என் மலர்
இந்தியா
திருடர்களுக்கு ஆதரவு தருவதா?- சந்திரபாபு நாயுடுவுக்கு ஆதரவு தெரிவித்த ரஜினிக்கு ரோஜா கடும் கண்டனம்
- சந்திரபாபு நாயுடு குறித்து ரஜினியின் கருத்துக்கு ஆந்திர மந்திரியும், நடிகையுமான ரோஜா கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
- மக்கள் நலனுக்கு சிறை சென்றவர்களுக்கு ஆதரவு தெரிவித்தால் சரியாக இருக்கும்.
ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதல்-மந்திரியாக இருந்தவர் தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு. அவரது ஆட்சி காலத்தில் திறன் மேம்பாட்டு கழகத்தின் சார்பில் நடந்த 3 ஆயிரத்து 300 கோடி ரூபாய் திட்டப் பணிகளில் 371 கோடி ரூபாய் ஊழல் செய்துவிட்டதாக அவர்மீது குற்றச்சாட்டு எழுந்தது.
இதைத் தொடர்ந்து சந்திரபாபு நாயுடு மீது 2021-ம் ஆண்டு வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்த சி.ஐ.டி. போலீசார் கடந்த 9-ந் தேதியன்று சந்திரபாபு நாயுடுவை கைது செய்தனர். அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ராஜ மகேந்திரவரம் மத்திய சிறையில் அடைத்தனர். இதையடுத்து ஆந்திராவில் பதட்டம் நிலவியது.
இதைத் தொடர்ந்து அவரை காவலில் எடுத்து விசாரிக்க சி.ஐ.டி. போலீசார் மனு தாக்கல் செய்தனர். இதுபோல சந்திரபாபு நாயுடுவும் தனக்கு ஜாமின் வழங்குமாறு மனு தாக்கல் செய்துள்ளார்.
இதுகுறித்து நீதிமன்றம் வருகிற 19-ந்தேதி விசாரணை நடத்த உள்ளது.
இந்த சம்பவத்துக்கு மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி உள்பட பலர் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் சந்திரபாபு நாயுடு மகன் லோகேஷை தொலைபேசி யில் தொடர்பு கண்டு பேசினார்.
அவரிடம் ரஜினி பேசும் போது, 'எனது நண்பர் சந்திரபாபு நாயுடு மக்கள் நலனுக்காக தொடர்ந்து பாடுபடும் சிறந்த போராளி. இந்த பொய் வழக்குகளும் சட்ட விரோத கைதுகளும் அவரை ஒன்றும் செய்யாது. நீங்கள் தைரியமாக இருங்கள். எனது அருமை நண்பர் தவறு செய்திருக்க மாட்டார். அவரது நற்செயல்களும் தன்னலம் அற்ற பொது சேவையும் அவரை பத்திரமாக வெளியே கொண்டு வரும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
சந்திரபாபு நாயுடு குறித்து ரஜினியின் கருத்துக்கு ஆந்திர மந்திரியும், நடிகையுமான ரோஜா கடும் எதிர்ப்பு தெரிவித்தார். சந்திரபாபு நாயுடுவுக்கு ஆதரவு தெரிவிப்பதால் ரஜினியின் மரியாதைதான் குறையும்.
மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என எண்ணியதால்தான் ரஜினி அரசியலுக்கு வரவில்லை. மக்கள் நலனுக்கு சிறை சென்றவர்களுக்கு ஆதரவு தெரிவித்தால் சரியாக இருக்கும்.
ஆனால் திருடர்களுக்கு ரஜினி ஏன் ஆதரவு தெரிவிக்கிறார்? என்ற கேள்வி எழுந்துள்ளது. சந்திரபாபு நாயுடு நல்லவர் என்று அவர் சொன்னால் மக்கள் யாரும் நம்பமாட்டார்கள். ரஜினி ஒரு புத்திசாலி. ஆனால் மக்களின் பணத்தை திருடியவர்களுக்கு ஆறுதல் கூறினால் என்ன அர்த்தம்? இதன் மூலம் மக்களுக்கு அவர் என்ன செய்தி சொல்ல வருகிறார். என்.டி.ஆர். நூற்றாண்டு விழாவில் சந்திரபாபு நாயுடு குறித்து ரஜினி பேசியதற்கு ஆந்திராவில் எவ்வளவு எதிர்ப்பு கிளம்பியது என சரமாரியாக ரஜினியை கண்டித்து ரோஜா கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த சம்பவம் தமிழகம் மற்றும் ஆந்திராவில் சினிமா துறையில் மட்டுமல்லாமல் அரசியல் வட்டாரத்திலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.