில கட்சிகள் காங்கிரசை தொடர்ந்து எதிர்த்து வருகின்றன. அதற்கு முக்கிய காரணம் காந்தி குடும்பத்தை சேர்ந்தவர்கள் தொடர்ந்து பிரதமர் பதவிக்கு வர முயற்சி செய்வதுதான்.

    ராகுலை பிரதமராக ஏற்க மம்தா பானர்ஜி, நவீன் பட்நாயக், சந்திர சேகரராவ் உள்பட பல தலைவர்கள் விரும்பவில்லை. இது எதிர்க்கட்சிகளை ஒற்றுமைபடுத்தும் முயற்சிக்கு பெரும் தடையாக இருக்கிறது.

    இதை கடந்த சில தினங்களாக ஆய்வு செய்த காங்கிரஸ் தலைவர்கள் அதிரடி திட்டம் ஒன்றை வகுத்துள்ளனர். அதன்படி எதிர்க்கட்சிகள் சார்பில் பிரதமர் வேட்பாளராக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவை முன் நிறுத்தலாம் என்று யோசனை தெரிவிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    எதிர்க்கட்சிகள் அவரை ஏற்பதில் மறுப்பு தெரிவிக்க மாட்டார்கள் என்று காங்கிரஸ் நம்புகிறது. அதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன.

    கர்நாடகாவில் பா.ஜனதாவை வீழ்த்தியதில் கார்கேவுக்கு முக்கிய பங்கு உண்டு. மேலும் கார்கே தலித் இன தலைவர் ஆவார். இதுவரை இந்தியாவில் பிரதமர் பதவிக்கு தலித் இனத்தை சேர்ந்தவர்கள் யாரும் தேர்வு செய்யப்பட்டது இல்லை.

    அந்த வகையில் கார்கேவை முன்னிறுத்தும் போது அவருக்கு நாடு முழுவதும் வரவேற்பு கிடைக்கும் என்று காங்கிரஸ் கருதுகிறது. இதற்காக கார்கேவை உத்தரபிரதேசத்தில் காங்கிரசின் பாரம்பரிய தொகுதியான ரேபரேலி தொகுதியில் போட்டியிட வைக்கவும் ஆலோசனை நடந்து வருகிறது.

    ஆனால் கார்கேவை எதிர்க்கட்சி தலைவர்களில் எத்தனை பேர் ஏற்பார்கள்? என்பதில் கேள்விகுறி எழுந்துள்ளது. என்றாலும் பா.ஜனதாவை வீழ்த்த கார்கே தலைமை கை கொடுக்கும் என்று காங்கிரசில் ஒரு சாரார் பிரசாரத்தை தொடங்கி உள்ளனர்.

    Next Story
    ×