என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
மத்திய மந்திரிகள்-எம்.பி.க்களுடன் பிரதமர் நரேந்திர மோடி நாளை முதல் ஆலோசனை
- 5 மாநிலங்களின் தேர்தல்கள் என்பது பாராளுமன்ற தேர்தலுக்கான முன்னோட்டமாக கருதப்படுகிறது.
- பிரதமர் மோடி 38 கூட்டணிக் கட்சிகள் மற்றும் பா.ஜ.க.வின் 316 எம்.பி.க்களை சந்தித்து பேச உள்ளார்.
புதுடெல்லி:
அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலை சந்திக்க பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன.
பிரதமர் மோடி தலைமையிலான ஆளும் பாரதிய ஜனதா கட்சி இந்த தேர்தலில் வெற்றிபெற்று 3-வது முறையாக ஆட்சியை தக்க வைக்க மும்முரம் காட்டி வருகிறது. அதே வேளையில் பா.ஜ.க.வை வீழ்த்தி இந்த தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சி அமைக்க காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளது.
இதை தொடர்ந்து இரு கட்சிகளுமே தங்கள் கூட்டணியை பலப்படுத்தும் வேலையில் ஈடுபட்டுள்ளன. காங்கிரஸ் கட்சி சார்பாக மாநிலங்களில் பிரதானமாக உள்ள பா.ஜ.க.வுக்கு எதிரான 26 கட்சிகளை ஒருங்கிணைத்து இந்திய தேசிய ஜனநாயக உள்ளடங்கிய கூட்டணி(இந்தியா) என்ற பெயரில் கூட்டணி அமைத்து உள்ளது. இந்த கூட்டணி தலைவர்கள் கடந்த 13, 14-ந்தேதிகளில் பெங்களூருவில் கூடி ஆலோசனை நடத்தினார்கள்.
பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக இந்த ஆண்டு இறுதியில் மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், தெலுங்கானா, மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த 5 மாநிலங்களின் தேர்தல்கள் என்பது பாராளுமன்ற தேர்தலுக்கான முன்னோட்டமாக கருதப்படுகிறது. இந்த சூழ்நிலையில் களநிலவரங்களை பார்த்தால் பா.ஜ.க.வுக்கு, காங்கிரஸ் கட்சி 'டப்' கொடுக்கும் வகையில் உள்ளது.
தொடர்ந்து மணிப்பூர் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க் கட்சியினர் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க தொடங்கி உள்ளனர். எதிர்க்கட்சிகளின் இந்த கூட்டணியை முறியடிக்க பா.ஜ.க.வும் பல்வேறு அதிரடி திட்டங்களை வகுத்து வருகிறது.
ஏற்கனவே பா.ஜ.க. கூட்டணி கட்சியினர் கடந்த 17-ந்தேதி டெல்லியில் ஆலோசனை நடத்தினார்கள். இதில் எதிர்க்கட்சி கூட்டணியின் திட்டத்தை முறியடிப்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இதன் தொடர்ச்சியாக பிரதமர் மோடி 38 கூட்டணிக் கட்சிகள் மற்றும் பா.ஜ.க.வின் 316 எம்.பி.க்களை சந்தித்து பேச உள்ளார்.
இவர்களை 11 குழுக்களாகப் பிரித்து ஒருங்கிணைக்கும் பொறுப்பு, 21 மத்திய மந்திரிகளிடம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த சந்திப்பு வருகிற நாளை (திங்கட்கிழமை) முதல் ஆகஸ்ட் 10-ந் தேதி வரை டெல்லியில் நடைபெற உள்ளது. இதில் வரும் மக்களவை தேர்தலில் வெற்றி பெற்று 3-வது முறையாக ஆட்சியை தொடர திட்டம் வகுக்கப்படுகிறது. பிராந்தியம் வாரியாக பிரிக்கப்பட்டுள்ள இக்குழுக்களுடனான ஒவ்வொரு சந்திப்பிலும் 2 மூத்த தலைவர்கள் பிரதமர் மோடியுடன் இருப்பார்கள்.
முதல் சந்திப்பு நாளை மாலை 6.30 மணி முதல் 7.30 மணி வரை நடைபெற உள்ளது. 83 எம்.பி.க்கள் கலந்துகொள்ளும் இந்த சந்திப்பில் பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவும், மத்திய மந்திரி நிதின் கட்கரியும் இடம் பெறுகிறார்கள். 2-வது சந்திப்பில் மந்திரிகள் அமித்ஷாவும், ராஜ்நாத் சிங்கும் இடம் பெறுகின்றனர்.
பிரதமருடனான இந்த சந்திப்பில் இடம்பெறும் எம்.பி.க்கள் தங்கள் தொகுதி வளர்ச்சி, மத்திய அரசு திட்டங்களின் நிலை, மக்களின் பிரச்சினைகள் போன்றவை பற்றி ஆலோசிக்க உள்ளனர். இந்த சந்திப்புகளின் மூலம் 50 சதவீதத்திற்கு மேல் வாக்குகளை பெற பா.ஜ.க. முயற்சிக்கிறது. அடுத்து வரவிருக்கும் 5 மாநில சட்டப்பேரவை தேர்தல்களில் வெல்வதும் இந்த சந்திப்பின் நோக்கமாக உள்ளது.
இவற்றில் தங்கள் கட்சி 20 வருடங்களாக ஆட்சி செய்யும் மத்தியபிரதேசம் பா.ஜ.க.விற்கு முக்கியமாக உள்ளது. கடந்த சட்டப் பேரவை தேர்தலில் காங்கிரஸ் இதர கட்சிகளின் சில எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது.
ஆனால் காங்கிரஸ் முக்கியத் தலைவரான ஜோதிர் ஆதித்ய சிந்தியா தலைமையில் குறிப்பிட்ட எம்.எல்.ஏ.க்களை தங்கள் கட்சிக்கு இழுத்து பா.ஜ.க. ஆட்சி அமைத்தது. எனவே ம.பி.யில் தங்கள் ஆட்சியை 5-வது முறையாக தக்க வைப்பது பா.ஜ.க.விற்கு பெரும் சவாலாகி உள்ளது.
சட்டப்பேரவை தேர்தலின் முடிவுகளை பொறுத்தே பா.ஜ.க.விற்கு மக்களவை தேர்தலிலும் எம்.பி.க்கள் கிடைக்கும். தற்போது ம.பி.யின் 29 மக்களவைத் தொகுதிகளில் 28 இடங்கள் பா.ஜ.க. வசம் உள்ளன. இந்த 5 மாநிலங்களிலும் வெற்றியை உறுதிப்படுத்தும் பொறுப்பை மந்திரி அமித்ஷாவும், தலைவர் நட்டாவும் ஏற்றுள்ளனர்.
அடுத்தடுத்த அரசியல் பரபரப்புகளுக்கு இடையே மத்திய மந்திரிகள், பா.ஜ.க. கூட்டணி எம்.பி.க்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்துவது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்