search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    திருப்பதி மலைப்பாதையில் கூண்டில் சிக்கிய சிறுத்தைகளை வனப்பகுதியில் விட பக்தர்கள் எதிர்ப்பு
    X

    திருப்பதி மலைப்பாதையில் கூண்டில் சிக்கிய சிறுத்தைகளை வனப்பகுதியில் விட பக்தர்கள் எதிர்ப்பு

    • 3 சிறுத்தைகளையும் வனவிலங்கு சரணாலயத்தில் பராமரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து உள்ளனர்.
    • வனவிலங்குகளின் நடமாட்டத்தை கண்காணிக்க டிரோன் கேமராக்கள் பயன்படுத்தப்பட உள்ளது.

    திருப்பதி:

    திருப்பதி மலைபாதையில் கடந்த வாரம் தங்களது பெற்றோருடன் நடந்து சென்ற லக்சிதா என்ற 6 வயது சிறுமியை சிறுத்தை ஒன்று கவ்வி சென்று கடித்து கொன்றது.

    இதையடுத்து சிறுமி இறந்து கிடந்த லட்சுமி நரசிம்ம ஸ்வாமி கோவில், காளிகோபுரம் 35 வது வளைவு ஆகிய இடங்களில் சிறுத்தையை பிடிக்க கூண்டுகள் வைக்கப்பட்டது.

    மறுநாள் நள்ளிரவு 6 வயது மதிக்கத்தக்க சிறுத்தை ஒன்று கூண்டில் சிக்கிய நிலையில் அதற்கு அடுத்த நாள் மீண்டும் நடைபாதை அருகே சிறுத்தை ஒன்று நடமாடியதால் அதனை பிடிக்க மீண்டும் கூண்டு வைக்கப்பட்டு இருந்தது.

    அதற்கு அடுத்த நாள் மீண்டும் ஒரு சிறுத்தை கூண்டில் சிக்கியது. இதேபோல் கடந்த மாதம் பெற்றோருடன் திருப்பதி நடை பாதையில் நடந்து சென்ற 4 வயது சிறுவனை திடீரென பாய்ந்து வந்த சிறுத்தை கவ்வி இழுத்துச் சென்றது. இதனை பக்தர்கள் கூச்சலிட்டபடி கற்களை வீசியதால் சிறுவனை விட்டுவிட்டு சிறுத்தை வனப்பகுதிக்குள் தப்பி ஓடியது.

    அப்போது வனத்துறையினர் வைத்த கூண்டில் சுமார் 3 வயது மதிக்கத்தக்க சிறுத்தை ஒன்றும் சிக்கியது.

    50 நாட்களில் 3 சிறுத்தைகள் கூண்டில் சிக்கி பிடிக்கப்பட்டன. கூண்டில் சிக்கிய 3 சிறுத்தைகளும் திருப்பதியில் உள்ள வனவிலங்கு சரணாலயத்தில் வைத்து பராமரிக்கப்பட்டு வருகிறது.

    பராமரிக்கப்பட்டு வரும் சிறுத்தைகளை சிறிது நாட்கள் கழித்து மீண்டும் வனப்பகுதியில் விட அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. பிடிபட்ட சிறுத்தைகளை வனப்பகுதியில் விட்டால் மீண்டும் மலைப்பாதைக்கு வந்து பக்தர்களை தாக்கக்கூடிய வாய்ப்பு உள்ளது.

    எனவே பிடிப்பட்ட சிறுத்தைகளை வனப்பகுதியில் விட பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 3 சிறுத்தைகளையும் வனவிலங்கு சரணாலயத்தில் பராமரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    இந்த நிலையில் திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் கருணாகர்ரெட்டி கூறியதாவது:-

    நடைபாதையில் அச்சமின்றி செல்ல அவர்களுக்கு கைத்தடி வழங்கப்படும். நடைபாதை முழுவதும் அதிக வெளிச்சத்தை தரக்கூடிய விளக்குகள் பொருத்தப்படும்.

    வனவிலங்குகளின் நடமாட்டத்தை கண்காணிக்க டிரோன் கேமராக்கள் பயன்படுத்தப்பட உள்ளது. அதேபோல் நடைபாதையில் ஆங்காங்கே சிறுத்தைகளை பிடிக்க கூண்டுகள் வைக்கும் பணி தொடர்ந்து நடைபெறும் என தெரிவித்தார்.

    Next Story
    ×